;
Athirady Tamil News

உக்ரைன்-ரஷ்யா இடையே பிணைக் கைதிகள் பரிமாற்றம்: நம்பிக்கை தெரிவித்த ஜெலென்ஸ்கி!

0

உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையே புதிய பிணைக் கைதிகள் பரிமாற்றம் வெற்றிகரமாக நடைபெற்றுள்ளது.

பிணைக் கைதிகள் பரிமாற்றம்
ஐக்கிய அரபு அமீரகத்தின் மத்தியஸ்தம் காரணமாக உக்ரைன் ரஷ்யா இடையே புதிய பிணைக் கைதிகள் பரிமாற்றம் வெற்றிகரமாக முடிந்துள்ளது.

இதில் இரு நாடுகளும் தலா 84 பிணைக் கைதிகளை பரிமாறிக் கொண்டுள்ளனர். இதன் மூலம் நூற்றுக்கும் மேற்பட்ட கைதிகள் இந்த ஆண்டு விடுவிக்கப்பட்டுள்ளனர்.

போர் நிறுத்தம் தொடர்பாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மற்றும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் அலஸ்காவில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ள முந்தைய நாள் இந்த கைதிகள் பரிமாற்றம் நடைபெற்றுள்ளது.

ஜெலென்ஸ்கியின் பதிவு
உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி பிணைக் கைதிகள் பரிமாற்றம் குறித்து சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ள தகவலில், இராணுவ வீரர்கள், பொதுமக்கள் உட்பட பலர் தற்போது விடுவிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் சிலர் 2014, 2016 மற்றும் 2017 ம் ஆண்டு ரஷ்யாவால் பிடிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டவர்கள் ஆகும்.

மேலும் 2022ம் ஆண்டு மரியுபோல் நகரை ரஷ்யா கைப்பற்றிய போது பிடிபட்டவர்கள் என ஜெலென்ஸ்கி குறிப்பிட்டுள்ளார்.

வரும் காலங்களில் இன்னும் பல கைதிகள் விடுவிக்கப்படுவார்கள் என்றும் ஜெலென்ஸ்கி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

அத்துடன் ஜெலென்ஸ்கி வெளியிட்ட புகைப்படங்களில், விடுவிக்கப்பட்டவர்கள் உக்ரைன் கொடியை போர்த்தியபடி மகிழ்ச்சியுடன் இருப்பதை பார்க்க முடிகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.