;
Athirady Tamil News

சென்னையிலிருந்து காங்கேசந்துறைக்கு உல்லாசக்கப்பலில் வரும் சுற்றுலாப்பயணிகளை வசதிகள்!! (PHOTOS)

0

சென்னையிலிருந்து காங்கேசந்துறைக்கு உல்லாசக்கப்பலில் வரும் சுற்றுலாப்பயணிகளை வசதிகள் ஏற்படுத்திக்கொடுக்க வடக்கு மாகாண ஆளுநர் நடவடிக்கை

சென்னையிலிருந்து ஜூன் 16 முதல் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் காங்கேசந்துறைக்கு வந்து செல்லும் கோர்டிலியா உல்லாசப்பயணக்கப்பலில் வந்து செல்லும் பயணிகளுக்கான சேவைகளை வழங்குவது தொடர்பில் வடமாகாண சுற்றுலாப் பணியகம் வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் அவர்களுடன் 21 ஓகஸ்ட் 2023 அன்று ஆளுநர் அலுவலகத்தில் கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டனர். இக்கலந்துரையாடலில் யாழ் மாவட்ட காணி ஆணையாளர், யாழ் இந்திய துணைத்தூதுவர், வடமாகாண துறைமுக அதிகாரசபை தலைவர், வடமாகாண சுற்றுலாப் பணியக அதிகாரிகள் மற்றும் உத்தியோகத்தர்கள், தெல்லிப்பளை பிரதேச செயலகர், வலிகாமம் வடக்கு பிரதேச சபை செயலாளர், வடமாகாண கடற்படை அதிகாரி, பொலிஸ் அதிகாரி, யாழ் மாவட்ட தனியார் உள்ளூர் போக்குவரத்து சங்க தலைவர் முதலியோர் கலந்து கொண்டனர்.

இந்த உல்லாசப்பயணக்கப்பல் ஒவ்வொரு திங்கட்கிழமையும் சென்னையிலிருந்து புறப்பட்டு அம்பாந்தோட்டை, திருகோணமலை ஆகிய துறைமுகங்களில் தங்கி வெள்ளிக்கிழமை காங்கேசந்துறை துறைமுகத்தை வந்தடைந்து மீண்டும் சென்னையை சென்றடைகின்றது.

இக்கலந்துரையாடலில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமைகளிலும் வந்திறங்கும் சுற்றுலாப்பயணிகளுக்கான வசதிகள் ஏற்படுத்திக்கொடுக்கப்படாத நிலையே இங்கு காணப்படுவதாக வடமாகாண சுற்றுலாப் பணியகத்தினர் சுட்டிக்காட்டியிருந்தனர். அதனை தொடர்ந்து பயணிகளுக்குரிய அடிப்படை வசதிகள், உள்ளூர்ப் பயணங்களுக்குரிய வாகன ஒழுங்குகள், சுற்றுலா வழிகாட்டும் ஒழுங்குகள் என்பவற்றை செய்வதற்குரிய பொறிமுறைகள் தொடர்பாக ஆளுநர் அதிகாரிகள் மற்றும் உத்தியோகத்தர்களுடன் கலந்துரையாடினார்.

இக்கலந்துரையாடலில் தொடர்ச்சியாக சுற்றுலாப்பயணிகளுக்குரிய வசதிகளை ஏற்படுத்தும் பொறிமுறைகள் தொடர்பான கலந்துரையாடல் 22 ஓகஸ்ட் 2023 அன்று தெல்லிப்பளை பிரதேச செயலகத்தில் நடைபெறும்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.