;
Athirady Tamil News

எரிசக்தி மற்றும் உணவு பாதுகாப்பை உறுதிப்படுத்த இணைந்து செயல்படத் தயார் – பனாமாவில் ஜெய்சங்கர் பேச்சு!!

0

எரிசக்தி மற்றும் உணவு பாதுகாப்பு ஆகியவை தெற்குலகம் சந்திக்கும் இரு பெரும் சவால்கள் என்று தெரிவித்த வெளியுறவு அமைச்சர் எஸ் ஜெய்சங்கர், இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண மற்ற நாடுகளுடன் இணைந்து இந்தியா செயல்படும் என்று தெரிவித்தார்.

மத்திய அமெரிக்க நாடான பனாமா சென்ற எஸ் ஜெய்சங்கர், தலைநகர் பனாமா சிட்டியில் நடைபெற்ற 4வது இந்தியா-மத்திய அமெரிக்க ஒருங்கிணைப்பு அமைப்பு (SICA) அமைச்சர்கள் மாநாட்டில் பங்கேற்றார். அப்போது பேசிய அவர், ”இந்தியாவுடன் SICA கொண்டிருக்கும் உறவு வலுவானது. அதன் காரணமாகவே, பல்வேறு சர்வதேச மன்றங்களில் இந்தியாவை SICA ஆதரித்துள்ளது. இதற்காக, SICA-க்கு நன்றி.

எரிசக்தி மற்றும் உணவு பாதுகாப்பு ஆகியவை தெற்குலகம் சந்திக்கும் இரு பெரும் சவால்கள். இந்த இரு பெரும் சவால்களைத் தாண்டி, வளர்ச்சி காண வேண்டிய தேவை உள்ளது. அதற்கு, வர்த்தகமும், முதலீடுகளும், வேலைவாய்ப்பும் பெருக வேண்டும். வறுமை ஒழியவேண்டும். இதற்கு இந்தியா முக்கிய பங்காற்றும். இத்தகைய சவால்களை தெற்குலகம் எதிர்கொள்ள இந்தியா கூடுதல் பங்காற்றும்.

சிறு தானிய உற்பத்தி உணவு பாதுகாப்புக்கு மிகப் பெரிய தீர்வை அளிக்கும். சிறு தானியங்கள் உணவு பாதுகாப்பை மட்டும் அளிக்கவில்லை. அது ஊட்டச்சாத்தான உணவை அளிக்கக்கூடியவை. எனவே, சிறு தானிய உற்பத்தியை அதிகரிக்கச் செய்வதன் மூலம் உணவுப் பாதுகாப்பு சவாலுக்கு நாம் தீர்வு காண முடியும். சிறு தானியங்கள் பல நூறு ஆண்டுகளாக இந்திய மக்களின் உணவுப் பொருளாக இருந்து வருகின்றன.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான புதிய இந்தியா, டிஜிட்டல் முறையில் சேவை அளிக்கக்கூடிய நாடு. இந்தியாவில் தொழில் நிறுவனங்கள் மிகப் பெரிய எண்ணிக்கையில் அதிகரித்து வருகின்றன. உலகின் மருந்துப் பொருள் உற்பத்தியாளராக இந்தியா விளங்குகிறது. உற்பத்தித் துறையில் இந்தியா மிகப் பெரிய பங்கு தாரராக உள்ளது. அதேபோல், பருவநிலை மாற்றம், அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சி ஆகியவற்றிலும் இந்தியா முன்னிலை வகிக்கிறது.

இந்த 2023, இந்தியாவுக்கு சிறப்பு வாய்ந்த ஆண்டு. ஏனெனில், ஜி20 கூட்டமைப்பின் தலைமையை தற்போது இந்தியா வகித்து வருகிறது. உலகம் கிழக்கு – மேற்கு என வலிமையான முறையில் பிரிந்துள்ளது. அதனை வடக்கு – தெற்கு என மாற்றுவதற்கான முயற்சியை இந்தியா ஆழமாக முன்னெடுத்து வருகிறது. இந்த ஆண்டுக்கான ஜி20 இலட்சிணையாக, ஒரு பூமி; ஒரு குடும்பம்; ஒரே எதிர்காலம் என்பதாக இந்தியா வடிவமைத்துள்ளது. மத்திய அமெரிக்க நாடுகளுடனான உறவை மேம்படுத்துவதிலும் இந்தியா இதே கொள்கையைக் கொண்டிருக்கிறது. பசுமை, டிஜிட்டல், சுகாதாரம், பாலின சமத்துவம் ஆகியவற்றில் மத்திய அமெரிக்க நாடுகளுடன் இணைந்து பணியாற்ற இந்தியா தயாராக இருக்கிறது” என தெரிவித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.