;
Athirady Tamil News

இந்தியாவுக்கு எதிராக சிக்கிம் மன்னரை திருப்பிய மகாராணி – இந்திராகாந்தி கொடுத்த ‘அதிர்ச்சி’ வைத்தியம்!!

0

கடந்த 1959ஆம் ஆண்டின் கோடைக்காலம். அது ஒரு மாலைப்பொழுது. சிக்கிம் பட்டத்து இளவரசர் தோண்டுப்புக்கு சொந்தமான மெர்ஸிடிஸ் கார் டார்ஜிலிங்கில் உள்ள விண்டமேர் ஹோட்டலுக்கு வெளியே நின்றது. அந்த ஹோட்டலின் காத்திருப்பு அறைக்குச் சென்ற அவர் தனக்குப் பிடித்த பானத்தை ஆர்டர் செய்தார்.

அப்போது அவரது கண்கள் அந்த அறையின் மூலையில் அமர்ந்திருந்த ஓர் இளம்பெண் மீது விழுந்தது. அவர் ஓர் அமெரிக்க மாணவி என்றும் விடுமுறைக்காக இந்தியா வந்திருப்பதாகவும், விண்டமேர் ஹோட்டலில் சில நாட்கள் தங்கியிருப்பதாகவும் தன் நண்பர்கள் மூலம் அவர் தெரிந்துகொண்டார்.

அந்தப் பெண்ணின் பெயர் ஹோப் குக். இளவரசர் ஹோப் குக்கை சந்தித்தார். சந்தித்தவுடனேயே இருவருக்கும் இடையே ஓர் ஈர்ப்பு ஏற்பட்டது.

இளவரசரின் 36 வயதான மனைவி காலமாகிவிட்டார். அவருக்கு மூன்று குழந்தைகள் இருந்தனர். கூச்ச சுபாவம் கொண்ட அவர் சிறிதே திக்கிப் பேசுவார். அந்த நேரத்தில் ஹோப் குக்கிற்கு 19 வயதுதான். இந்த சந்திப்புக்குப் பிறகு இளவரசரும், ஹோப் குக்கும் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு சந்திக்கவில்லை.

திருமண விருப்பத்தை தெரிவித்த இளவரசர்

பிறகு, 1961இல் ஹோப் குக் மீண்டும் ஒருமுறை இந்தியா வந்து டார்ஜிலிங்கின் விண்டமேர் ஹோட்டலில் தங்கினார்.

“நான் விண்டமேர் ஹோட்டலில் தங்கியிருந்ததை இளவரசர் எப்படி அறிந்தார் என்று எனக்குத் தெரியவில்லை. இந்த முறை அவர் பார்லருக்குள் நுழைந்தபோது நான் தனியாக தேநீர் அருந்திக்கொண்டிருந்தேன்,” என்று தனது சுயசரிதையான `டைம் சேஞ்ச்`இல் ஹோப் குக் நினைவு கூர்ந்தார்.

“அவர் கூர்க்கா படைப்பிரிவில் கெளரவ அதிகாரியாக இருந்தார். ஒரு ராணுவ விழாவில் கலந்து கொள்வதற்காக காங்டாக்கில் இருந்து வந்திருந்தார். மாலையில் ஜிம்கானா கிளப்பில் தன்னுடன் நடனமாட என்னை அழைத்தார். அன்று இரவு அவர் மிகவும் நல்ல மனநிலையில் இருந்தார் `ஒரு நாள் நாம் இருவரும் வியன்னாவில் சுற்றித் திரிவோம்` என்று என்னிடம் கிசுகிசுத்தார்.”

அதே இரவில் நடனத்தின்போது இளவரசர், `தன்னை திருமணம் செய்துகொள்வது பற்றிச் சிந்திக்க முடியுமா` என்று ஹோப்பிடம் கேட்டார்.

