;
Athirady Tamil News

கல்வியங்காட்டில் மர்மமான முறையில் உயிரிழந்த சிறுமிக்கு மாதாந்தம் 5 ஆயிரம் ரூபாய் சம்பளமே வழங்கப்பட்டுள்ளது.!!

0

யாழ்ப்பாணம் கல்வியங்காட்டு பகுதியில் வீடொன்றில் பணிப்பெண்ணாக வேலை செய்து வந்த நிலையில் உயிரிழந்த சிறுமிக்கு சம்பள காசு கொடுக்கப்படவில்லை என சிறுமியின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

கல்வியங்காட்டு பகுதியில் உள்ள வீடொன்றில் பணிப்பெண்ணாக வேலை செய்து வந்த வட்டுக்கோட்டை முதலி கோவிலடியை சேர்ந்த கேதீஸ்வரன் தர்மிகா (வயது 17) எனும் சிறுமி , வேலை பார்த்து வந்த வீட்டில் சந்தேகத்திற்கு இடமான முறையில் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.

அது தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வரும் நிலையில் , யாழ்.போதனா வைத்தியசாலையில் சிறுமியின் உடற்கூற்று பரிசோதனை முடிவடைந்து , மேலதிக பரிசோதனைக்காக கொழும்புக்கு உடற்கூற்று மாதிரிகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் சிறுமியின் உறவினர்கள் தெரிவிக்கையில் ,

சிறுமியின் குடும்பம் பொருளாதார நிலையில் மிகவும் பின் தங்கிய நிலையில் காணப்பட்டது பொருளாதார நெருக்கடியினால் , சிறுமி தனது பாடசாலை கல்வியை இடை நிறுத்திய நிலையில் சிறுமியின் தாயார் கல்வியங்காட்டு பகுதியில் உள்ள வீடொன்றில் தங்கி நின்று வேலை செய்வதற்கு பணிப்பெண்ணாக சிறுமியை வேலைக்கு சேர்த்துள்ளார்.

வேலைக்கு சிறுமியை எடுக்கும் போது , சம்பளமாக 25 ஆயிரம் ரூபாய் தருவதாக வீட்டார் தாயாருக்கு உறுதி அளித்துள்ளனர்.

ஆனால் சிறுமி வேலைக்கு சேர்ந்த சில நாட்களில் சிறுமியை தாயார் சந்திக்க முடியாது என தடை ஏற்படுத்தினார். தொலைபேசியில் தாயாருடன் மாதத்தில் ஒரு தடவை மாத்திரம் , சில நிமிடங்கள் உரையாட அனுமதிக்க முடியும் என அனுமதித்தனர்.

சிறுமியிடம் தொலைபேசி இல்லாத அதேவேளை , தாயாரிடமும் தொலைபேசி இல்லை. வீட்டின் உரிமையாளர் சிறுமியின் வீட்டுக்கு அருகில் உள்ளவர்களுக்கு தொலைபேசி அழைப்பை ஏற்படுத்தி ,அதன் மூலம் தாயாரை தொடர்பு கொண்டு சிறுமியை சில நிமிடம் பேச அனுமதிப்பார். சிறுமி தாயுடன் பேசும் போது , வீட்டின் உரிமையாளர் அருகில் நிற்பார். சில நிமிட உரையாடலுடன் , தொலைபேசியை சிறுமியிடம் பறித்து விடுவார்கள்.

இவ்வாறாக சிறுமியை மனரீதியாக துன்புறுத்தி வந்ததுடன் , சிறுமிக்கு அதிகளவான வேலைகளையும் வழங்கி வந்துள்ளனர்.

இந்நிலையில் ஒரு மாத காலம் கழிய சிறுமியின் சம்பளம் என 5 ஆயிரம் ரூபாயே வழங்கியுள்ளனர். மிகுதி 20 ஆயிரம் ரூபாயை வழங்கவில்லை. இது தொடர்பில் சிறுமியின் தாய் கேட்ட போது , முழு சம்பளத்தையும் தந்தால் சிறுமி வேலையை விட்டு போய்விடுவா, அதனால் 20 ஆயிரம் ரூபாயை பிடித்து வைத்திருக்கிறோம் என தெரிவித்துள்ளனர்.

அடுத்த மாதமும் 5 ஆயிரம் ரூபாய் மட்டுமே சம்பளமாக வழங்கி 20 ஆயிரம் ரூபாயை பிடித்து வைத்துள்ளதாக தெரிவித்துள்ளனர். இவ்வாறாக 4 மாத சம்பளத்தை வழங்கவில்லை.

இது தொடர்பில் நாம் மரண விசாரணை அதிகாரியிடம் மரண விசாரணையின் போது சொன்னோம். மரண விசாரணை அதிகாரி , 20 ஆயிரம் ரூபாய் வீதம் மூன்று மாத காலமாக பிடித்து வைத்திருந்த 60 ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் நான்காவது மாத சம்பளம் 25 ஆயிரம் ரூபாய் என 85 ஆயிரம் ரூபாய் பணத்தை பெற்று தந்தார்.

சிறுமியை வீட்டில் வேலைக்கு சேர்ந்து விட்ட பிறகு நான்கு மாத காலமாக சிறுமியை தாயார் பார்க்க கூட அனுமதிக்கவில்லை. வேலைக்கு சேர்த்து விட்ட பின்னர் சிறுமியை நான்கு மாதம் கழித்து தாயார் சடலாமாகவே சிறுமியை பார்த்துள்ளார்.

சிறுமியின் மரணத்தில் எமக்கு சந்தேகம் உள்ளது. மன ரீதியாக வீட்டு உரிமையாளர்கள் துன்புறுத்தி , அதிக வேலைகளை வழங்கி மன அழுத்தத்தை சிறுமிக்கு ஏற்படுத்தி உள்ளனர்.

வீட்டின் உரிமையாளர்கள் கல்வி கற்ற , சமூக செல்வாக்கு மிக்கவர்களாகவும் , உயர் அதிகாரிகள் உள்ளிட்டவர்களுடன் நெருங்கிய தொடர்புகளை பேணி சிறுமியின் மரணத்தை மூடி மறைத்து தாம் தப்பிக்கொள்ள முயற்சிக்கின்றனர்.

இந்த நிலையில் வடமாகாண ஆளுநர் , சிறுமியின் மரணம் தொடர்பான பூரண விசாரணை அறிக்கையை தனக்கு சமர்ப்பிக்குமாறு , பொலிஸ் அதிகாரிகள் உள்ளிட்டவர்களுக்கு பணித்துள்ளமை எமக்கு ஒரு நம்பிக்கையை தந்துள்ளது.

சிறுமியின் மரணத்திற்கு காரணமானவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும். அவர்களுக்கு வழங்கப்படும் கடுமையான தண்டனைகளை இனி வரும் காலங்களில் அடிமைகளாக பணிப்பெண்களை வேலைக்கு அமர்த்துவோருக்கு பாடமாக அமைய வேண்டும்.

மத்திய கிழக்கு நாடுகளுக்கு பணிப்பெண்ணாக செல்வோர் துன்புறுத்தப்படுவதாகவும் அவர்களை காக்க வேண்டும் எனவும் பலரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில் உள்நாட்டில் பணிப்பெண்களை அடிமைகள் மாதிரி வேலைக்கு அமர்த்துவோரும் உள்ளனர். அவ்வாறானவர்களுக்கு எதிராக கடுமையான தண்டனைகள் வழங்கப்பட வேண்டும் என மேலும் தெரிவித்தனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.