;
Athirady Tamil News

பாகிஸ்தானை விட இந்தியாவில் முஸ்லிம்கள் பாதுகாப்பாக இருக்கிறார்கள்- அமெரிக்காவில் நிர்மலா சீதாராமன் பேச்சு!!

0

இந்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் அமெரிக்காவில் நடைபெறும் சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கியின் கூட்டங்களில் கலந்து கொள்ளவும், ஜி.20 நிதி மந்திரிகள் மற்றும் மத்திய வங்கி கவர்னர்கள் கூட்டத்துக்கு தலைமை தாங்கவும் அங்கு சென்று இருக்கிறார். இதற்கிடையே வாஷிங்டனில் பீட்டர்சன் இன்ஸ்டிடியூட் பார் இன்டர்நேஷனல் எகனாமிக்சில் நடந்த நிகழ்ச்சியில் நிர்மலா சீதாராமன் பங்கேற்று பேசினார். அப்போது அவர் கூறும்போது, இந்தியாவுக்கு முதலீட்டாளர்கள் வந்து கொண்டிருக்கிறார்கள்.

முதலீடுகளை பெறுவதில் ஆர்வமுள்ள ஒருவர் என்ற முறையில், களத்தில் கால் கூட வைக்காத நபர்களால் உருவாக்கப்படும் கருத்துக்களை கேட்பதை விட இந்தியாவில் என்ன நடக்கிறது என்பதை பார்க்க வாருங்கள் என்று கூறுவேன். இந்தியாவில் 2-வது பெரிய முஸ்லிம் மக்கள் தொகை உள்ளது. சிறுபான்மையினரை பாதுகாப்பதாக உறுதியளித்து இஸ்லாமிய நாடாக தன்னை பிரகடனப்படுத்திய போதிலும் பாகிஸ்தானில் உள்ள ஒவ்வொரு சிறுபான்மை குழுவும் எண்ணிக்கையில் குறைந்துவிட்டன. சில முஸ்லிம் பிரிவுகள் கூட அழிக்கப்பட்டுள்ளன. முகாஜிர்கள், ஷியாக்கள் உள்ளிட்ட குழுவிற்கு எதிராக வன்முறை நிலவுகிறது. இந்தியாவில் ஒவ்வொரு முஸ்லிம்களும் தங்கள் வியாபாரத்தை செய்கிறார்கள்.

அவர்களின் குழந்தைகள் படிக்கிறார்கள். பாகிஸ்தானில் வாழும் முஸ்லிம்களை விட இந்தியாவில் உள்ள முஸ்லிம்கள் சிறப்பாக, பாதுகாப்பாக இருக்கிறார்கள். உலக வர்த்தக அமைப்பு இன்னும் முற்போக்கு தனமாக இருக்க வேண்டும். எல்லா நாடுகளின் பேச்சை கேட்டு நியாயமாக இருக்க வேண்டும். இந்தியா, திறன் மற்றும் டிஜிட்டல் மயமாக்கல் ஆகியவற்றில் கவனம் செலுத்த போகிறது. இதனால் எளிதாக வாழ்வது, வெளிப்படைத்தன்மை மற்றும் பொருளாதாரத்தை முறைப்படுத்துதல் ஆகியவை ஏற்படும்.

ஏழை மக்களை குறைந்தபட்சம் அடிப்படை வசதிகளுடன் மேம்படுத்துவதே அரசாங்கத்தின் அணுகுமுறை ஆகும். இந்தியாவில் அடிப்படை வசதிகளை வழங்குவதில் நாங்கள் நிறைவை அடைந்து இருக்கிறோம். அவர்கள் குடியிருக்க நல்ல வீடுகள், கழிப்பறைகள், குடிநீர் குழாய்கள், மின்சாரம், நல்ல சாலை, போக்குவரத்து வசதி கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. நிதி சேர்க்கை மூலம் குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவருக்கும் வங்கி கணக்கு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.