என்எல்சி விவகாரம்: ஆகஸ்டு 6ம் தேதிக்குள் இழப்பீடு வழங்க சென்னை ஐகோர்ட் உத்தரவு!!
கடலூர் மாவட்டம் நெய்வேலியில் என்.எல்.சி. நிறுவனத்துக்கு கையகப்படுத்தப்பட்ட நிலங்களில் என்எல்சி நிர்வாகம் விரிவாக்கப் பணிகளை தொடங்கி உள்ளது. பரவனாறு நிரந்தரக் கால்வாய் அமைக்கும் பணியின்போது சிறிய அளவிலான பாசன நிலம் பாதிக்கப்பட்டது. இதனை எதிர்த்து விவசாயிகள் போராட்டம் நடத்தினர். இந்நிலையில், விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க என்எல்சி முன் வந்தது. என்எல்சிக்காக கையகப்படுத்தப்பட்ட நிலத்தில் சேதப்படுத்தப்பட்ட பயிருக்கு ஏக்கருக்கு ரூ.40 ஆயிரம் இழப்பீடு நிர்ணயம் செய்யப்பட்டது.
சேதப்படுத்தப்பட்ட பயிருக்கு ரூ.40 ஆயிரம் இழப்பீடு வழங்க என்எல்சி ஒப்புதல் அளித்துள்ளது. இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட விவசாயி வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ஏற்கனவே நிலத்துக்கு ஒப்புக்கொள்ளப்பட்ட இழப்பீடு முழுமையாக வழங்கப்படவில்லை என சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாரர் சார்பில் கூறப்பட்டது.
இந்நிலையில், “இந்த இழப்பீடு தொகையை வரும் ஆகஸ்டு மாதம் 6ம் தேதிக்குள் வழங்கும்படி” சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், செப்டம்பர் மாதம் 15ம் தேதிக்கு பிறகு நில உரிமையாளர்கள் மேற்கொண்டு விவசாய பணிகளை மேற்கொள்ள கூடாது. நில உரிமையாளர்கள் சட்டம் ஒழுங்கை பாதிக்கும் எந்த செயலிலும் ஈடுபடக் கூடாது. அப்படி செய்தால் உரிய நடவடிக்கையை அரசு எடுக்க வேண்டும். கையகப்படுத்தப்பட்ட நிலத்தை என்எல்சி பாதுகாக்க வேண்டும்” என்றும் உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.