;
Athirady Tamil News

மணிப்பூர் விவகாரத்தில் பிரதமர் மோடிக்கு ஆதரவாக கருத்து தெரிவித்த அமெரிக்க பாடகி!!

0

அமெரிக்காவை சேர்ந்த பிரபல பாடகி மேரி ஜே. மில்பென் (Mary J. Millben). இசை நிகழ்ச்சிகள் நடத்துவதுடன் இவர் ஒரு நடிகையாகவும், ஊடக பிரபலமாகவும் திகழ்கிறார். கடந்த ஜூன் மாதம் இந்திய பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்காவில் 3-நாள் சுற்று பயணம் செய்தபோது, மோடி பங்கேற்ற பயண நிறைவு நிகழ்ச்சியில் அவர் முன்னிலையில் இந்திய தேசிய கீதத்தை பாடியவர் மில்பென். அந்நிகழ்ச்சியில் அவர் மோடியின் கால்களை தொட்டு வணங்கினார். இது குறித்த வீடியோ அப்போது வைரலானது. கடந்த மே மாதம் இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் இரு பிரிவினருக்கிடையே துவங்கிய ஒரு மோதல் இனக்கலவரமாக மாறி வன்முறை வெடித்தது. கடந்த ஜூலை மாதம், ஒரு இனத்தை சேர்ந்த இரு பெண்களை மே மாதம் நடைபெற்ற ஒரு சம்பவத்தில் மற்றொரு இனத்தை சேர்ந்தவர்கள் மானபங்கப்படுத்திய அரை நிமிடத்திற்கும் குறைவான ஒரு அதிர்ச்சிகரமான வீடியோ வைரலானது.

இந்த சம்பவத்திற்காக பிரதமர் மோடி மீது எதிர்கட்சிகள் குற்றம்சாட்டி வரும் நிலையில் மோடிக்கு ஆதரவாக மில்பென் குரல் கொடுத்திருக்கிறார். மணிப்பூரில் பெண்கள் மீது நடத்தப்பட்ட மனிதாபிமானமற்ற பாலியல் வன்முறைகளை மோடி வெளிப்படையாக பேசியதை ஜூலை மாதமே பாராட்டிய மில்பென் மணிப்பூர் வன்முறை, மோடியின் தலைமை மற்றும் இந்திய எதிர்கட்சிகள் குறித்து சமூக வலைதளமான எக்ஸ்ஸில் (டுவிட்டர்) பதிவு ஒன்றை செய்திருக்கிறார்.

இதில் அவர் கூறியிருப்பதாவது:- பெண்கள் கடவுளின் குழந்தைகள். மணிப்பூரில் மானபங்கப்படுத்தப்பட்ட பெண்களுக்காக என் மனம் மிகவும் வருந்துகிறது. உண்மை என்னவென்றால் மோடியின் மீது இந்தியாவிற்கு நம்பிக்கை உள்ளது. மணிப்பூரின் பெண்களுக்கான நீதியை மோடி பெற்று தருவார். பிரதமர் மோடி மணிப்பூர் பெண்களின் விடுதலைக்காக போராடுவார். கலாசார மரபுகளை அவமரியாதை செய்து, தன் நாட்டின் மதிப்பினை அயல்நாட்டில் குறைவாக பேசுவது நல்ல தலைமை பண்பாகாது.

பொய் கதைகளை நேர்மையற்ற ஊடகங்கள் உரக்க சொன்னாலும் அவற்றில் வலு இருக்காது. உண்மைதான் எப்போதும் மக்களை சுதந்திரமாக்கும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். மேலும், அமெரிக்காவில் மக்கள் உரிமைகளுக்காக பாடுபட்ட தலைவரான மார்ட்டின் லூதர் கிங் ஜூனியரின் முழக்கமான “சுதந்திரம் ஒலிக்கட்டும்” எனும் வார்த்தைகளை குறிப்பிட்டு “என் இனிய இந்தியாவே, உண்மை ஒலிக்கட்டும்” என்றும் குறிப்பிட்டுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.