;
Athirady Tamil News

சூடானில் உள்நாட்டு போர்- இந்தியர்கள் உள்பட 150 பேரை சவூதி அரேபியா மீட்டது!!

0

வடகிழக்கு ஆப்பிரிக்க நாடான சூடானில் ராணுவ ஆட்சி நடந்து வரும் நிலையில் அங்கு உள்நாட்டு போர் ஏற்பட்டுள்ளது. அங்கு ராணுவத்துக்கும் துணை ராணுவத்துக்கும் இடையே மோதல் ஏற்பட்டு பெரும் கலவரம் மூண்டு உள்ளது. சாலைகளில் துப்பாக்கி சண்டை, குண்டு வீச்சு காரணமாக மக்கள் பீதியில் உள்ளனர். ராணுவம்-துணை ராணுவம் இடையே மோதலில் அப்பாவி மக்கள் உள்பட 413 பேர் பலியாகி இருக்கிறார்கள். 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ள சூடானில் இந்தியா, அமெரிக்கா உள்பட பல்வேறு நாடுகளை சேர்ந்தவர்கள் சிக்கி உள்ளனர். அவர்களை மீட்டு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஆனால் சூடான் தலைநகர் கார்டூமில் உள்ள சர்வதேச விமான நிலையம் கடுமையாக சேதமடைந்து உள்ளது. இதனால் அங்கிருந்து விமானங்களை இயக்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே சூடானில் உள்ள அமெரிக்க தூதரக அதிகாரிகளை மீட்டு கொண்டு வர, ராணுவ துடுப்புகளை அனுப்ப அதிபர் ஜோபைடன் உத்தர விட்டார். அதன்படி சூடானுக்கு சென்ற அமெரிக்க ராணுவத்தினர் அங்கிருந்து அமெரிக்க தூதரக அதிகாரிகள், அவர்களது குடும்பத்தினரை பத்திரமாக மீட்டு அழைத்து சென்றனர்.

தலைநகர் கார்டூமில் இருந்து விமானம் மூலம் அமெரிக்க தூதரக அதிகாரிகளை வெளியேற்றிய ராணுவம் பாதுகாப்பான இடத்துக்கு அழைத்து சென்றது. சுமார் 70 பேர் வரை மீட்கப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால் எத்தனை பேர் மீட்கப்பட்டனர் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடவில்லை. அதேபோல் அவர்கள் எங்கு அழைத்து செல்லப்பட்டனர் என்ற தகவலும் தெரிவிக்கவில்லை. இதுகுறித்து அமெரிக்க அதிகாரிகள் கூறும்போது, கார்டூமிலில் இருந்து தூதரக ஊழியர்களை விமானம் மூலம் வெளியேற்றும் அமரிக்க ராணுவம் சூடான் வான்வெளியில் இருந்து பாதுகாப்பாக வெளியேறியது என்றனர்.

இதற்கிடையே சூடானில் இருந்து தூதரக அதிகாரிகளை வெளியேற்றும் பணி நிறைவடைந்து உள்ளதாக அமெரிக்க அதிபர் ஜோபைடன் தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் கூறும்போது, எனது உத்தரவின் பேரில் சூடானில் இருந்து அமெரிக்க தூதரக அதிகாரிகள் வெளியேற்றும் பணியை ராணுவம் மேற் கொண்டது. அப்பணியை ராணுவம் வெற்றிகரமாக முடித்து விட்டது. அவர்களுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். இப்பணிக்கு உதவிய ஜிபூட்டி, எத்தியோப்பியா, சவூதி அரேபியாவுக்கும் நன்றி தெரிவிக்கிறேன். சூடானில் நடந்த இந்த துயரமான வன்முறை ஏற்கனவே நூற்றுக்கணக்கான அப்பாவி பொதுமக்களின் உயிர்களை பலி கொண்டு உள்ளது. இது மனசாட்சியற்றது. இச்சண்டை நிறுத்தப்பட வேண்டும் என்றார்.

சூடானில் உள்ள அமெரிக்கர்களை ஒருங்கிணைந்து வெளியேற்றும் திட்டம் தற்போது ஏதும் இல்லை என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது. இந்த நிலையில் இந்தியர்கள் உள்பட 150 பேரை சவூதி அரேபியா மீட்டு சூடானில் இருந்து பாதுகாப்பாக வெளியேற்றியது. சூடானில் முக்கிய துறைமுகமாக போர்ட் சூடானில் இருந்து கப்பல் மூலம் சவூதி அரேபியாவை சேர்ந்தவர்கள், 91 வெளிநாட்டினர் என சுமார் 150 பேரை ஜெட்டாவுக்கு அழைத்து வரப்பட்டனர்.

இதில் சவூதி தூதரக அதிகாரிகள் விமான ஊழியர்கள், இந்தியா, பாகிஸ்தான், எகிப்து, கனடா, வங்காளதேசம் பிலிப்பைன்ஸ், குவைத், கத்தார், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், புர்கினா பாசோ ஆகிய நாட்டை சேர்ந்தவர்கள் அடங்குவர். அவர்கள் சவூதி அரேபியா ராணுவ அதிகாரிகளை பூங்கொத்து சாக்லேட் கொடுத்து வரவேற்றனர். சூடானில் இருந்து இந்தியர்களை வெளியேற்றுவது குறித்து இந்திய வெளியுறவு மந்திரி ஜெங்சங்கர் சவூதி அரேபிய மந்திரியுடன் பேசி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.