யானைகளுக்கு தொந்தரவு; இரவு 10.00 முதல் மு.ப. 6.00 வரை இசை நிகழ்ச்சிக்கு தடை!!
ஹபரணை யானை வழித்தடத்திற்கு அருகில் இன்று (17) முதல் 20 ஆம் திகதி வரை இடம்பெறும் Deep Jungle Music and Cultural Festival எனும் பெயரில் இடம்பெறும் நிகழ்ச்சி தொடர்பில் பல்வேறு சூழல் ஆர்வலர்களால் இன்று (17) ஹிங்குரக்கொட நீதவான் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், பொலிஸ் மற்றும் வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களத்திற்கு பின்வரும் உத்தரவுகள் வழங்கப்பட்டுள்ளன.
அங்கு 2031/2007 ஆம் ஆண்டு பொலிஸ் மா அதிபர் சுற்றறிக்கையின் படியே மேற்படி Deep Jungle Music and Cultural Festival விழாவை நடத்த வேண்டும் எனவும், மேற்படி சுற்றறிக்கையின்படி நடத்தப்படுகிறதா என்பதை கண்காணிக்க, 20 பேர் கொண்ட பொலிஸ் குழு மற்றும் 10 பேர் கொண்ட வனஜீவராசிகள் அதிகாரி குழுவை நியமிக்குமாறும் பொலிஸாருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
அதே நேரத்தில், குறித்த நிகழ்வு நடைபெறும் எல்லையைத் தாண்டி அதனை நடத்தாதிருத்தல், ஒலிபெருக்கிகள் மற்றும் ஒலி எழுப்பிகள் பயன்படுத்தாமல், மேற்குறிப்பிட்ட விழாவை நடத்துதல் உள்ளிட்ட நிபந்தனைகளுடன் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இந்த பொலிஸ் சுற்றறிக்கையின்படி, பொலிஸ் கட்டளைச் சட்டத்தின் 80(1) பிரிவின் கீழ் இரவு 10.00 மணி முதல் மறுநாள் காலை 6.00 மணி வரை ஒலிபெருக்கிகள் அல்லது ஏனைய சாதனங்களை பயன்படுத்த முடியாது.
மேற்படி 2031/2007 பொலிஸ் மா அதிபர் சுற்றறிக்கையை மீறினால், சம்பந்தப்பட்ட ஒலி உபகரணங்களை உடனடியாக கைப்பற்றி, 2031/2007 சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளபடி நடவடிக்கை எடுக்கும் நிபந்தனையுடன் ஹபரணை பொலிஸாருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இவ்வழக்கில், மனுதாரர்கள் சார்பில் சட்டத்தரணி எஸ். எச். எம். ஹசன் ஹமீட் உடன் சட்டத்தரணி திருமதி நிஷானி உதேஷிகா ஆகியோர் ஆஜராகினர்.
RARE அமைப்பு, வனவிலங்குகள் மற்றும் இயற்கை பாதுகாப்பு ஒன்றியம் (WNPS) மற்றும் சூழல் நீதி மையம் (CEJ) அமைப்பு ஆகியன இவ்வழக்கை தாக்கல் செய்ய பங்களிப்பு செய்திருந்தன.
இந்த இசைக் கச்சேரி நிகழ்வினால் வன விலங்குகளுக்கும், சுற்றுச்சூழலுக்கும் ஏற்படக் கூடிய கேடு விளைவிக்கும் நிலைமையை தடுக்க, சூழல் தொடர்பில் அக்கறை கொண்ட பலர் தமது பங்களிப்பை வழங்கியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
“அதிரடி” இணையத்துக்காக தென்னிலங்கையில் இருந்து “எல்லாளன்”