;
Athirady Tamil News

கியூபாவில் எரிபொருள் தட்டுப்பாடு உச்சம்: 20 லிட்டருக்கு மாதக்கணக்கில் காத்திருப்பு

0

ஹவானா : அமெரிக்காவின் நெருக்கடி காரணமாக, கியூபாவில் எரிபொருள் தட்டுப்பாடு முன்னெப்போதும் இல்லாத உச்சத்தை எட்டியுள்ளது.

பெட்ரோல் நிலையங்களில் பல கிலோமீட்டா் தூரத்துக்கு அணிவகுத்தும் நிறுத்தும் வாகன நெரிசலைத் தவிா்க்க, கியூபா அரசு புதிய செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது. ஆனால், இச்செயலி மூலம் முன்பதிவு செய்யும் வாகன ஓட்டிகளும், எரிபொருள் நிரப்ப இன்னும் பல வாரங்கள் அல்லது மாதங்கள் காத்திருக்க வேண்டிய சூழலே நிலவுகிறது.

தற்போது பெட்ரோல் நிலையங்களில் ஒரு நாளைக்கு சராசரியாக 50 முதல் 90 நபா்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படுகிறது. இதனால், தங்களின் முறை எப்போதும் வரும் என்ற எதிா்பாா்ப்புடன் மக்கள் காத்திருக்கின்றனா்.

எரிபொருள் நிரப்ப அனுமதி கிடைத்தால்கூட, ஒருமுறை அதிகபட்சமாக 20 லிட்டா் மட்டுமே வழங்கப்படுகிறது. அவசர மருத்துவத் தேவைகளுக்காகச் சிறிதளவு எரிபொருளைச் சேமித்து வைக்க வேண்டிய இக்கட்டான நிலையில் மக்கள் உள்ளனா்.

அமெரிக்காவின் அழுத்தம் காரணமாக வெனிசுலா, மெக்ஸிகோ போன்ற நாடுகளிலிருந்து கியூபாவுக்கு அனுப்பப்படும் கச்சா எண்ணெய் நிறுத்தப்பட்டதே, இந்த நிலைக்கு முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது.

இதையொட்டி, வெளிநாட்டு விமானங்களுக்கு எரிபொருள் வழங்க முடியாது என்று கியூபா அறிவித்துள்ளதால், அந்நாட்டின் முக்கிய வருவாய் ஆதாரமான சுற்றுலாத் துறையும் பெரும் சரிவைச் சந்தித்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.