;
Athirady Tamil News

பிரான்ஸ், பெல்ஜியம், நெதர்லாந்தில் கொளுத்தும் வெயில்.. ஒரே மாதத்தில் 3,700 பேர் உயிரிழப்பு – அதிர்ச்சி தகவல்

0

பாரிஸ்,

ஐரோப்பா முழுவதும் வெப்பநிலையை வெகுவாக உயர்த்திய ஜூன் மாத வெப்ப அலையின் காரணமாக, ​​பிரான்ஸ், நெதர்லாந்து மற்றும் பெல்ஜியம் ஆகிய நாடுகளில் 3,700 உயிரிழப்புகள் பதிவாகி உள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. மேலும் இந்த எண்ணிக்கை தற்காலிகமானது என்றும், இது மேலும் அதிகரிக்கக்கூடும் என்றும் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

காலநிலை மாற்றம்
சுமார் ஜூன் 20 முதல் 28 ம் தேதி வரை நீடித்த இந்த வெப்ப அலையே ஐரோப்பாவில் பதிவானவற்றிலேயே மிக மோசமானதாகக் கருதப்படுகிறது. இது மின் உற்பத்தியைப் பாதித்ததுடன், உள்கட்டமைப்புகளுக்கு சேதத்தை ஏற்படுத்தியதுடன், சுகாதார அமைப்புகளுக்கு கடும் நெருக்கடியையும் உருவாக்கியது. இந்த கொடூர வெப்பநிலைக்கு, காலநிலை மாற்றமே முக்கிய காரணமாக இருந்திருக்கக்கூடும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

பிரான்ஸ்
வெப்ப அலை வீசிய காலத்தில் பிரான்சில் 2,025 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதாகவும், குறிப்பாக 45 வயதுக்கு மேற்பட்டவர்களிடையே உயிரிழப்புகள் அதிகரித்துள்ளதாகவும் பிரான்சின் சுகாதார அமைச்சர் ஸ்டெபானி ரிஸ்ட் உள்ளூர் தொலைக்காட்சியிடம் தெரிவித்தார். ஜூன் 22 முதல் 28ம் தேதி வரையிலான காலத்தில், முந்தைய வாரத்துடன் ஒப்பிடுகையில் வீடுகளில் நிகழ்ந்த உயிரிழப்புகள் 91 சதவீதம் அதிகரித்துள்ளன.

அதேவேளையில் முதியோர் இல்லங்கள் மற்றும் சுகாதார நிலையங்களிலும் உயிரிழப்புகள் அதிகரித்துள்ளதாக அந்நாட்டின் பொது சுகாதார ஆணையம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் “உண்மையான உயிரிழப்பு எண்ணிக்கை, தற்போதுள்ள ஆரம்பகட்ட புள்ளிவிவரங்கள் காட்டுவதை விட அதிகமாக இருக்கும்” என்று அந்த ஆணையம் எச்சரித்துள்ளது.

முன்னெப்போதும் இல்லாத’ உயிரிழப்புகள்
பெல்ஜியம் நாட்டில் ஜூன் 18 முதல் ஜூன் 29ம் தேதி வரையிலான காலத்தில் சுமார் 1,200 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதாக அந்நாட்டின் சுகாதார அமைச்சகம் நேற்று தெரிவித்தது. இதில் 530 உயிரிழப்புகள் 85 வயது அல்லது அதற்கு மேற்பட்டவர்களுடையவை என்றும், 65 வயதுக்குட்பட்டவர்களிடையே 180 உயிரிழப்புகள் நிகழ்ந்துள்ளதாகவும் அமைச்சகம் மேலும் கூறியது.

நெதர்லாந்தில், இந்த வெப்ப அலையின் காரணமாக சுமார் 480 உயிரிழப்புகள் ஏற்பட்டதாகவும், அவற்றில் பெரும்பாலானவை 80 வயதுக்கு மேற்பட்டவர்களிடையே நிகழ்ந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.