;
Athirady Tamil News

2 என்ஜின்கள் செயல் இழந்தாலும் சந்திரயான் -3 விண்கலத்தை நிலவில் வெற்றிகரமாக தரையிறக்க முடியும்- இஸ்ரோ தலைவர் சோம்நாத் தகவல்!!

0

நிலவின் தென்துருவ பகுதியை ஆய்வு செய்ய இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் சார்பில் சந்திராயன்-3 விண்கலம் கடந்த 14-ந் தேதி ஆந்திரா மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் செலுத்தப்பட்டது. பல்வேறு நிலைகளை கடந்து சென்றுள்ள இந்த விண்கலம் 40 நாட்கள் பயணம் செய்து வருகிற 23-ந் தேதி மாலை 5.47 மணி அளவில் நிலவில் தரையிறங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த 5-ந்தேதி மாலை 5 மணி அளவில் சந்திராயன்-3 விண்கலம் நிலவு பாதையில் இருந்து நிலவின் நீள்வட்ட சுற்றுப்பாதைக்குள் லுனார் ஆர்பிட் இன்ஞக்சன் மூலம் நுழைந்தது. சந்திரயான்-3 விண்கலம் நிலவின் சுற்றுப்பாதையில் அதிகபட்சமாக 18 ஆயிரம் கிலோமீட்டர் முதல் குறைந்தபட்சம் 100 கிலோமீட்டர் தூரம் வரை பயணம் செய்யும். இன்று முதல் நிலவின் சுற்றுப்பாதை தூரத்தை குறைக்கும் பணி தொடங்கும் என இஸ்ரோ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 100 கிமீ தூரத்தை எட்டியபின், விண்கலத்தில் புரபல்சன் மற்றும் விக்ரம் என்ற லேண்டர் என 2 முக்கியப் பகுதிகள் உள்ளன. அந்த லேண்டரில்தான் ரோவர் கருவியும் அமைந்துள்ளது. தரையிறக்கத்தின் போது உந்துவிசை கருவியை யும், லேண்டரையும் தனியாக பிரிக்க வேண்டியுள்ளது. அப்படிப் பிரித்து, லேண்டரை அதிகபட்சமாக 100 கிலோ மீட்டர் முதல் குறைந்தபட்சமாக 30 கிலோமீட்டர் வரை நீள்வட்டப் பாதையில் செலுத்துவார்கள். லேண்டரின் கீழே 4 குட்டி ராக்கெட்டுகள் உள்ளன.

அந்த ராக்கெட்டுகளின் உதவியுடன், லேண்டரை மெல்ல மெல்லத் தரையிறக்க வேண்டும். இது வெற்றிகரமாக நிகழ்ந்தால், சந்திராயன்-3 நிலவில் அதன் ஆராய்ச்சி தொடங்கியை தகவல்களை வழங்கும். இது தொடர்பாக பெங்களூருவில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் இஸ்ரோ தலைவர் சோம்நாத் பேசியதாவது:- தற்போது விண்கலம் நிலவை நெருங்க 3 டி-ஆர்பிட்டிங் நிகழ்வுகள் உள்ளன. இன்றும், வருகிற 14 மற்றும் 16 ஆகிய தேதிகளில் அதன் சுற்றுப்பாதை சந்திரனில் இருந்து 100 கி.மீ. வரை குறைக்கப்படும். லேண்டர் ப்ரொபல்ஷன் மாட்யூல் பிரிப்புப் பயிற்சியானது, லேண்டர் “டீபூஸ்ட்” முடிந்தவுடன், பணியை எளிதாக்கும் ஒரு செயல்முறையைத் தொடர்ந்து மேற்கொள்ளப்படும். அதைத் தொடர்ந்து ஆகஸ்ட் 23-ந் தேதி நிலவின் மேற்பரப்பில் தரையிறங்கும். இந்த முறையும் விக்ரமில் உள்ள 2 என்ஜின்கள் வேலை செய்யவில்லை என்றாலும் அது இன்னும் தரையிறங்க முடியும் என்பதை நாங்கள் உறுதி செய்துள்ளோம்.

எனவே இவை சரியாகச் செயல்படும் பட்சத்தில் விக்ரம் லேண்டர் பல தோல்விகளைச் சமாளிக்கும் வகையில் முழு வடிவமைப்பும் செய்யப்பட்டுள்ளது. விக்ரம் லேண்டரை சந்திரனில் செங்குத்தாக தரை இறக்குவது இஸ்ரோ குழுவின் முன் உள்ள மிகப்பெரிய சவால். ஆர்பிட்டரில் இருந்து லேண்டர் பிரிந்ததும், அது கிடைமட்டமாக நகரும். தொடர்ச்சியான நிகழ்வுகள் மூலம், அது சந்திரனில் பாதுகாப்பாக தரையிறங்கு வதற்காக செங்குத்து நிலைப்பாட்டிற்கு கொண்டு வரப்படும். சந்திராயன்-2 பணியின் போது, இஸ்ரோ தனது லேண்டரை நிலவின் மேற்பரப்பில் பாதுகாப்பாக இறக்க தவறியது. எனவே இந்தமுறை இந்தப் பயிற்சி மிகவும் முக்கியமானது. கிடைமட்டத்தில் இருந்து செங்குத்து திசைக்கு மாற்றும் திறன் மிக நுட்பமானது.

இங்குதான் கடந்த முறை பிரச்சினை ஏற்பட்டது. பயன்படுத்தப்படும் எரிபொருள் குறைவாக உள்ளதா, தொலைவு கணக்கீடுகள் சரியாக உள்ளதா மற்றும் அனைத்து வழிமுறைகளும் சரியாக செயல்படுகின்றனவா என்பதை உறுதி செய்வதும் சவாலாக உள்ளது. எப்படி என்றாலும் விக்ரம் லேண்டரை தரையிறக்கும் முயற்சியை மேற்கொள்வதை உறுதி செய்வதற்கான ஏற்பாடுகளை இஸ்ரோ குழு இந்த முறை செய்துள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.