பாகிஸ்தானில் காவல் துறை வாகனத்தின் மீது துப்பாக்கிச் சூடு! 5 பேர் பலி!
பாகிஸ்தானில், காவல் துறையினரின் வாகனத்தின் மீது மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 5 காவலர்கள் கொல்லப்பட்டனர்.
கைபர் பக்துன்குவா மாகாணத்தின், கராக் மாவட்டத்தில் அமைந்துள்ள தனியார் எரிசக்தி நிறுவனத்திற்கான பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவல் துறையினரின் வாகனத்தின் மீது அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.
இந்தத் தாக்குதலில், 5 காவலர்கள் கொல்லப்பட்டதுடன், அவர்களின் வாகனத்தின் மீது அந்த மர்ம நபர்கள் தீயிட்டுச் சென்றததாகவும், பாகிஸ்தான் அதிகாரிகள் இன்று (டிச. 23) தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில், காவல் துறையினர் மீதான இந்தத் தாக்குதலுக்கு பாகிஸ்தானைச் சேர்ந்த எந்தவொரு பயங்கரவாத அமைப்பும் இதுவரை பொறுப்பேற்கவில்லை எனக் கூறப்படுகிறது.
முன்னதாக, பலூசிஸ்தான் மற்றும் கைபர் பக்துன்குவா போன்ற மாகாணங்களில் பாதுகாப்புப் படையினர் மீதான பயங்கரவாதிகளின் தாக்குதல்கள் சமீபகாலமாக அதிகரித்து வருகின்றன.
கடந்த டிச.3 ஆம் தேதி டெரா இஸ்மாயில் பகுதியில் காவல் துறை வாகனத்தின் மீது நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில் 3 காவலர்கள் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.