;
Athirady Tamil News

பறக்கும் தட்டுகளில் வேற்றுக்கிரகவாசிகள் பூமிக்கு வந்து சென்றது உண்மையா? நாசா என்ன சொல்கிறது?!!

0

இன்று (ஜூலை 2) உலக யூ.எஃப்.ஓ (UFO) தினம்.

‘யூ.எஃப்.ஓ’ எனப்படும் பறக்கும் தட்டுக்கள் எப்போதுமே சர்ச்சைகளையும், சுவாரஸ்யத்தையும் ஒரு சேர கொண்டவை.

‘யூ.எஃப்.ஓ’ என்றால் என்ன? அவை உண்மையிலேயே இருக்கின்றனவா? அறிவியல் அவற்றைப்பற்றி என்ன சொல்கிறது? இக்கட்டுரையில் பார்க்கலாம்.

அடையாளம் காணப்படாத பறக்கும் பொருட்கள் என்பதன் ஆங்கிலப் பிரயோகமான Unidentified Flying Object என்பதன் சுருக்கம் தான் U.F.O. தமிழில் இவை பறக்கும் தட்டுகள் என்ற அழைக்கப்படுகின்றன.

முதன்முதலில் ஒரு ‘பறக்கும் தட்டைப்’ பார்த்ததாகச் சொன்னவர் அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு தனியார் விமானியான கென்னெத் அர்னால்ட். இவர் 1947ஆம் ஆண்டு, ஜூன் 24ஆம் தேதி, அமெரிக்காவின் வாஷிங்டன் நகரத்தின்மீது ஒன்பது பறக்கும் தட்டுகளைப் (flying discs) பார்த்ததாகச் சொன்னார்.

இது மின்னல் வேகத்தில் பரவியது. இவற்றின்மீதான ஆர்வமும் சர்ச்சைகளும் அதிகரித்தன. அடுத்த சில மாதங்களில் உலகின் பல இடங்களிலிருந்தும் மக்கள் பறக்கும் தட்டுகளைப் பார்த்தாக சொன்னார்கள்.

அதுவரை பறக்கும் தட்டு (flying saucer) என்றழைக்கப்பட்ட இவற்றை ‘யூ.எஃப்.ஓ’ என முதன்முதலில் அழைத்தது அமெரிக்க விமானப்படை தான். 1952ஆம் ஆண்டு, நிபுணர்கள் ஆராய்ந்த பின்னரும் அடையாளம் காணப்படாத பறக்கும் பொருட்களைக் குறிக்க இப்பெயர் பயன்படுத்தப்பட்டது.

பறக்கும் தட்டுகளைப் பற்றிய கதைகள் பரவலாக இன்றளவும் பேசப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

இப்படியாக, அமெரிக்க-ரஷ்ய பனிப்போர் துவங்கி உலகம் இறுக்கமான சூழ்நிலையில் சிக்குண்டிருந்த 1950களில், பறக்கும் தட்டுகளைப் பற்றிய கதைகள் பரவலாகப் பேசப்பட்டுக்கொண்டிருந்தன.

இந்நிலையில், 1953ஆம் ஆண்டு டொனால்ட் மென்செல் என்ற அமெரிக்க வானியல் நிபுணர் அவற்றைப்பற்றி ஒரு புத்தகம் எழுதினார். அதில், ‘மீண்டும் ஒர் உலகப்போர் மூண்டுவிடுமோ என்ற அச்சத்தில் இருக்கிறோம். இந்த அச்சத்தை மக்கள் உள்ளூர ரசிக்கவும் செய்கிறார்கள். இப்பின்புலத்தில் பறக்கும் தட்டுகள் ஒரு உற்சாகமூட்டும் விஞ்ஞானப் புனைகதைகள் போலத்தான் தோன்றுகின்றன,’ என்கிறார்.

‘பறக்கும் தட்டுகள் மூலம் ஏலியன்கள் பூமிக்கு வந்ததற்கு இதுவரை எந்தத் தடயமும் இல்லை.’

காலப்போக்கில், பறக்கும் தட்டுகளோடு சேர்ந்து, அவற்றில் பயணம் செய்து பூமிக்கு வரும் வேற்றுக்கிரக வாசிகள் (ஏலியன்கள்) பற்றிய கதைகளும் பரவத் துவங்கின.

இவற்றுக்கு ஏதேனும் அறிவியல் ஆதாரம் உள்ளதா?

முன்னர் பிபிசி தமிழிடம் பேசிய விஞ்ஞான் பிரசார் அமைப்பின் முதுநிலை விஞ்ஞானி த.வி.வெங்கடேஸ்வரன் இதற்கு எளிமையான ஒரு விளக்கம் அளித்திருந்தார்.

‘பறக்கும் தட்டுகள் மூலம் ஏலியன்கள் பூமிக்கு வந்ததற்கு இதுவரை எந்தத் தடயமும் இல்லை,’ எனத் திட்டவட்டமாகச் சொல்கிறார் வெங்கடேஸ்வரன்.

இதனை விளக்குவதற்கு அவர் ஒரு உதாரணத்தையும் மேற்கொள் காட்டினார்.

