;
Athirady Tamil News

பள்ளத்தை உணர்ந்த பிரக்யான் ரோவர்; பாதையை மாற்றிய இஸ்ரோ – தற்போதைய நிலவரம்?!!

0

சந்திரயான் -3 நிலாவில் தரையிறங்கியதில் இருந்து வெற்றிகரமாக செயல்பட்டு வரும் நிலையில், நேற்று(ஆகஸ்ட் 27) விண்கலத்தின் பிரக்யான் ரோவர் பயணித்த பாதையில் பெரும் பள்ளத்தை உணர்ந்துள்ளது.

பாதுகாப்பான இடத்தில் இருந்து அந்தப் பள்ளத்தை உணர்ந்ததால், இஸ்ரோ விஞ்ஞானிகள் ரோவரின் பாதையை மாற்றியமைத்துள்ளனர். அதன்படி, தற்போது ரோவர் புதிய பாதையில் சீராகப் பயணிப்பதாக இஸ்ரோ தனது சமூக ஊடக பக்கத்தில் தெரிவித்துள்ளது.

முன்னதாக சந்திரயான்-3 திட்டத்தின் மூன்று இலக்குகளில் இரண்டை எட்டிவிட்டதாக இஸ்ரோ தெரிவித்திருந்தது. அதேபோல, நிலாவின் தென் துருவத்தில் உள்ள வெப்பநிலை குறித்து விக்ரம் லேண்டரில் உள்ள ChaSTE என்ற கருவி அனுப்பிய தகவல்களையும் இஸ்ரோ பகிர்ந்திருந்தது.

நேற்று (ஆகஸ்ட் 27) விண்கலத்தின் பிரக்யான் ரோவர் பயணித்த பாதையில் பெரும் பள்ளத்தை உணர்ந்துள்ளது.

சந்திரயான்-3 விண்கலத்தின் அனைத்து செயல்பாடுகளும் நல்ல முறையில் உள்ளதாக இஸ்ரோ அறிவித்துள்ளது

விக்ரம் லேண்டரில் உள்ள ChaSTE கருவியில் இருந்து முதல் கட்ட தரவுகளை இஸ்ரோ தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது.

ChaSTE கருவி சந்திரனின் மேற்பரப்பில் உள்ள வெப்பநிலை எப்படி இருக்கும் என்பதை புரிந்து கொள்ள, தென் துருவத்தைச் சுற்றியுள்ள நிலவின் மேற்பரப்பில் உள்ள மண்ணின் வெப்பநிலையை அளவிடுகிறது.

அதில் உள்ள வெப்பநிலையை அளவிடும் சாதனம் மேற்பரப்புக்கு கீழே 10 செ.மீ. அடியில் ஊடுருவிச் செல்லும் திறன் கொண்டது. அதில் வெப்பநிலையை அளவிடும் 10 சென்சார்கள் பொருத்தப்பட்டுள்ளன.

நிலாவின் தென் துருவத்தில் தரையிறங்குவது, நிலவின் மேற்பரப்பில் ரோவர் நகர்ந்து செல்வது ஆகிய 2 இலக்குகள் பூர்த்தியாகி விட்டதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது

சந்திரயான்-3 திட்டத்தின் 3 இலக்குகளில் இரண்டை எட்டிவிட்டதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.

சந்திரயான்-3 திட்டத்தின் கீழ் ஆகஸ்ட் 23-ம் தேதி மாலை 6.04 மணிக்கு திட்டமிட்டபடி நிலவில் கால் பதித்த விக்ரம் லேண்டரும், அதில் இருந்து நிலாவில் தரையிறங்கி ஊர்ந்து சென்ற பிரக்யான் ரோவரும் கச்சிதமாக தங்களது பணியைச் செய்வதாக இஸ்ரோ கூறியுள்ளது.

சந்திரயான்-3 திட்டத்தின் 3 இலக்குகள் என்ன? அவற்றில் இதுவரை எட்டப்பட்ட இலக்குகள் என்ன? என்பது குறித்து இஸ்ரோ தனது பக்கத்தில் ட்வீட் செய்துள்ளது.

