;
Athirady Tamil News

உ.பி.யில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் 4 நாளில் 57 நோயாளிகள் பலி: பின்னணி என்ன? !!

0

உத்தரபிரதேச மாநிலம், பல்லியா நகரில் மாவட்ட தலைமை அரசு ஆஸ்பத்திரி செயல்பட்டு வருகிறது. இந்த ஆஸ்பத்திரியில் கடந்த 15-ந் தேதி தொடங்கி 17-ந் தேதி வரையில், ஏறத்தாழ 400 நோயாளிகள் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர் இந்த நிலையில் 4 நாளில் மட்டுமே 57 நோயாளிகள், அதுவும் 60 வயது கடந்த முதியோர் அடுத்தடுத்து உயிரிழந்து இருப்பது, அங்கு பேசு பொருளாகி பதற்றத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்த சாவுகள், அங்கு வெப்ப அலைகள் நிலவுகிற நிலையில் நேரிட்டிருக்கின்றன. இதில் தலைமை மருத்துவ சூப்பிரண்டு டாக்டர் திவாகர் சிங், அசம்காருக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

உயிரிழப்புகள் பற்றி முதன்மை மருத்துவ அதிகாரி டாக்டர் ஜெயந்த் குமார் கூறும்போது, “ஆஸ்பத்திரியின் பதிவேடுகள்படி மூன்று நாளில் மட்டும் 54 பேர் இறந்துள்ளனர். அவர்களில் 40 சதவீதத்தினருக்கு காய்ச்சல் இருந்துள்ளது. 60 சதவீதத்தினர் மற்ற நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள். 2 பேர் மட்டுமே வெப்ப அலை தாக்குதலால் இறந்துள்ளனர்” என தெரிவித்தார். இதேபோன்று அந்த ஆஸ்பத்திரியின் தலைமை மருத்துவ சூப்பிரண்டு (பொறுப்பு) டாக்டர் எஸ்.கே.யாதவ் கூறுகையில், ” இந்த ஆஸ்பத்திரியில் தினமும் 125 முதல் 135 நோயாளிகள், உள்நோயாளிகளாக சேர்க்கப்படுகின்றனர். எனவே இந்த ஆஸ்பத்திரி நெருக்கடிக்கு ஆளாகி உள்ளது. 15-ந் தேதி மட்டுமே 154 நோயாளிகள் சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களில் 23 பேர் வெவ்வேறு காரணங்களால் இறந்துள்ளனர். 16-ந் தேதி 20 பேர் இறந்திருக்கிறார்கள்.

அதற்கு அடுத்த நாளில் 11 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். அனைவரும் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் ஆவார்கள்” என்றார். பிரச்சினைக்குரிய ஆஸ்பத்திரியில் ஆய்வு செய்வதற்காக லக்னோவில் இருந்து சுகாதாரத்துறை குழு அனுப்பி வைக்கப்படுவதாகவும், அவர்கள் சோதனை நடத்திய பின்னர்தான் நிகழ்ந்துள்ள இறப்புகளுக்கான காரணத்தை உறுதியாகக்கூற முடியும் என அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன. இதற்கிடையே பல்லியா மாவட்ட அரசு தலைமை ஆஸ்பத்திரியில் நோயாளிகள் சிரமப்படாத அளவில் ஏர் கூலர்கள் மற்றும் ஏ.சி. வசதி செய்து தரப்பட்டுள்ளதாகவும், இது தவிர 15 படுக்கைகள் புதிதாக போடப்பட்டுள்ளதாகவும் மாவட்ட கலெக்டர் ரவீந்திர குமார் தெரிவித்தார்.

இந்த விவகாரம் தொடர்பாக சுகாதார துறைக்கு பொறுப்பேற்றுள்ள துணை முதல்-மந்திரி பிரஜேஷ் பதக் கூறியதாவது:- வெப்ப அலை தாக்குதல் பற்றி தெரியாமல், இறப்புகள் குறித்து தவறான குறிப்புகளை எழுதியதற்காகத்தான் தலைமை மருத்துவ சூப்பிரண்டு மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு நோயாளியையும் கண்டறிந்து சரியான சிகிச்சை அளிக்க வேண்டும் என்று அனைத்து தலைமை மருத்துவ அதிகாரிகளுக்கும், தலைமை மருத்துவ சூப்பிரண்டுகளுக்கும் உததரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.