;
Athirady Tamil News

பறக்கும் தட்டுகள்; மறைக்கப்படும் உண்மைகள்: அமெரிக்க பென்டகன் மீது முன்னாள் விமானி குற்றச்சாட்டு!!

0

முன்னெப்போதும் இல்லாத அளவில் அமெரிக்க பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும், தேசிய பாதுகாப்பு கண்ணோட்டத்துடனும், அமெரிக்காவின் எதிரி நாடுகளின் மறைமுக தாக்குதல் முயற்சிகளை கண்டறியவும், இவ்விமானங்கள் குறித்து நடத்தப்பட்ட ராணுவ ஆராய்ச்சிகளின் தகவல்களை வெளியிட உறுப்பினர்கள் வலியுறுத்தி வருகின்றனர். பென்டகன் (Pentagon) எனப்படும் அமெரிக்க ராணுவ தலைமையகத்திடமிருந்து இதற்கான தகவல்கள் பெறப்படுகின்றன. இந்நிலையில் அமெரிக்க விமான படையின் உளவுப்பிரிவை சேர்ந்த முன்னாள் அதிகாரி ஒருவர் இது சம்பந்தமான ஆராய்ச்சி தகவல்களை நெடுங்காலமாக ராணுவம் மறைத்து வருகிறது என குற்றஞ்சாட்டியுள்ளார்.

மேஜர் டேவிட் க்ரூஷ் (Major David Grusch) எனும் அந்த அதிகாரி, அமெரிக்க காங்கிரஸ் முன் சாட்சியம் அளித்து கூறியதாவது:- அமெரிக்க அரசு இது சம்பந்தமான எல்லா ரகசிய திட்டங்களை குறித்தும் விசாரிக்க ஒரு படையை உருவாக்கியது. இதன் தலைவராக 2019-ல் நான் நியமிக்கப்பட்டேன். அப்போது அமெரிக்க உளவு செயற்கைக்கோள் செயல்படுத்தும் துறையில் பணியாற்றினேன். அப்போது பல தசாப்தங்களாக நடைபெற்று வந்த, பூமியில் விழுந்த அடையாளம் தெரியாத பறக்கும் விமானங்களை குறித்தும், அவற்றின் பாகங்களை கொண்டு மீண்டும் அவற்றை உருவாக்க முயலும் பொறியியல் குறித்தும் ஆராய்ச்சிகள் நடைபெறுவது எனக்கு தெரியப்படுத்தப்பட்டது. ஆனால் இதுகுறித்து மேற்கொண்டு எதுவும் தெரிந்து கொள்ள நான் அனுமதிக்கபடவில்லை. இதுகுறித்து எனக்கு தெரிந்திருக்கும் தகவல்களை வெளியில் கூற நான் முன் வந்தபோது என்னை பணி ரீதியாகவும், உடல் ரீதியாகவும் கடுமையான துன்பங்களுக்கு ஆளாக்கினார்கள்.

1930-களிலிருந்து அமெரிக்க அரசுக்கு இதுகுறித்த தகவல்கள் தெரிந்திருக்க வாய்ப்புண்டு. இவ்வாறு அவர் தெரிவித்திருக்கிறார். அமெரிக்க பாராளுமன்றத்தின் இரு சபையையும் சேர்ந்த உறுப்பினர்களும் இந்த ஆளில்லா விமானங்களை குறித்தும், இதுகுறித்த ஆராய்ச்சிகள் குறித்தும் டேவிட்டிடம் தகவல்கள் கோரியுள்ளனர். கடந்த டிசம்பர் மாதத்திலிருந்து பல இடங்களிலிருந்து இத்தகைய “விமானங்களை” கண்டதாக செய்திகள் வருவதாகவும், அதனை ஆராய்ந்து வருவதாகவும் தெரிவித்த பென்டகன், டேவிட்டின் இந்த குற்றச்சாட்டுகளை முழுவதுமாக மறுத்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.