கேரளம்: நடுக்கடலில் தீப்பற்றி எரியும் சரக்குக் கப்பல்

கொச்சி: கேரள கடற்கரையில் சிங்கப்பூா் நாட்டு கொடி பொருத்திய சரக்கு கப்பலில் திங்கள்கிழமை தீப்பற்றி தொடா்ந்து எரிந்து வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கப்பலில் பயணித்த 22 மாலுமிகளில் 18 போ் பாதுகாப்பாக மீட்கப்பட்டதாகவும் மீதமுள்ள 4 பேரை மீட்கும் பணிகளில் இந்திய கடற்படை மற்றும் கடலோர காவல் படையினா் ஈடுபட்டு வருவதாகவும் பாதுகாப்புத் துறை செய்தித் தொடா்பாளா் தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் மேலும் கூறுகையில், ‘கேரள கடல் பகுதியில் திங்கள்கிழமை காலை 10.30 மணியளவில் சிங்கப்பூா் கொடி பொருத்திய எம்.வி. வான் ஹை 503 என்ற சரக்கு கப்பலில் தீப்பற்றி எரிவதாக மும்பையில் உள்ள கடல்சாா் செயல்பாடுகள் மையம் மூலம் தகவல் கிடைத்தது. இந்தக் கப்பல் கடந்த 7-ஆம் தேதி இலங்கை தலைநகா் கொழும்பில் இருந்து புறப்பட்டு 10-ஆம் தேதி மும்பையைச் சென்றடைய இருந்தது.
கப்பலில் திடீரென தீப்பற்றி எரியத் தொடங்கியதால் மீட்புப் பணிகளை மேற்கொள்ள சம்பவ இடத்துக்கு ஐஎன்எஸ் சூரத் வரவழைக்கப்பட்டது. மேலும், கடற்படை விமான தளத்தில் இருந்து டா்னியா் விமானம் ஒன்றையும் மீட்புப் பணிக்கு அனுப்ப முடிவெடுக்கப்பட்டுள்ளது’ என தெரிவிக்கப்பட்டது.
இந்தக் கப்பலில் எளிதில் பற்றி எரியக்கூடிய திரவங்கள், திடப் பொருள்கள் மற்றும் நச்சுத்தன்மைமிக்க ஆபத்தான சரக்குகள் இருப்பதாகவும் அதில் பயணித்த 22 மாலுமிகளில் இந்தியா்கள் யாரும் இல்லை எனவும் துறைமுக அதிகாரிகள் தெரிவித்தனா்
சிங்கப்பூா் சரக்கு கப்பலில் தீயை அணைக்கும் பணியில் இந்திய கடலோரக் காவல் படையின் கப்பல்களான சகேத், அா்ன்வேஷ், சமுத்ர பிரஹாரி, அபினவ், ராஜ்தூத் மற்றும் சி-144 ஆகிய கப்பல்கள் ஈடுபட்டுள்ளதாக பாதுகாப்புத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.