;
Athirady Tamil News

இனி நியூயார்க்கிலும் தீபாவளியன்று பள்ளிகளுக்கு விடுமுறை: இந்தியர்கள் மகிழ்ச்சி!!

0

அமெரிக்காவில் லட்சக்கணக்கான இந்தியர்கள் வசித்து வருகின்றனர். இந்தியர்களின் முக்கியமான பண்டிகையும், தீப ஒளிகளின் பண்டிகை என அழைக்கப்படும் தீபாவளி பண்டிகைக்கு விடுமுறை நாள் அறிவிக்கப்பட வேண்டுமென்பது நியூயார்க்கில் வசித்துவரும் அமெரிக்க வாழ் இந்தியர்களின் நீண்ட காலமாக கோரிக்கையாக இருந்து வந்தது.

இந்தியர்களின் இந்த பல நாள் எதிர்பார்ப்பிற்கு ஒரு இனிப்பான செய்தியாக, அங்கு இனிமேல் தீபாவளி பண்டிகை ஒரு விடுமுறை தினமாக அனுசரிக்கப்படும் என செய்தி வெளியாகியுள்ளது. இதுகுறித்து முக்கிய பிரமுகர்கள் கூறிய கருத்துக்கள்:- நியூயார்க் நகர மேயர் எரிக் ஆடம்ஸ், நேற்று அங்குள்ள சிட்டி ஹாலில் செய்திருக்கும் ஒரு சிறப்பு அறிவிப்பில், தீபாவளியை நியூயார்க் நகர பொது பள்ளி விடுமுறையாக மாற்றும் மசோதாவை மாநில சட்டமன்றமும், மாநில செனட்டும் நிறைவேற்றியதில் பெருமிதம் கொள்கிறேன். இந்த மசோதாவில் ஆளுநர் கையெழுத்திடப் போகிறார் என்று நாங்கள் நம்புகிறோம். இது இந்திய சமூகத்தின் ஆண்கள் மற்றும் பெண்கள் மட்டுமல்லாது தீபாவளியை கொண்டாடும் அனைத்து சமூகங்களின் வெற்றியாகும். மேலும், இது நியூயார்க்கின் வெற்றியாக கருதலாம்” என்றார்.

நியூயார்க் சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் இந்திய-அமெரிக்க பெண்மணியான நியூயார்க் சட்டமன்ற உறுப்பினர் ஜெனிபர் ராஜ்குமார்,” இரண்டு தசாப்தங்களாக தெற்காசிய மற்றும் இந்தோ-கரீபியன் சமூகம் இந்த தருணத்திற்காக போராடி வருகிறது. இன்று, மேயரும் நானும், உலகத்தின் முன் நின்று, இனி எப்போதும் தீபாவளிக்கு நியூயார்க் நகரில் பள்ளி விடுமுறை என்று சொல்வதில் பெருமிதம் கொள்கிறோம். தீபாவளி பண்டிகை விடுமுறை சட்டத்தில் இணைக்கப்பட உள்ளது,” என கூறினார். அங்குள்ள காங்கிரஸின் ஆசிய-பசிபிக் அமெரிக்க காகஸ் எனும் அமைப்பின் முதல் துணைத்தலைவரான கிரேஸ் மெங், “இந்த பள்ளி விடுமுறைக்காக நாங்கள் அழுத்தம் கொடுத்து வருகிறோம், இப்போது எங்கள் முயற்சிகள் நனவாகும். மற்ற கலாச்சாரங்கள் மற்றும் இனங்களின் விடுமுறை நாட்களை போலவே, இந்த முக்கியமான அனுசரிப்பை அங்கீகரித்து பாராட்ட எங்கள் பள்ளி அமைப்பு வந்துள்ளது” என கூறினார்.

கடந்த மாதம், தீபாவளியை கூட்டாட்சி விடுமுறையாக மாற்றுவதற்கான மசோதாவை காங்கிரஸில் மெங் அறிமுகப்படுத்தினார். இதன்படி, “தீபாவளி தின சட்டம்” எனும் சட்டத்தின் கீழ், அமெரிக்காவில், கூட்டாட்சி அங்கீகாரம் பெற்ற விடுமுறை தினங்களில், இனி தீபாவளி தின விடுமுறை, 12-வது விடுமுறையாக மாறும். நியூயார்க் நகர பள்ளிகளின் அதிபர் டேவிட் பேங்க்ஸ் கூறுகையில், “இந்த நகரம் முழுவதும் உள்ள பள்ளிக் குழந்தைகளுக்கு தீபாவளி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தீபாவளியை முன்னிட்டு பள்ளிகள் மூடப்படும் என்பதை விட நாம் என்னவாக இருக்கிறோம் என்பதை உணர்ந்தால் நமது மனம் திறக்கப்படும். குழந்தைகளுக்கு தீபாவளி பற்றியும் வரலாறு பற்றியும் கற்றுத் தரப்போகிறேன்” எனவும் கூறினார். அமெரிக்காவில் மட்டுமல்லாது, உலகெங்கிலும் வசிக்கும் இந்தியர்களுக்கு இந்த செய்தி மிகவும் மகிச்சியான ஒன்றாக அமைந்திருக்கிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.