அதன்படி, நிலாவின் தென் துருவத்தில் தரையிறங்குவது, நிலவின் மேற்பரப்பில் ரோவர் நகர்ந்து செல்வது ஆகிய 2 இலக்குகள் பூர்த்தியாகி விட்டதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.

சந்திரயான்-3 விண்கலத்தின் அனைத்து செயல்பாடுகளும் நல்ல முறையில் உள்ளதாக இஸ்ரோ அறிவித்துள்ளது. லேண்டர் எனப்படும் தரையிறங்கி கலனில் இருக்கும் மூன்று கருவிகள் செயல்பாட்டிற்கு வந்துவிட்டதாக இஸ்ரோ அதன் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

மேலும், ரோவர் எனப்படும் ஊர்திக்கலன் நகரத் தொடங்கிவிட்டதாகவும் தெரிவித்துள்ளது.

அதுமட்டுமின்றி உந்துவிசை கலனில் இருக்கும் ஷேப் எனப்படும் கருவியும் கடந்த ஞாயிறு முதல் இயங்கத் தொடங்கிவிட்டதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.

உந்துவிசை கலனில் உள்ள இந்தக் கருவி சூரிய மண்டலத்திற்கு வெளியே இருக்கும் பூமியைப் போன்ற தோற்றம் கொண்ட புறக்கோள்களைக் கண்டறியும் ஆய்வுகளை மேற்கொள்ளும்.

நிலாவின் காலநிலை குறித்த தரவுகளைப் பகுப்பாய்வு செய்து தரவுகளை அனுப்பும் ரோவர்

ஊர்திக்கலமான ரோவர், அதன் தாய்க்கலமான லேண்டரில் இருந்து வெளியே வந்துவிட்டதை உறுதி செய்யும் வகையில் தாயும் சேயும் ஒன்றையொன்று படமெடுத்து அனுப்பிவிட்டன.

நிலாவின் தரையில் இறங்கிவிட்ட இந்த 26 கிலோ எடை கொண்ட இஸ்ரோவின் குழந்தை என்னவெல்லாம் செய்யும்?

நிலாவின் தரைப்பரப்பில் விநாடிக்கு ஒரு செ.மீ என்ற வேகத்தில் ரோவர் நகரும். அப்படி நகரும் நேரத்தில் அது அங்குள்ள பொருட்களை ஸ்கேன் செய்துகொண்டே நகரும்.

மேலும், நிலாவின் காலநிலை குறித்த தரவுகளைப் பகுப்பாய்வு செய்து தரவுகளை அனுப்பும். அதுமட்டுமின்றி, நிலாவின் மேற்பரப்பின் தன்மை குறித்த ஆய்வுகளையும் மேற்கொள்ளும்.

எளிமையாகச் சொல்ல வேண்டுமெனில், சேய் கலமான ரோவர் நிலாவின் மண் மாதிரிகளை ஆய்வு செய்து தரைப்பரப்பின் தன்மை என்ன, வெப்பம் எந்த அளவுக்கு உள்ளது, தண்ணீர் உள்ளதா என்பன போன்ற தகவல்களைச் சேகரித்து அனுப்பும்.

இயல்பாகவே ஒரு பொருளை உடைத்தால்தான் அதற்குள் என்ன இருக்கிறது என்பதை நம்மால் தெரிந்துகொள்ள முடியும். அதேபோல் ரோவர் மண்ணைக் குடைந்து அதிலிருந்து மாதிரிகளை எடுத்து, அதை லேசர் மூலம் உடைத்துப் பார்க்கிறது.

ரோவர் மூலமாக நிலாவின் மணற்பரப்பில் என்னென்ன வகையான தாதுக்கள், கனிமங்கள் இருக்கின்றன என்பதை இஸ்ரோவால் தெரிந்துகொள்ள முடியும்.

நிலாவின் மண்ணில் என்னென்ன தனிமங்கள் உள்ளன என்பதை அதனால் கண்டறிய முடியும்.

ஊர்திக்கலன் நிலாவின் தரையைக் குடைந்து மாதிரிகளைச் சேகரித்து ஆய்வு செய்யும். அதன்மூலம் அந்த மாதிரிகளில் மெக்னீசியம், அலுமினியம், இரும்பு, சிலிகான், டைட்டானியம் என என்னென்ன தனிமங்கள் உள்ளன என்பதைக் கண்டுபிடிக்கும்.