அமெரிக்காவை சேர்ந்த ஹோப் குக்கிற்கு அப்போது 21 வயதுகூட ஆகியிருக்கவில்லை. இளவரசரின் முன்மொழிவை அவர் ஏற்றுக்கொண்டார். சில நாட்களில் தோண்டுப், ஹோப் குக்கை காங்டாக்கிற்கு அழைத்துச் சென்றார். அரண்மனையைப் பார்த்ததும் குக் மிகவும் மகிழ்ச்சி அடைந்தார்.

ஹோப் குக் சம்மதம் தெரிவித்ததைத் தொடர்ந்து, 1963இல் சிக்கிமின் பட்டத்து இளவரசரை ஹோப் திருமணம் செய்துகொண்டபோது, அமெரிக்கப் பத்திரிகைகள் அவரைப் பற்றி விரிவாக செய்தி வெளியிட்டன.

மொனாக்கோவின் இளவரசர் மூன்றாவது ரெய்னியரை மணந்த ஹாலிவுட் நடிகை கிரேஸ் கெல்லியுடன் அவர் ஒப்பிடப்பட்டார்.

டைம்ஸ் பத்திரிகை, 1969ஆம் ஆண்டில், ‘சிக்கிம்: எ குயின் ரீவிசிட்டெட்’ என்ற தலைப்பில் ஒரு கட்டுரையை வெளியிட்டது.

“ஹோப் காலை 8 மணிக்கு எழுவார். அதன் பிறகு வெளிநாட்டில் இருந்து வரவழைக்கப்படும் செய்தித்தாள்கள் மற்றும் பத்திரிகைகளை படிப்பார். அடுத்த நான்கு மணிநேரங்களை கடிதம் எழுதுவதிலும், உணவு மெனுக்களை தயாரிப்பதிலும், 15 அரண்மனை ஊழியர்களுக்கு பணிகளை ஒதுக்குவதிலும் செலவிடுவார்.

அவரது மாலை நேரம் டென்னிஸ் விளையாடுவதிலும், பார்ட்டிகளுக்கு செல்வதிலும் கழியும். இரவு உணவிற்கு முன் ஸ்காட்ச் மற்றும் சோடா வாட்டரை பருகுவார். காங்டாக்கில் எல்லா இடங்களுக்கும் தனது மெர்ஸிடிஸ் காரில் பயணம் செய்வார். ஆனால் வெளிநாடுகளுக்குச் செல்லும்போது எக்கானமி வகுப்பில் பயணம் செய்வதை விரும்புவார்,” என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

சோக்யால் மற்றும் ஹோப் திருமணம் செய்துகொண்டதிலிருந்து மேற்குலகில் குறிப்பாக அமெரிக்காவின் சமூக மற்றும் அரசியல் வட்டாரங்களிலும், பத்திரிகைகளிலும் அவர்களைப் பற்றி நிறையவே பேசப்பட்டன. சுதந்திர சிக்கிமின் ராணியாக ஆகப் போவது போல் ஹோப்பும் நடந்துகொள்ள ஆரம்பித்தார்.

“ஜாக்குலின் கென்னடியின் பாணியில் ஹோப் முணுமுணுத்தவாறு பேசத் தொடங்கியுள்ளார். அவர் ‘நான்’ என்பதற்குப் பதிலாக ‘நாங்கள்’ என்ற வார்த்தையைப் பயன்படுத்துகிறார். மகாராணிகள் எப்படி நடத்தப்படுவார்களோ அதேபோல தானும் நடத்தப்படவேண்டும் என்று எதிர்பார்த்தார்,” என்று நியூஸ் வீக்கின் 1973 ஜூலை 2ஆம் தேதி இதழில் வெளியான அவரைப் பற்றிய கட்டுரை தெரிவிக்கிறது.

ஹோப் குக்கை சந்திக்கும் வெளிநாட்டு விருந்தினர்களின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியது. இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் கென்னத் கீட்டிங் மற்றும் அமெரிக்க காங்கிரஸின் செனட்டர் சார்லஸ் பெர்சி ஆகியோர் அவரைச் சந்திப்பதற்காக காங்டாக் வந்தனர்.

“வெளிநாட்டவர்களுடனான ஹோப்பின் சந்திப்புகள் காரணமாக, சிக்கிமின் சுதந்திரத்துக்கு இடையூறாக இந்தியா உள்ளது என்று மேற்கத்திய நாடுகளில் பிரசாரம் தொடங்கியது.

