;
Athirady Tamil News

லடாக் விபத்து – உயிரிழந்த ராணுவ வீரர்களின் குடும்பத்துக்கு ஜனாதிபதி, பிரதமர் இரங்கல்!!

0

லடாக்கின் லே மாவட்டத்தில் பணியில் இருந்த வீரர்களை அழைத்துக்கொண்டு நேற்று 3 ராணுவ வாகனங்கள் சென்று கொண்டிருந்தன. இந்த வாகன அணிவகுப்பு தெற்கு லடாக்கின் நியோமா அருகே உள்ள கெரே பகுதியில் சென்றபோது, ஒரு வாகனம் திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து அங்குள்ள ஆழமான பள்ளத்தாக்கில் தலைகுப்புற கவிழ்ந்தது. அந்த வாகனத்தில் 10 வீரர்கள் இருந்தனர்.

பள்ளத்தாக்கில் கவிழ்ந்ததில் வாகனம் அப்பளம் போல நொறுங்கியது. அதில் இருந்த வீரர்கள் அனைவரும் வாகன இடிபாடுகளுக்குள் சிக்கி படுகாயம் அடைந்தனர். தகவல் அறிந்து ராணுவ உயர் அதிகாரிகள் மற்றும் போலீசார் சம்பவ இடத்தில் குவிக்கப்பட்டு மீட்பு பணிகள் நடைபெற்றன. காயமடைந்த வீரர்களை மீட்டு ராணுவ மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி 9 வீரர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். மற்றொருவர் சிகிச்சை பெற்று வருகிறார். விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடந்து வருகிறது.

பள்ளத்தாக்கில் வாகனம் கவிழ்ந்த விபத்தில் 9 ராணுவ வீரர்கள் உயிரிழந்த சம்பவம் ராணுவ வட்டாரங்களில் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில், லடாக்கில் ராணுவ வாகன விபத்தில் சிக்கி உயிரிழந்த வீரர்களின் குடும்பத்திற்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக, ஜனாதிபதி திரவுபதி முர்மு வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், லடாக் விபத்து பற்றிய செய்தியால் மிகுந்த வேதனை அடைந்தேன்.

இந்த ராணுவ வீரர்களின் தன்னலமற்ற தியாகத்திற்கு தேசம் நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார். இதேபோல் பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், லே அருகே நடந்த விபத்தில் இந்திய ராணுவ வீரர்களை இழந்து தவிக்கிறோம். தேசத்திற்கு அவர்கள் ஆற்றிய செழுமையான சேவை எப்போதும் நினைவுகூரப்படும். உயிரிழந்த குடும்பங்களுக்கு அனுதாபங்கள். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையட்டும்” என பதிவிட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.