அதோடு நிலாவின் மேற்பரப்பில் உள்ள வேதிம கலவைகளையும் தெரிந்துகொள்ள வேண்டும். ஹைட்ரஜன், ஆக்சிஜன் போன்றவற்றின் இருப்பு, கனிமங்கள் என்னென்ன உள்ளன என்று நிலாவின் மண்ணை எடுத்து ஆய்வு செய்து கண்டுபிடிக்க வேண்டும்.

இதற்கு அலைமாலை அளவி என்ற கருவியை ரோவர் பயன்படுத்துகிறது. இந்த அலைமாலை கருவியால் ஒரு பொருளில் இருக்கக்கூடிய பல்வேறு தனிமங்களைப் பிரித்துப் பார்த்து வகைப்படுத்த முடியும்.

அதன்மூலம், நிலாவின் மணற்பரப்பில் என்னென்ன வகையான தாதுக்கள், கனிமங்கள் இருக்கின்றன என்பதை இஸ்ரோவால் தெரிந்துகொள்ள முடியும். அவற்றைத் தெரிந்துகொள்வது எதிர்காலத்தில் நிலவை மனிதர்கள் மற்ற கோள்களுக்கு விண்வெளிப் பயணம் மேற்கொள்ளும்போது ஒரு தளமாகப் பயன்படுத்தக்கூட உதவும்.

இதற்குச் சான்றாக செவ்வாய் கோளுக்கான பயணத் திட்டத்தைக் கூறலாம்.

அடுத்த இரண்டு வாரங்களில் ரோவரும் லேண்டரும் அனுப்பவுள்ள தரவுகள்தான் உலகளவில் இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனத்தை ஒரு புதிய பரிமாணத்திற்குக் கொண்டு செல்லப் போகின்றன

இந்தத் திட்டத்தின் கீழ் நிலாவில் இந்தியா மேற்கொள்ளப்போகும் ஆய்வுகள் அனைத்துமே இரண்டு வாரங்களுக்கு மட்டும்தான்.

ஏனென்றால், இரண்டு வாரம் முடிந்ததும் நிலாவில் இரவு தொடங்கிவிடும். இரவு நேரத்தில் அங்கு மைனஸ் 200 டிகிரி செல்ஷியஸ் வரைக்குமே வெப்பநிலை குறையும். அந்த உறைபனிக் குளிரில் லேண்டர், ரோவர் இரண்டுமே இயங்க முடியாது.

அவை இயங்குவதற்குத் தேவையான சூரிய ஒளி அடுத்த இரண்டு வாரங்களுக்குக் கிடைக்காது. அது மட்டுமின்றி, இரவு நீடிக்கும் அந்த இரண்டு வாரங்களிலும் நிலவும் உறைபனிக் குளிர் அவற்றின் பாகங்களில் விரிசல்கள் விழச் செய்யலாம். இதனால் அவை விரைவிலேயே இறந்துவிடும்.

உறைபனிக் குளிரில் இந்தக் கருவிகளால் இயங்க முடியாது என்பதையும் தாண்டி, அவற்றின் கட்டமைப்பிலேயே சேதங்கள் ஏற்படக்கூடும். உலோகங்களால் உறைபனிக் குளிர் வெப்பநிலையைத் தாங்க முடியாது.

அதிலும் 200 டிகிரி செல்ஷியஸ் வரைக்கும் செல்லும்போது, அத்தகைய வெப்பநிலையில் அவை சேதமடையக்கூடும். இதனால், லேண்டர், ரோவரின் பாகங்கள் செயலிழக்க வாய்ப்புள்ளது.

ஆக, அடுத்த இரண்டு வாரங்களில் ரோவரும் லேண்டரும் அனுப்பவுள்ள தரவுகள்தான் உலகளவில் இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனத்தை ஒரு புதிய பரிமாணத்திற்குக் கொண்டு செல்லப் போகின்றன.

You might also like

Leave A Reply

Your email address will not be published.