இந்தியாவுக்கு 1950 ஒப்பந்தத்தை மாற்ற அழுத்தம் கொடுக்கப்பட்டதன் பின்னணியில் சோக்யால் இருந்தார் என்பதை இங்கே குறிப்பிடுவது முக்கியம். ஆனால் அதை ஒரு சர்வதேச பிரச்னையாக மாற்ற அவரது மனைவி ஹோப் குக் அவருக்கு உதவினார்,” என்று ரா அமைப்பின் சிறப்புச் செயலராக இருந்த ஜி.பி.எஸ்.சித்து, ‘சிக்கிம் டான் ஆஃப் டெமாக்ரசி’ என்ற புத்தகத்தில் எழுதுகிறார்.

“1960களில் என் முன்னிலையில் இந்தியாவை கேலி செய்யும் வாய்ப்பை ஹோப் குக் ஒருபோதும் தவறவிட்டதில்லை,” என்று அந்த நேரத்தில் டெல்லியில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் பணிபுரிந்த அமெரிக்க வெளியுறவுத்துறை அதிகாரி வில்லியம் பிரவுன் நினைவு கூர்ந்தார்.

ஹோப் குக், 1966ஆம் ஆண்டில் நாம்யால் இன்ஸ்டிடியூட்டின் இதழில் ‘சிக்கிமீஸ் தியரி ஆஃப் லேண்ட்ஹோல்டிங் அண்ட் தி டார்ஜிலிங் கிராண்ட்’ என்ற தலைப்பில் ஒரு கட்டுரையை எழுதினார்.

இந்தக் கட்டுரையில், 1835இல் பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனிக்கு டார்ஜிலிங் வழங்கப்பட்டதன் சட்டபூர்வ செல்லுபடியாக்கம் குறித்து அவர் கேள்வி எழுப்பினார்.

டார்ஜிலிங் கிழக்கிந்திய கம்பெனியிடம் குத்தகையாக மட்டுமே ஒப்படைக்கப்பட்டது என்பது அவரது வாதம். டார்ஜிலிங், சிக்கிம் அரச குடும்பத்தைச் சேர்ந்தது என்பதால் அது சிக்கிமுக்கே திருப்பி அளிக்கப்பட வேண்டும் என்று அவர் எழுதினார். இந்தக் கட்டுரை ஒரு அரசியல் வெடிகுண்டாக மாறியது.

இந்த நிறுவனம் சிஐஏ உடன் மறைமுகமாகத் தொடர்புடையது என்பதாலும் அனைவரின் கவனமும் கட்டுரையின் மீது சென்றது. கென் கான்பாய் தனது ‘தி சிஐஏ இன் திபெத் (The CIA in Tibet)’ என்ற புத்தகத்தில், “திபெத் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த சிஐஏ ஏஜெண்டுகள் இந்த நிறுவனத்தில் ஆங்கிலப் பாடம் எடுத்தார்கள்” என்று எழுதுகிறார்.

இந்தப் பின்னணியில் ஹோப் குக்கின் கட்டுரை வெளியீடு, இமயமலை பிரதேசத்தில் சிஐஏவின் திட்டமாகப் பார்க்கப்பட்டது.

“அந்தக் கட்டுரை ஒரு விவாதத்தைத் தூண்டும் நோக்கத்தை மட்டுமே கொண்டது என்று ஹோப் குக் பின்னர் தனது சுயசரிதையில் தெளிவுபடுத்தியிருந்தாலும், அது எதிர்விளைவை ஏற்படுத்தியது.

டார்ஜிலிங் மீதான இந்தியாவின் உரிமைகோரல் பற்றி அவர் கேள்வி எழுப்பியதாக இந்திய ஊடகங்கள் கருதின. சில நாட்களில் ‘சிஐஏ ஏஜெண்ட்டின் சிறகுகள் விரிகின்றன’ மற்றும் ‘காங்டாக்கில் ட்ரோஜன் குதிரையின் இருப்பு’ போன்ற தலைப்புச் செய்திகளை இந்திய நாளேடுகள் வெளியிட்டன,” என்று ஆண்ட்ரூ டஃப் தனது ‘சிக்கிம் ரெக்வியம் ஃபார் எ ஹிமாலயன் கிங்டம்’ என்ற புத்தகத்தில் எழுதியுள்ளார்.

