;
Athirady Tamil News

வாரத்தில் 2 நாட்கள் கிராமங்களுக்கு சென்று சேவை செய்யுங்கள்- பா.ஜ.க. தொண்டர்களுக்கு பிரதமர் மோடி கட்டளை!!

0

அரியானா மாநிலம் பரிதாபாத்தின் சூரஜ்குண்டில் பா.ஜ.க. மண்டல பஞ்சாயத்து ராஜ் கவுன்சிலின் 2 நாள் மாநாடு இன்று தொடங்கியது. மாநாட்டை பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டா தொடங்கிவைத்தார். அரியானா முதல்-மந்திரி மனோகர் லால் கட்டார் வரவேற்றார். விழாவில் பங்கேற்ற தொண்டர்களிடையே பிரதமர் நரேந்திர மோடி காணொலி வாயிலாக சிறப்புரை ஆற்றினார்.

அப்போது அவர் பேசியதாவது:- சுதந்திரம் அடைந்து 70 ஆண்டுகள் ஆகியும் பஞ்சாயத்து ராஜ் முறையை அமல்படுத்துவது எவ்வளவு முக்கியம் என்பதை காங்கிரசால் புரிந்துகொள்ள முடியவில்லை. இதற்கு பிறகு உருவாக்கப்பட்ட மாவட்ட பஞ்சாயத்து அமைப்பு காங்கிரஸ் ஆட்சி காலத்தில் அப்படியே கைவிடப்பட்டது. காங்கிரஸ் ஆட்சியில் பஞ்சாயத்து ராஜ் அமைப்புகளை வலுப்படுத்த உறுதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை. பெரும்பாலான நடவடிக்கைகள் புள்ளி விவரங்கள் மற்றும் காகிதங்களில் மட்டுமே இருந்தன.

ஜம்மு காஷ்மீர் இதற்கு மிகப்பெரிய உதாரணம். சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்ட பிறகு காஷ்மீரில் முதல் முறையாக கிராம பஞ்சாயத்து முதல் மாவட்ட அளவில் தேர்தல் நடத்தப்பட்டு உள்ளது. இதில் 33 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் பிரதிநிதிகள் தேர்வு செய்யப்பட்டனர். அங்கு அடிமட்ட அளவில் இருந்து ஜனநாயகம் நிலை நாட்டப்பட்டு உள்ளது. வளர்ந்த இந்தியாவை உருவாக்குவதற்கான முழு ஈடுபாட்டுடன் நாடு ஒற்றுமையுடனும், உறுதியுடனும் முன்னேறி வருகிறது. எந்த துறையிலும் பெரிய மாற்றங்களை கொண்டுவரும் அதிகாரம் மாவட்ட பஞ்சாயத்துகளுக்கு உண்டு. இப்படிப்பட்ட சூழலில் பா.ஜ.க.வின் பிரதிநிதிகளாகிய உங்கள் அனைவரின் பங்கும் பிரதானமானது.

உங்கள் மாவட்டம் வளர்ச்சி அடைவது முக்கியம். பொதுமக்கள் தான் கடவுளின் வடிவம். எங்கு வேண்டுமானாலும் பணிபுரியும் வாய்ப்பை பொதுமக்கள் வழங்கினால், அந்த பணியில் முழு மனதுடன் ஈடுபட வேண்டும் என்று அர்த்தம். பா.ஜ.க.வின் பிரதிநிதியாக, பஞ்சாயத்து அமைப்பின் பலன்களை சமுதாயத்தின் கடைக்கோடியில் உள்ள ஒவ்வொருவருக்கும் எடுத்துச் செல்ல வேண்டும். வாரத்தில் 2 நாட்கள் உங்கள் பகுதியில் உள்ள ஏதாவது ஒரு கிராமத்துக்கு சென்று, அங்குள்ள மக்களுடன் இணைந்து சேவை ஆற்றுமாறு உங்கள் அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன்.

பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் நாட்டில் விவசாயிகளும் ரூ.1 லட்சத்து 30 ஆயிரம் கோடிக்கு மேல் இழப்பீடு பெற்றுள்ளனர். சில நாட்களுக்கு முன், 1.25 லட்சம் கிசான் சம்ரிதி கேந்திராக்களை விவசாயிகளுக்காக நாட்டிற்கு அர்ப்பணித்துள்ளேன். மத்திய அரசின் இந்த முயற்சிகள் அனைத்தும் விவசாயிகளின் வாழ்க்கையை எளிதாக்குவதற்கும் அவர்களின் வருமானத்தை அதிகரிப்பதற்கும் மிகவும் உதவியாக உள்ளது. இந்தத் திட்டங்கள் அனைத்தையும் உங்கள் பகுதி விவசாயிகளின் வயல்களுக்கு எடுத்துச் செல்ல வேண்டும்.

நமது பல திட்டங்களின் நேர்மறையான விளைவு கிராமப்புற பெண்களின் சமூக மற்றும் பொருளாதார நிலையிலும் தெரிகிறது. கடந்த 9 ஆண்டுகளில் ஜன்தன் யோஜனா திட்டத்தின் கீழ் சுமார் 50 கோடி பேருக்கு வங்கிக் கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன. இத்திட்டத்தின் பயனாளிகளில் பெரும்பாலானோர் பெண்கள். சுவாமித்வா யோஜனா திட்டத்தின் மூலம், நாட்டின் கிராமப்புற மக்களுக்கு சொத்து ஆவணங்களை வழங்கும் பணிகள் வேகமாக நடந்து வருகிறது. இவ்வாறு அவர் பேசினார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.