;
Athirady Tamil News

பிச்சையெடுக்கும் எண்ணத்தை தூக்கி எறியுங்கள்: பாகிஸ்தான் தலைமை ராணுவ அதிகாரி வலியுறுத்தல்!!

0

இந்தியாவின் அண்டை நாடான பாகிஸ்தானில் பொருளாதார நெருக்கடி அதிகரித்து வருகிறது. உணவு, மின்சாரம் மற்றும் எரிசக்தி உட்பட அனைத்து அடிப்படை தேவைகளுக்கும் அங்கு மக்கள் திண்டாடி வருகின்றனர். வேலைவாய்ப்பின்மையும் அதிகரித்து வருகிறது. நிலைமையை சரி செய்யும் முயற்சியில் அந்நாடு பல உலக நாடுகளிடம் உதவி கேட்டு வருகிறது. சமீபத்தில் உலக நாணய நிதியம் (IMF) விதித்திருக்கும் நிபந்தனைகள் அனைத்திற்கும் சம்மதித்து பல ஆயிரம் கோடி கடன் பெற்றிருக்கிறது. தனது நட்பு நாடான சீனாவிடமிருந்து கூடுதலாக சுமார் ரூ.5 ஆயிரம் கோடி ($600 மில்லியன்) கடனையும் பாகிஸ்தான் பெற்றுள்ளது. இந்நிலையில் பாகிஸ்தானின் ராணுவ தலைவர் சையத் அசிம் முனிர், சுயசார்புடைய நாடாக பாகிஸ்தான் மாற வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். கானேவால் மாதிரி விவசாயப் பண்ணை (Khanewal Model Agriculture Farm) திறப்பு விழாவில் பேசிய சையது கூறியிருப்பதாவது:- பாகிஸ்தானியர்கள் அடிப்படையில் பெருமை, வைராக்கியம் மற்றும் திறமை கொண்டவர்கள்.

தற்போது உள்ள பிச்சை எடுக்கும் எண்ணத்தை தூக்கி எறிய வேண்டும். அல்லா, அனைத்து ஆசீர்வாதங்களையும் பாகிஸ்தானுக்கு அளித்துள்ளார். உலகின் எந்த சக்தியாலும் நம் நாட்டின் முன்னேற்றத்தை தடுக்க முடியாது. ஒரு மாநிலம் ஒரு தாயைப் போன்றது. மக்களுக்கும் அரசுக்கும் இடையிலான உறவு, அன்பும் மரியாதையும் கொண்டது. பாதுகாப்பும் பொருளாதாரமும் ஒன்றோடொன்று இணைக்கப்பட்டவை மற்றும் இன்றியமையாதவை.

பாகிஸ்தான் ராணுவம் தனது நாட்டிற்கு சேவை செய்வதில் பெருமிதம் கொள்கிறது. ராணுவம் தனது பலத்தை மக்களிடமிருந்து பெறுவதுபோல் மக்களும் ராணுவத்தால் பலம் பெறுகின்றனர். தற்போது நிலவும் நெருக்கடியில் இருந்து பாகிஸ்தான் மீளும் வரை ராணுவம் ஓயப்போவதில்லை. நாடு விவசாய புரட்சியை சந்திக்கும். சிறு விவசாயிகள் பயன்பெறவும், பசுமை முயற்சிகளின் நோக்கத்தை பரப்பவும் நவீன தரத்திற்கு ஏற்ற மாதிரி பண்ணைகள் நாடு முழுவதும் நிறுவப்படும். இவ்வாறு அவர் வலியுறுத்தியுள்ளார். ஜூலை நிலவரப்படி, அந்நாடு சீனாவிற்கு திருப்பி தர வேண்டிய கடன் உட்பட, மொத்த கடன் ரூ.20 ஆயிரம் கோடி ($2.44 பில்லியன்) ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.