சில நாட்களில் ஹோப் குக் எழுதிய கட்டுரை இந்திரா காந்தியின் மேசைக்குச் சென்றது. இந்தக் கட்டுரை இந்திராவுக்கு எச்சரிக்கை மணியாக இருந்தது.

“இந்திய நாடாளுமன்றத்தில் இந்தப் பிரச்னை எழுப்பப்பட்டபோது, ‘டார்ஜிலிங் மீதான சிக்கிமின் உரிமை கோரல் பொறுப்பான தலைமையிடமிருந்து வரவில்லை` என்று இந்திரா காந்தி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு உறுதியளித்தார்.

`பொறுப்பற்ற` என்ற வார்த்தையின் வாயிலாக, ஹோப்பின் முட்டாள்தனமான அறிக்கை பற்றி காங்டாக்கிற்கு ஒரு தெளிவான செய்தியை அனுப்ப இந்திரா காந்தி விரும்பினார்,” என்று சுனந்தா தத்தா ரே தனது ‘ஸ்மாஷ் அண்ட் கிராப்’ புத்தகத்தில் எழுதுகிறார்.

“சோக்யால்கூட தனது மனைவியின் நிலைப்பாட்டில் இருந்து விலகி, ‘நாம்யால் நிறுவனம் மற்றும் அதன் இதழின் உதவியின்றி என் நாட்டையும், மக்களின் உரிமைகள் மற்றும் நல்வாழ்வையும் பாதுகாக்கும் திறன் என் அரசுக்கு இருக்கிறது` என்று அறிவித்தார்.

செயல் உத்திரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நாட்டின் மன்னர், டார்ஜிலிங் ஹோட்டலில் ஓர் அமெரிக்கப் பெண்ணின் காதல் வலையில் மயங்கிக் கிடக்கும்போது, சிஐஏ அமைப்பு அந்த வாய்ப்பை எப்படித் தவற விட்டிருக்கும் என்று இந்தியாவின் பல வட்டாரங்களில் கேள்வி எழுப்பப்பட்டது.

ஆனால் ஹோப் குக் ஒரு சிஐஏ ஏஜெண்ட் என்பதையும் அவர் அமெரிக்க நலன்களைப் பாதுகாக்க ஏஜென்சியால் காங்டாக்கில் வைக்கப்பட்டார் என்பதையும் இந்திய உளவுத்துறை வட்டாரங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை.

“சிஐஏ உண்மையில் சிக்கிமின் சுதந்திரத்திற்காகப் பணியாற்ற விரும்பியிருந்தால் இந்த நடவடிக்கையை இன்னும் சிறப்பாக அது திட்டமிட்டிருக்கும். உண்மையாகவே அப்படி இருந்திருந்தால் ஹோப், தெற்கு மற்றும் மேற்கு சிக்கிமில் தனது இருப்பைப் பதிவு செய்திருப்பார்,” என்று ராவின் முன்னாள் சிறப்புச் செயலர் ஜிபிஎஸ் சித்து எழுதுகிறார்.

நேபாள வம்சாவளியைச் சேர்ந்த புறக்கணிக்கப்பட்ட மக்களுக்காக மருத்துவமனைகள், பள்ளிகள் போன்றவற்றைத் திறப்பதன் மூலம் சோக்யாலுக்கு அவர்களின் ஆதரவை பெற்றுத்தர முயன்றிருப்பார்.

இரண்டாவதாக, நிர்வாகத்தின் மீதான தனது இறுக்கமான பிடியைத் தளர்த்தி, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளுடன் சில அதிகாரங்களைப் பகிர்ந்து கொள்ளவும் சோக்யாலுக்கு அவர் அறிவுறுத்தியிருப்பார். மாறாக அவர் சோக்யாலை தனது சொந்த மக்களிடமிருந்து குறிப்பாக நேபாளி வம்சாவளியினரிடமிருந்து விலகச் செய்தார்.

