;
Athirady Tamil News

சடலங்களை எரிப்பதால் வெளியாகும் புகை வீடுகளுக்குள் : மயானத்தை இடம்மாற்றுமாறு கோரி கல்லுண்டாய் மக்கள் கோரிக்கை!!

0

ஆனைக்கோட்டை – கல்லுண்டாய் இந்து மயானத்தில் சடலங்களை எரிப்பதால் வெளியாகும் புகை வீடுகளுக்குள் வருகிறது.

அந்த புகையை நாங்கள் சுவாசிப்பதால் பல்வேறு அசௌகரியங்களை எதிர்கொள்கிறோம் என கல்லூண்டாய் குடியேற்றத்திட்டத்தில் வசிக்கும் மக்கள் கவலையோடு தெரிவிக்கின்றனர்.

அவர்கள் மேலும் கூறுகையில்,

கடந்த நல்லாட்சி அரசாங்கத்தின் காலப்பகுதியில் எங்களுக்கு இந்த கல்லூண்டாய் பகுதியில் குடியேற்றத்திட்டத்தை அமைத்துக் கொடுத்து, எங்களை இங்கே குடியமர்த்தினார்கள். ஆனால், எங்களுக்கான அடிப்படை வசதிகள் எவையும் பூர்த்தி செய்யப்படவில்லை.

எங்களது குடியேற்றத்திட்டத்தில் இருந்து சுமார் 30 மீற்றர் தொலைவில் ஆனைக்கோட்டை – கல்லுண்டாய் மயானம் அமைந்துள்ளது.

அந்த மயானத்தில் சடலங்களை எரிக்கின்றபோது வெளியாகும் புகை எமது வீடுகளுக்குள் வருகிறது.

இந்த புகையை சுவாசிப்பதால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் நோய்த்தாக்கத்துக்கு உள்ளாகின்றனர்.

இந்த மயானத்தை இடம் மாற்றி, புதிய மயானத்தை அமைப்பதற்கான நிதி வரவு – செலவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்டதாகவும், தற்போதைய மயானம் இருக்கின்ற இடத்திலிருந்து சற்றே தொலைவில் ஒரு காணியை சண்டிலிப்பாய் பிரதேச செயலகம் ஒதுக்கித் தருமானால், அதில் புதிய மயானத்தை அமைக்க முடியும் என வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் ஜெபநேசன், பிரதேச சபையில் மக்கள் பிரதிநிதிகளின் ஆட்சி இருந்த காலப்பகுதியில் கூறினார்.

சண்டிலிப்பாய் பிரதேச செயலகத்தினால் இதற்காக சுமார் ஒரு ஏக்கர் காணி வழங்கப்பட்டுள்ளதாக பிரதேச செயலர் கூறுகின்றார். ஆனால், தற்போது பிரதேச சபையின் செயலாளர் எஸ்.சபேசன் புதிய மயானம் அமைப்பதற்கு நிதி இல்லை என்று கூறுகின்றார்.

ஏற்கனவே, வரவு – செலவு திட்டத்தில் மயானம் அமைப்பதற்கு என ஒதுக்கப்பட்ட நிதி எங்கே?

மழைக் காலங்களில் மயானத்தில் இருந்து வெள்ளம் வீடுகளுக்குள் வருகிறது. இதனால் மயானத்தில் எரிக்கின்ற கழிவுகள் வெள்ளத்தோடு வீடுகளுக்குள் வருகின்றன. பருவக்காற்று காலங்களில் பிணம் எரித்த சாம்பல் வீடுகளுக்குள் வருகிறது. இந்த அவல நிலைகள் அதிகாரிகளுக்கு தெரியுமா? இதனால் ஒரு உயிர் போனால் அந்த உயிரை அதிகாரிகளால் வழங்க முடியுமா?

இவ்வாறான சூழ்நிலைகளால் நோய்கள் ஏற்பட்டு சிலர் இங்கு இருக்க முடியாமல் உறவினர்கள் வீடுகளில் வசிக்கின்றனர். அவர்கள் இங்கு வசிக்கவில்லை என கூறி அவர்களுக்கு வழங்கப்படும் சலுகைகள் மறுக்கப்படுகின்றன.

ஒரு மனிதன் உயிர் வாழ்வதற்கு அத்தியாவசியமான அடிப்படை தேவைகளை வழங்காமல், அவர்களை இங்கே இருங்கள் என்று எப்படி கூற முடியும். அவர்களும் உயிருள்ள மனிதர்கள் தானே.

எனவே பொறுப்பு வாய்ந்த அதிகாரிகள் உடனடியாக இதனை கவனத்தில் கொண்டு, சண்டிலிப்பாய் பிரதேச செயலகம் வழங்கிய காணியில் மயானத்தினை அமைப்பதற்கு உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.