;
Athirady Tamil News

உற்பத்தியாளர்களிடம் 2 லட்சம் மெட்ரிக் டன் வெங்காயத்தை கொள்முதல் செய்யும் மத்திய அரசு!!

0

வெங்காயத்தின் விலையை கட்டுக்குள் வைக்கவும், உள்ளூர் மார்க்கெட்டில் சப்ளையை அதிகரிக்கவும் மத்திய அரசு, வெங்காயம் மீது 40 சதவீதம் ஏற்றுமதி வரி விதித்தது. மேலும், இந்த வரிவிதிப்பு டிசம்பர் 31-ந்தேதி வரை நீடிக்கும் என மத்திய அரசு தெரிவித்திருந்தது.

இதற்கு மகாராஷ்டிராவில், முக்கியமாக நாசிக் மாவட்டத்தில் எதிர்ப்பு கிளம்பியது. வியாபாரிகள் மற்றும் உற்பத்தியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நாசிக் மார்க்கெட் வியாபாரிகள், காலவரையின்றி போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர். மத்திய அரசு இந்த உத்தரவை திரும்பப்பெறும் வரை, எந்தவொரு ஏலத்திலும் பங்கேற்கமாட்டோம் எனத் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், குவிண்டாலுக்கு 2410 ரூபாய் விதம், 2 லட்சம் மெட்ரிக் டன் வெங்காயத்தை மத்திய அரசு கொள்முதல் செய்யும் என மகாராஷ்டிரா மாநில துணை முதல்வர் பட்னாவிஸ் தெரிவித்துள்ளார். தற்போது ஜப்பானில் இருக்கும் தேவேந்திர பட்னாவிஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் ”நான் மத்திய உள்துறை மந்திரி, மத்திய வணிக மந்திரி பியூஷ் கோயல் ஆகியோரிடம் வெங்காயம் தொடர்பான பிரச்சனை குறித்து பேசினேன். மத்திய அரசு இரண்டு லட்சம் மெட்ரிக் டன் வெங்காயத்தை குவிண்டாலுக்கு 2410 ரூபாய் அடிப்படையில் வாங்கிக் கொள்ளும். நாசிக் மற்றும் அகமதுநகர் மாவட்டங்களில் இதற்காக சிறப்பு கொள்முதல் மையம் அமைக்கப்படும். இது வெங்காயம் பயிரிட்டோருக்கு ஓரளவு நிவாரணம் அளிக்கும்” என்றார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.