ஹோப் ஒரு திபெத்திய ராணியைப் போலவே நடந்து கொண்டார். அவர்களைப் போலவே சமூக பழக்க வழக்கங்களை ஏற்றுக்கொண்டார். அவர்களைப் போன்ற ஆடைகளை அணிய ஆரம்பித்தார்.

“அவர் ஒரு சிஐஏ ஏஜெண்ட் என்று ஒரு கணம் ஏற்றுக்கொண்டாலும், அவரது உதவியாளர்கள் திறமை இல்லாதவர்களாக இருந்தனர். உண்மை நிலை பற்றி அவர்களுக்குத் தெரியவில்லை.

சோக்யாலிடமிருந்து கூடுதல் தகவல் எதுவும் சிஐஏவுக்கு தேவையில்லை. ஏனெனில் சோக்யால் மற்றும் அவரது உளவுத்துறை தலைவர் கர்மா டாப்டென் பற்றி கல்கத்தாவில் உள்ள சிஐஏ அதிகாரிகளுக்குத் தகவல் இருந்தது,” என்று சித்து மேலும் எழுதியுள்ளார்.

“பட்டத்து இளவரசராக சோக்யால் ஐம்பதுகளில் திபெத்துக்கு இரண்டு முறை பயணம் மேற்கொண்டார். இரண்டு முறையும் அவர் திரும்பி வந்தபிறகு கல்கத்தா துணைத் தூதரகத்தில் பணியமர்த்தப்பட்ட சிஐஏ அதிகாரிகளால் அவர் முழுமையாக விசாரிக்கப்பட்டார். அவர் கல்கத்தாவுக்குச் செல்லும் போதெல்லாம் அமெரிக்கத் தூதரகம் இருந்த இடத்தில் அவர் தங்கினார்.”

“இந்தச் சூழ்நிலையில் சிஐஏ மற்றும் எம்.ஐ.6-இன் உளவாளிகள் அவருடன் தொடர்ந்து தொடர்பில் இருந்திருக்கலாம். சிஐஏ போன்ற தொழில்நுட்பத் திறன் கொண்ட நிறுவனத்திற்கு உலகின் பார்வையில் இருந்த ஹோப்பைவிட மற்ற வட்டாரங்களிடமிருந்து தகவல் திரட்டுவது எளிதாக இருந்திருக்கும்.”

ஆனால் 1973 மே 8ஆம் தேதி இந்தியாவுடன் கையெழுத்திட்ட ஒப்பந்தத்தின் உண்மையான விளைவுகளைப் புரிந்துகொள்வதில் ஹோப் சோக்யாலைவிட புத்திசாலியாக இருந்தார்.

எனவே இரண்டு மாதங்களுக்குப் பிறகு அதாவது ஆகஸ்ட் மாதத்தில் அவர் சிக்கிமை விட்டு நிரந்தரமாக வெளியேறத் திட்டமிட்டார். அவ்வாறு செய்வதன் மூலம் தனது கணவரின் இறுதி வீழ்ச்சியைக் காணும் சோகத்திலிருந்து அவர் காப்பாற்றப்பட்டார். 1973 ஆகஸ்ட் 14ஆம் தேதி ஹோப் சிக்கிமிலிருந்து நிரந்தரமாக வெளியேறினார்.

“இந்த இக்கட்டான நேரத்தில் தன்னை விட்டுச் செல்லவேண்டாம் என்று சோக்யால் ஹோப்பிடம் வேண்டுகோள் விடுத்தார். ஆனால் அவர் சோக்யாலின் கோரிக்கையை ஏற்கவில்லை,” என்று சிக்கிமின் தலைமை நிர்வாகியாக இருந்த பி.டி.தாஸ் தனது சுயசரிதையான ‘மெமோயர்ஸ் ஆஃப் அன் இந்தியன் டிப்ளமாட்’ இல் எழுதியுள்ளார்.

