;
Athirady Tamil News

ராணுவத்துக்கு உதவ மக்கள் தயாராக இருக்க வேண்டும்- ராஜ்நாத்சிங் பேச்சு!

0

1999-ம் ஆண்டு லடாக் எல்லையில் கார்கில் பகுதியை கைப்பற்ற பாகிஸ்தான் முயற்சித்தது. இதை எதிர்த்து இந்திய ராணுவ வீரர்கள் வீர தீரத்துடன் போரிட்டனர். இதில் இந்திய ராணுவம் பாகிஸ்தானை வீழ்த்தியது. இதையொட்டி ஆண்டு தோறும் ஜூலை 26-ந்தேதி கார்கில் வெற்றி தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. 24-வது கார்கில் வெற்றி தினம் (கார்கில் விஜய்திவாஸ்) நாட்டின் பல பகுதிகளில் இன்று கடைபிடிக்கப்பட்டது. லடாக் திராஸ் போர் நினைவிடத்தில் கார்கில் போரில் வீரமரணம் அடைந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. மத்திய பாதுகாப்பு துறை மந்திரி ராஜ்நாத்சிங், ராணுவ தலைமை தளபதி மனோஜ் பாண்டே, கடற்படை தலைமை தளபதி ஹரிகுமார் உள்ளிட்டோர் திராஸ் போர் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர். அப்போது ராஜ்நாத்சிங் பேசியதாவது:- கார்கில் போர் இந்தியாவின் மீது திணிக்கப்பட்டது.

பாகிஸ்தானால் முதுகில் குத்தப்பட்டோம். நாட்டுக்காக தங்கள் உயிரை தியாகம் செய்த எங்கள் துணிச்சலான மகன்களுக்கு நான் வணக்கம் செலுத்துகிறேன். எப்போதெல்லாம் போர் சூழல் ஏற்பட்டாலும் பொது மக்கள் எப்போதும் படைகளுக்கு ஆதரவு வழங்கினாலும் அந்த ஆதரவு மறைமுகமாகவே இருந்துள்ளது. தேவை ஏற்பட்டால் நேரடியாக போர்க்களத்தில் படையினருக்கு ஆதரவளிக்க பொது மக்கள் தயாராக இருக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். நாட்டின் கவுரவத்தையும், கண்ணியத்தையும் காக்க நாம் எந்த எல்லைக்கும் செல்லலாம். எல்லை கோட்டை கடப்பது அதில் அடங்கும் என்றால் அதை செய்ய நாங்கள் தயாராக இருக்கிறோம். இவ்வாறு ராஜ்நாத்சிங் பேசினார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.