;
Athirady Tamil News

ஏ.ஐ. துறையில் புதிய புரட்சி – எதிர்கால திட்டங்களை அறிவித்தார் முகேஷ் அம்பானி!!

0

இந்தியாவின் முன்னணி தனியார் நிறுவன குழுமம் ரிலையன்ஸ். இந்நிறுவனத்தின் ஜியோ தொலைதொடர்பு நிறுவனம் 2016 செப்டம்பரில் தனது சந்தாதாரர்களுக்கு இலவசமாக 4G எனப்படும் நான்காம் தலைமுறை இணைய சேவை மற்றும் அழைப்பு வசதியை இலவசமாக கொடுத்தது. குறிப்பிட்ட காலம் மட்டுமே இந்த சலுகை வழங்கப்பட்டாலும், பிறகு அதனை நீட்டித்து கொண்டே சென்றது. அதிரடியாக ஜியோவின் சேவை கட்டணங்கள் குறைவாக நிர்ணயம் செய்யப்பட்டு இருந்ததால், பல புதிய சந்தாதாரர்களும் இதில் இணைந்தனர்.

இதன் காரணமாக பிற தொலைதொடர்பு நிறுவனங்களும் தங்கள் சேவை கட்டணத்தை குறைத்து தர வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டனர். இந்நிலையில், உலகெங்கும் பரவி வரும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை அனைவருக்கும் கிடைக்க வைக்கும் முயற்சியில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் ஈடுபட்டு வருவதாக அதன் தலைவர் முகேஷ் அம்பானி தெரிவித்தார். இது பற்றிய அறிவிப்பை ரிலையன்ஸ் நிறுவனத்தின் 46-வது வருடாந்திர பொது கூட்டத்தில் அவர் வெளியிட்டார்.

அப்போது முகேஷ் அம்பானி கூறியதாவது.., “களைப்பே இல்லாத இந்தியாவின் சக்தியை யாரும் தடுத்து நிறுத்த முடியாது. முழுக்க முழுக்க தன்னம்பிக்கையால் தூண்டப்பட்ட ஒரு புதிய இந்தியா இது. புதுமைகளுக்கும், வளர்ச்சிக்கும், தேச முன்னேற்றத்திற்கும் செயற்கை நுண்ணறிவு பயன்படுத்தப்பட வேண்டும். உலகளாவிய போட்டி திறன் வளர்ப்பில் செயற்கை நுண்ணறிவு தவிர்க்க முடியாதது. இதனை இந்தியாவும் பயன்படுத்தி கொள்ள வேண்டும்.” “இதன்படி, 2 ஆயிரம் மெகாவாட் அளவிற்கு திறனுள்ள செயற்கை நுண்ணறிவுக்கான கணினி திட்டங்களை ரிலையன்ஸ் செயல்படுத்தும். 7 வருடங்களுக்கு முன்பு, அனைவருக்கும் இணைய சேவை தருகிறோம் என நாங்கள் வாக்களித்தோம். அதனை நிறைவேற்றியும் காட்டி இருக்கிறோம். இன்று உங்களுக்கு மீண்டும் ஒரு வாக்குறுதியை அளிக்கிறோம். எல்லோருக்கும், எங்கேயும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் கிடைக்க செய்வோம் என உறுதியளிக்கிறோம்.

இந்தியாவிற்கு ஏற்ற செயல் வடிவங்களில் செயற்கை நுண்ணறிவு கட்டமைக்கப்படும்.” “இது இந்திய மக்களுக்கும், அரசாங்கத்திற்கும், வர்த்தகங்களுக்கும், தொழில்துறைக்கும் பயன்படும் வகையில் அமையும். இதற்கான எல்லா தகவல்களும், தரவுகளும், திறனும், திறமை வாய்ந்த வல்லுனர்களுக்கும் இந்தியாவில் பஞ்சமில்லை,” என்று அவர் தெரிவித்தார். 4ஜி சேவையில் புரட்சி செய்தது போல், செயற்கை நுண்ணறிவிலும் ஜியோ கால்பதிக்க போவதால் சந்தாதாரர்கள் மட்டுமின்றி அனைவரும் உற்சாகத்துடன் ரிலையன்ஸ்-இன் அடுத்தக் கட்ட நகர்வை எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.