“நான் ஹோப் குக்கை ஹெலிபேடிற்கு அழைத்துச் சென்றேன். அவரது கடைசி வார்த்தைகள், ‘மிஸ்டர் தாஸ், நீங்கள் என் கணவரை கவனித்துக் கொள்ளுங்கள்’ என்பதுதான்.”

ஹோப் குக் பலருக்கும் ஒரு புதிராகவே இருந்தார். சிலர் அவரை சிஐஏ ஏஜெண்ட் என்று அழைத்தனர். ஆனால் உண்மை என்ன என்பது யாருக்கும் தெரியாது. ஆனால் இந்திய விரோதி நிலைப்பாட்டை கடைபிடிக்க அவர் சோக்யாலை ஊக்குவித்தார் என்பதில் சந்தேகமில்லை.

இந்தியாவுக்கு எதிரான கதைகள் மற்றும் கார்ட்டூன்களுக்கு இடம் கொடுக்கும் வகையில் பள்ளி பாடத் திட்டத்தை மாற்றினார். இந்தியத் தலைவர்கள் மற்றும் அதிகாரிகள் முன்னிலையில் அவர் ராணி போல் நடந்து கொண்டார். ஆனால் அவர்களது முதுகுக்குப் பின்னால் அவர் கோபமாக இந்தியாவை ஏசுவார்.

சிக்கிமை விட்டு அவர் வெளியேற சோக்யாலின் துரோகமும் ஒரு காரணம்.

சில நாட்களுக்குப் பிறகு அவர் சோக்யாலிடமிருந்து விவாகரத்து கோரினார். சோக்யாலுடனான திருமணத்திற்குப் பிறகு கைவிட்ட அமெரிக்க குடியுரிமையை மீண்டும் பெற்றார். அவர்களது உறவு முன்பு போல் இல்லாததால் ஹோப், சோக்யாலை விட்டுச் சென்றதாக சிலர் கருதுகிறார்கள்.

சோக்யால் திருமணமான ஒரு பெல்ஜிய பெண்ணுடன் உறவுகொள்ளத் தொடங்கியபோது ஹோப் குக் மற்றும் சோக்யாலின் உறவு முறியத் தொடங்கியது. ஹோப்பின் முதல் குழந்தை பிறப்பதற்கு முன் சோக்யால் அந்தப் பெண்ணைச் சந்திக்க பெல்ஜியம் சென்றார்.

“அவரது காதலி அவருக்கு காதல் கடிதங்களை எழுதுவார். பல நேரங்களில் அவர் என்னைக் கட்டிப்பிடிக்கும்போது, அவரது டிரஸ்ஸிங் கவுன் பாக்கெட்டில் சில காகிதங்கள் இருப்பதை என்னால் உணர முடிந்தது. அடிக்கடி அந்தக் காதல் கடிதங்கள் அவரது பாக்கெட்டிலிருந்து கீழே விழும், அதை நான் எடுத்துப் படிப்பேன்,” என்று ஹோப் குக் தனது சுயசரிதையில் குறிப்பிட்டுள்ளார்.

சோக்யாலின் அதிகப்படியான குடிப் பழக்கமும் ஹோப்பை அவரிடமிருந்து அந்நியப்படுத்தியது. ஒரு முறை சோக்யால் குடிபோதையில் ஹோப்பின் ரெக்கார்ட் பிளேயரை ஜன்னல் வழியாகக் கீழே வீசினார்.

இறுதியாக, 1974 ஜூன் 30ஆம் தேதி டெல்லியில் இந்திரா காந்தியுடன் நடந்த சோக்யாலின் பேச்சுக்கள் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து சிக்கிம் இந்தியாவுடன் இணைவதற்கான வழி தெளிவானது. 1975 ஏப்ரல் 9ஆம் தேதி இந்திய வீரர்கள் சிக்கிம் அரண்மனையைச் சுற்றி வளைக்கத் தொடங்கினர்.

