சு.க நிபந்தனையற்ற ஒத்துழைப்பு வழங்கும் !!

பொருளாதார நெருக்கடியில் இருந்து மீண்டு, குடும்ப ஆட்சி இல்லாத மக்களாணைக்கு மதிப்பளிக்கும் ஓர் அரசியல் கட்டமைப்பை உருவாக்குவதற்கு ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி நிபந்தனையற்ற ஒத்துழைப்பு வழங்கும் என்று முன்னாள் ஜனாதிபதியும் கட்சியின் தலைவருமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
சர்வதேச நாணய நிதியம் தொடர்பில் ஜனாதிபதியின் விசேட உரை மீதான விவாதம் பாராளுமன்றத்தில் புதன்கிழமை (22) இடம்பெற்றது.
அதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்த அவர் மேலும் தெரிவித்ததாவது,
“பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண சகல அரசியல் கட்சிகளும் ஒன்றிணைந்து செயற்பட சர்வக்கட்சி அரசாங்கத்தை ஸ்தாபிக்க வேண்டும் என்ற யோசனையை ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி 2021 ஆம் ஆண்டு இறுதி பகுதியில் முன்வைத்தது.
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவும் சர்வக்கட்சி அரசாங்கத்தை ஸ்தாபிக்கும் பணிகளை உண்மை நோக்கத்துடன் முன்னெடுத்தார்,அதற்காக விசேட குழு ஒன்றை நியமித்தார்.
இவ்வாறான பின்னணியில் போராட்டத்தின் ஊடாக கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலகியதை தொடர்ந்து ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சர்வக்கட்சி அரசாங்கத்தை அமைக்கும் பணிகளை உண்மை நோக்கத்துடன் முன்னெடுத்தார்.
சர்வ கட்சி அரசாங்கத்தை அமைக்கும் தீர்மானத்துக்கு சகல எதிர்க்கட்சிகளும் ஒத்துழைப்பு வழங்கிய போதும் ஆளும் கட்சி தான் எதிர்க்கட்சிகளை ஒன்றிணைத்து சர்வக்கட்சி அரசாங்கத்தை அமைப்பதற்கு தடையாக இருந்தது, இறுதியில் சர்வக்கட்சி அரசாங்கம் அமைக்கப்படவில்லை.
சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பு கிடைக்கப் பெற்றுள்ளது, நல்லாட்சி அரசாங்கம் நிதியத்துடன் இணக்கமாக செயற்பட்டது. சர்வதேச நாணய நிதியம் முன்வைத்த நிபந்தனைகளை மறுபரிசீலனை செய்தோம்.
ஒருசில நிபந்தனைகளை அமுல்படுத்தினால் சமூக கட்டமைப்பில் பாதிப்பு ஏற்படும் என்பதை சர்வதேச நாணய நிதியத்திடம் வலியுறுத்தினோம், ஏற்றுக்கொள்ள முடியாத நிபந்தனைகளை இரத்துச் செய்தோம். சிறந்த நிபந்தனைகளுக்கு இணக்கம் தெரிவித்ததை தொடர்ந்து சர்வதேச நாணய நிதியம் எமக்கு ஒத்துழைப்பு வழங்கியது.
சர்வதேச நாணய நிதியம் முன்வைத்துள்ள 10 பிரதான நிபந்தனைகளை தாராளமாக நிறைவேற்றலாம், ஏப்ரல் மாதம் நடுப்பகுதிக்குள் கடன் மறுசீரமைப்பு தொடர்பில் முன்னேற்றகரமான திட்ட அறிக்கையை சமர்ப்பித்தல், ஐக்கிய நாடுகள் சபையினால் ஏற்றுக் கொள்ளப்பட்ட சமவாயங்களுக்கு அமைய ஊழல் ஒழிப்பு சட்டத்தை இயற்றல் உள்ளிட்ட 10 நிபந்தனைகள் பிரதானவையாக காணப்படுகிறது” என்றார்.