பூமிக்கு அருகில் இருக்கும் நட்சத்திர மண்டலமான ‘பிராக்சிமா சென்டாரி’க்குப் போக, ஒளியின் வேகத்தில் பயணித்தால்கூட அங்கு சென்றடைய நான்கு ஆண்டுகள் ஆகும். “ஆக, பல நூறு ஆண்டுகள் பயணித்தால் மட்டும் தான் இந்த மாதிரியான நட்சத்திர மண்டலங்களுக்கு நடுவே பயணம் மேற்கொள்ள முடியும். அவ்வளவு காலம் பயணித்து வேற்றுகிரகவாசிகள் பூமிக்கு வந்தார்கள் என்றால், சில நாட்கள் மட்டும் சுற்றிப் பார்த்துவிட்டுப் போய்விடுவார்களா?” என்று கேள்வி எழுப்பினார் வெங்கடேஸ்வரன்.

மனிதர்கள் நிலவுக்குச் சென்றபோதுகூட அங்கு ஒருநாள் தங்கி ஆய்வு செய்தோம். அப்படியிருக்க, அதனினும் பலமடங்கு தூரம் கடந்து வரும் ஏலியன்கள் சில பத்தாண்டுகளாவது பூமியில் தங்கி இவ்விடத்தைப் பற்றித் தெரிந்துகொள்ள மாட்டார்களா? என்றார்.

“ஒவ்வொரு மாதமும், பறக்கும் தட்டுகளைப் பார்த்ததாக 50-லிருந்து 100 புதிய செய்திகள் வருகின்றன”

கடந்த வருடம், பறக்கும் தட்டுகளைப் பற்றி ஆராய, நாசா ஒரு வல்லுநர் குழுவை அமைத்தது.

அவர்கள் பறக்கும் தட்டுகளைப் பார்த்ததாகச் சொல்லப்பட்ட 800 அறிக்கைகளை ஆராய்ந்து, சென்ற ஜூன் மாதம் அதைப்பற்றிய தகவல்களை ஒரு பொதுக்கூட்டத்தில் பகிர்ந்துகொண்டனர்.

அவர்களின் கூற்றுப்படி, ஒவ்வொரு மாதமும், பறக்கும் தட்டுகளைப் பார்த்ததாக 50-லிருந்து 100 புதிய செய்திகள் வருவதாகக் கூறுகிறார்கள்.

ஆனால், இவற்றில் உண்மையிலேயே அறிவியல் புதிராக இருப்பவை 2%த்தில் இருந்து 5% வரையானவைதான், என்கிறார் அமெரிக்கப் பாதுகாப்புத்துறையைச் சேர்ந்த ஷான் கிர்க்பாட்ரிக்.

இவற்றில் பெரும்பாலானவற்றுக்கு எளிய விளக்கங்கள் உள்ளன என்றும் கூறினார்.

உதாரணமாக, ஒரு முறை, ஒரு அமெரிக்க கப்பல்படை விமானம் எடுத்த ஒரு புகைப்படத்தில், வானத்தில் வரிசையாகச் சில புள்ளிகள் தென்பட்டன. முதலில் பறக்கும் தட்டுகள் என எண்ணப்பட்டவை, பிறகு அது ஒரு சாதாரண விமானம் என்று உறுதியானது.

அதேபோல், ஆஸ்திரேலியாவில் ஒருமுறை சில ஆய்வாளர்கள் பயன்படுத்திய கருவிகளில், விளக்கமுடியாத ரேடியோ கதிர்கள் பதிவாகின. முதலில் புதிராக இருந்த இது, போகப்போக மதிய உணவு வேளையில் அதிகமாக நிகழ ஆரம்பித்தது. இறுதியாக, அது அவர்கள் உணவைச் சூடாக்கப் பயன்படுத்திய மைக்ரோவேவ் ஓவனிலிருந்து வந்த நுண்கதிர்கள் என்று நிரூபனமானது.

சில சமயங்களில் காட்சிப்பிழைகள் கூட பறக்கும் தட்டுகள் என்று நம்பப்படும் வாய்ப்பு உள்ளது.

உதாரணமாக, ஸ்காட் கெல்லி என்ற ஒரு முன்னாள் விண்வெளி வீரரும் அவரது சக விமானியும் ஒருமுறை அமெரிக்காவின் விர்ஜீனியா மாகாணத்திலுள்ள கடற்கரைக்கு அருகே விமானத்தில் பயணித்துக்கொண்டிருந்தனர். அப்போது அவரது சக விமானி தான் ஒரு பறக்கும் தட்டைப் பார்த்ததாக உறுதியாக நம்பினார்.

அதைப் பார்ப்பதற்காக விமானத்தைத் திருப்பிகொண்டு சென்றபோது, அது ஒரு ராட்சத பலூன் என்று தெரிய வந்தது.

இப்படி, பறக்கும் தட்டுகள் என்று நம்பப்படும் பெரும்பாலான விஷயங்களின் பின்னிருக்கும் உண்மையை எளிமையாக விளக்கிவிடலாம்.

அப்படியெனில், விளக்கமுடியாமல் போகும் அந்தச் சில விஷயங்கள்?

அவை பறக்கும் தட்டுகளாக இருக்கக்கூடும் என்ற சாத்தியத்தை விஞ்ஞானிகள் முற்றிலுமாக மறுக்கவில்லை.

You might also like

Leave A Reply

Your email address will not be published.