“வாசலில் நிறுத்தப்பட்டிருந்த காவலர் பசந்த் குமார் சேத்ரி தனது துப்பாக்கியை நீட்டி இந்திய ராணுவ வீரர்களைத் தடுத்து நிறுத்த முயற்சி செய்தார். இந்திய வீரர்கள் அவரைச் சுட்டுக்கொன்றனர்,” என்று ஜிபிஎஸ் சித்து எழுதுகிறார்.

“சோக்யால் பீதியடைந்து, என்ன நடக்கிறது என்று விசாரிக்கத் தனது தனிப்பட்ட பாதுகாப்பு அதிகாரி குர்பச்சன் சிங்கை தொலைபேசியில் தொடர்பு கொண்டார். ஆனால் குர்பச்சன் அருகே அமர்ந்திருந்த ஜெனரல் குல்லருக்கு ரிசீவர் அளிக்கப்பட்டது.

சிக்கிம் காவலர்களை ஆயுதங்களைக் கீழே போட உத்தரவிடுமாறு குல்லர், சோக்யாலிடம் கூறினார். 243 சிக்கிம் காவலர்களைக் கொண்ட குழு இந்திய வீரர்களால் சூழப்பட்டது.

அவர்கள் தங்கள் ஆயுதங்களைக் கீழே போட்டு கைகளை உயர்த்தினார்கள். முழு நடவடிக்கையும் 20 நிமிடங்களில் முடிந்தது,” என்று அவர் தனது புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.

அன்று 12:45 மணிக்கு சிக்கிம், `சுதந்திர நாடு` என்ற அந்தஸ்தை இழந்தது. சோக்யால் இந்தத் தகவலை ஹாம் வானொலியில் உலகம் முழுவதற்கும் தெரிவித்தார். இங்கிலாந்தில் உள்ள ஒரு கிராமத்தில் ஓய்வு பெற்ற மருத்துவர் ஒருவரும், ஜப்பான் மற்றும் ஸ்வீடனை சேர்ந்த வேறு இரண்டு பேரும் அவரது அவசர செய்தியைக் கேட்டனர்.

இதற்குப் பிறகு சோக்யால் அரண்மனையில் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார். சிக்கிமை இந்தியாவின் 22வது மாநிலமாக மாற்றுவதற்கான அரசியலமைப்பு திருத்த மசோதா 1975 ஏப்ரல் 23ஆம் தேதி மக்களவையில் நிறைவேற்றப்பட்டது.

மூன்று நாட்களுக்குப் பிறகு ஏப்ரல் 26 அன்று இந்த மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது. 1975 ஏப்ரல் 15ஆம் தேதி குடியரசுத் தலைவர் ஃபக்ருதீன் அலி அகமது இந்த மசோதாவில் கையெழுத்திட்டவுடன் சிக்கிமில் நாம்கியால் வம்சத்தின் ஆட்சி முடிவுக்கு வந்தது.

சோக்யால் இந்த அதிர்ச்சியிலிருந்து மீளவே இல்லை. அவருக்கு புற்றுநோய் ஏற்பட்டது. அவர் சிகிச்சைக்காக அமெரிக்கா அழைத்துச் செல்லப்பட்டார்.

சோக்யால் பால்டன் தோண்டுப் நாம்கியால், 1982 ஜனவரி 29ஆம் தேதி காலையில் இந்த உலகிலிருந்து விடைபெற்றார். சோக்யாலின் மரணத்திற்குப் பிறகு ஹோப் குக் அமெரிக்காவில் இருந்தார்.

அவர் ஓப்ரா வின்ஃப்ரேயின் ‘ஓப்ரா’ என்ற பேச்சு நிகழ்ச்சியில் 1989ஆம் ஆண்டு பங்கேற்றார். சிக்கிமுடன் தனது உறவை அவர் பேணி வருகிறார். ஆனால் அவர் அங்கு திரும்பி வரவே இல்லை.

மைக் வாலஸ் என்ற வரலாற்றாசிரியரை அவர் 1983இல் மணந்தார். ஆனால் பின்னர் அவரிடமிருந்தும் விவாகரத்து பெற்றார். ஹோப் குக் தற்போது நியூயார்க்கில் வசிக்கிறார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.