;
Athirady Tamil News

வானத்திலிருந்து வீட்டின் மேல் விழுந்த பனிப்பாறை- மர்மத்தை துப்புதுலக்கும் அமெரிக்க அதிகாரிகள்!!

0

அமெரிக்காவில் வசித்து வருபவர்கள் ஜெஃப் இல்க் (Jeff Ilg) மற்றும் அவர் மனைவி அமேலியா ரெயின்வில் (Amelia Rainville) தம்பதி. இவர்கள் இருவரும் அவர்களது வீட்டில் உறங்கி கொண்டிருந்தனர். மாடியில் உள்ள படுக்கையறையில் அவர்களின் குழந்தைகள் உறங்கி கொண்டிருந்தனர். அப்போது பெரும் வெடிச்சத்தம் போன்று கேட்டதில் அவர்கள் திடுக்கிட்டனர். அந்த சத்தம் மாடியிலிருந்து வந்தது போலிருந்ததால், சத்தத்தை கேட்டு பரபரப்பாக மேலே ஓடிச் சென்று பார்த்தனர். ஆனால் குழந்தைகள் உறங்கிக்கொண்டிருந்தனர். அவர்கள் அறையில் வித்தியாசமாக ஏதும் காணப்படவும் இல்லை.

இதனையடுத்து அவர்கள் இருவரும் வீட்டை சுற்றி ஒவ்வொரு இடமாக பார்வையிட்டனர். அப்போது பின்புற படிக்கட்டுக்களில் ஒரு மிக பெரிய பனிப்பாறையின் உடைந்த துண்டு கிடப்பதை ஜெஃப் கண்டார். அந்த இடத்தை சுற்றி உடைந்த பனித்தூள்கள் இருந்தன. அவை வீட்டின் மேல்தள மொட்டை மாடியிலும் பரவி கிடந்தன. அப்போது வீட்டின் மேற்கூரையில் ஒரு பள்ளத்தையும் ஜெஃப் கண்டார். அந்த நேரத்தில் பெருமழையோ, ஆலங்கட்டி மழையோ அங்கு பெய்து கொண்டிருக்கவில்லை. மேலும் மழைக்கான அறிகுறிகள் எதுவும் இல்லாமல் வானிலையும் சீராக இருந்தது. இரவு நேரம் எனபதால் ஏதேனும் சேதம் அடைந்திருக்கிறதா என்பது குறித்து அவர்களால் ஒரு முடிவுக்கு வர முடியாமல் இருந்தது.

அவர் மனைவி அமெலியா உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவித்தார். அதிகாரிகள் விரைந்து வந்தனர். கீழே விழுந்த பனிப்பாறை தூள்களிலிருந்தே அமெலியா சுமார் 4.5 கிலோ அளவிற்கு பனிப்பாறைகளை ஒரு பையில் சேகரித்தார். மத்திய விமான போக்குவரத்து நிர்வாகம் இந்த சம்பவம் குறித்து விசாரணை செய்து வருகிறது. தரவுகளின்படி, இதுவரை அமெரிக்காவில் விழுந்த ஆலங்கட்டிகளிலேயே, 2010ல், தெற்கு டகோட்டாவில் உள்ள விவியன் பகுதியில் விழுந்த ஆலங்கட்டிதான் மிகப்பெரிதானது. அதன் எடை சுமார் 1 கிலோ.

ஜெஃப் வீட்டில் கீழே விழுந்த பனிப்பாறையின் எடை சுமார் 6 கிலோலிருந்து 9 கிலோ வரை இருக்கும். பாஸ்டன் நகரில் உள்ள விமான நிலையம் நோக்கி பறந்து கொண்டிருந்த ஒரு விமானத்திலிருந்துதான் இந்த பனிப்பாறை விழுந்திருப்பதாக ஜெஃப் தம்பதியர் நம்புகின்றனர். தற்போது ஜெஃப், அமெலியா தம்பதியின் வீட்டில் விழுந்த பனிப்பாறை என்னவென்றும், அது எங்கிருந்து எவ்வாறு அவர்கள் வீட்டில் விழுந்தது என்பதும் விசாரணை முடிவில்தான் தெரிய வரும்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.