;
Athirady Tamil News

இந்தியாவில் சீன நிறுவனங்கள் மீதான கட்டுப்பாடு தளருமா? மோதி – ஜின்பிங் பேசியது என்ன? !!

0

தென்னாப்பிரிக்காவின் ஜோஹன்னஸ்பர்க் நகரில் சீன அதிபர் ஷி ஜின்பிங் மற்றும் இந்திய பிரதமர் நரேந்திர மோதி ஆகியோருக்கு இடையேயான சந்திப்புக்குப் பிறகு, லடாக்கில் உள்ள Line of Actual Control-க்கு (எல்.ஏ.சி) அருகில் ராணுவத் துருப்புகளை குறைக்கவும், எல்லையில் பதற்றத்தைக் கட்டுப்படுத்தவும் இரு நாடுகளும் முயற்சிகளை தீவிரப்படுத்தியுள்ளன.

லடாக்கின் கால்வன் பள்ளத்தாக்கில் 2020-ஆம் ஆண்டு ஏற்பட்ட மோதலுக்குப் பிறகு, எல்லையில் பதற்றமான சூழல் தொடர்வதால், எல்.ஏ.சி.யின் இருபுறமும் ஆயிரக்கணக்கான வீரர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர்.

அந்த மோதலுக்குப் பிறகு, கிழக்கு லடாக்கில் எல்லைக்கு அருகே, நூற்றுக்கணக்கான கிலோமீட்டர் தூரத்திற்குப் பல இடங்களில் இந்தியா தனது பிரதேசமாகக் கருதும் பகுதிகளுக்குள் சீன இராணுவம் நுழைந்தது.

சீன அதிபர் ஷி ஜின்பிங்கும், பிரதமர் மோதியும் கடந்த புதன்கிழமை சந்தித்துப் பேசியிருந்தாலும் அது ரகசியமாக வைக்கப்பட்டிருந்தது. இந்தச் சந்திப்பு குறித்து இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் வினய் க்வாத்ரா வியாழக்கிழமை மாலை செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

வினய் க்வாத்ரா கூறுகையில், “சீன அதிபர் ஷி பின்பிங் உடனான தனது சந்திப்பில், லடாக்கில் உள்ள இந்தியா-சீனா எல்.ஏ.சி.யின் சர்ச்சைக்குரிய விஷயங்கள் குறித்து பிரதமர் மோதி தனது கவலையை தெரிவித்தார்,” என்றார்.

அவர் மேலும் கூறுகையில், “இந்தியா மற்றும் சீனா இடையேயான உறவை சீராக்க, எல்லைப் பகுதியில் அமைதியை மீட்டெடுப்பது அவசியம் என்றும், எல்.ஏ.சி-யை முழுமையாகக் கடைபிடிப்பதும், மதிப்பதும் அவசியம் என்றும் பிரதமர் மோதி கூறினார்,” என்றார்.

மேலும், எல்.ஏ.சி.யில் இருந்து துருப்புகளை திரும்பப் பெறுவதற்கான முயற்சிகளை தீவிரப்படுத்தவும், பதற்றங்களை முடிவுக்குக் கொண்டுவரவும் அந்தந்த நாடுகளின் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்களை வழங்க இரு தலைவர்களும் முடிவு செய்ததாகவும், இந்திய வெளியுறவுச் செயலாளர் கூறினார்.

இந்தப் பேச்சுவார்த்தைகள் நடந்து முடிந்த உடனே, கடந்த வாரம் இரு நாட்டு ராணுவ உயர்மட்ட ராணுவ ஜெனரல்களுக்கு இடையே இரண்டு நாள் பேச்சுவார்த்தைகள் நடந்தன

இதற்கிடையில், பெய்ஜிங்கில் கடந்த வெள்ளிக்கிழமை சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் வெளியிட்ட அறிக்கையில், பிரதமர் மோதி வேண்டுகோளின் பெயரில் சீன அதிபர் ஷி ஜின்பிங் இந்தச் சந்திப்பை நடத்தியதாகக் கூறப்பட்டிருந்தது.

அந்த அறிக்கையின்படி, “சீனா-இந்தியா உறவுகளின் தற்போதைய நிலைமை மற்றும் பரஸ்பர நலன்களின் பிற அம்சங்கள் குறித்து இரு தலைவர்களும் ஆழமான மற்றும் வெளிப்படையான உரையாடலை நடத்தினர். இரு நாடுகளும் தங்கள் பரஸ்பர உறவுகளின் நலன்களை கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும் இரு நாடுகளும் எல்லையை மதிக்க வேண்டும் எனவும் அதிபர் ஷி ஜின்பிங் கூறினார்.”

மேலும், பிராந்தியத்தில் அமைதியை உறுதிப்படுத்தும் வகையில் சர்ச்சை ஒன்றிணைந்து தீர்க்கப்பட வேண்டும் என்றும் இரு நாட்டுத் தலைவர்கள் பேசியதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.

கடந்த ஆகஸ்ட் 13 மற்றும் 14 தேதிகளில் லடாக்கில் நிலவும் எல்லைப் பிரச்சனை மற்றும் பதற்றத்தை முடிவுக்கு கொண்டு வர இரு நாட்டு ராணுவ தளபதிகளுக்கு இடையே நடந்த பத்தொன்பதாவது சுற்று பேச்சு வார்த்தையில் எந்த வெற்றியும் கிடைக்காத நிலையிலேயே இரு தலைவர்களின் இந்த சந்திப்பு நடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தப் பேச்சுவார்த்தைகள் நடந்து முடிந்த உடனே, கடந்த வாரம் இரு நாட்டு ராணுவ உயர்மட்ட ராணுவ ஜெனரல்களுக்கு இடையே இரண்டு நாள் பேச்சுவார்த்தைகள் நடந்தன. இது வழக்கத்திற்கு மாறான ஒன்றாகப் பார்க்கப்படுகிறது.

ஆனால், இந்தப் பேச்சுவார்த்தைகள் தொடர்பாக எந்த அறிக்கையும் வெளியிடப்படவில்லை.

ஆனால் தி இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ், பெயரிடப்படாத இராணுவ அதிகாரிகளை மேற்கோள் காட்டி, உயர்மட்ட இராணுவத் தளபதிகள் சர்ச்சைக்குரிய எல்லைப் பகுதிகளான டெப்சாங் மற்றும் டெம்சௌக்கில் படிப்படியாக துருப்புகளைக் குறைக்க திட்டமிட்டுள்ளனர், என்று கூறியிருந்தது. ஆனால் இதற்கு அரசியல் தலைமையின் ஒப்புதலுக்காக காத்திருக்கின்றனர்.

செப்டம்பர் 9 மற்றும் 10-ஆம் தேதிகளில் நடைபெறும் ஜி20 மாநாட்டில் கலந்து கொள்ள அதிபர் ஷி ஜின்பிங் டெல்லி வருகிறார் என்பதும் முக்கியத்துவம் வாய்ந்தது. லடாக்கில் உள்ள எல்.ஏ.சி.யில் இருந்து துருப்புகளை திரும்பப் பெறும் முடிவு எட்டப்பட்டிருந்தால், ஷி ஜின்பிங் இந்தியா வருவதற்கு முன்பு அறிவிக்கப்படும் வாய்ப்புகள் உள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.

லடாக்கின் உண்மையான நிலவரத்தை மோதி அரசு மறைப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. சீன வீரர்கள் எல்.ஏ.சி.யில் இந்தியாவின் பெரும் பகுதியை ஆக்கிரமித்துள்ளதாக அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

மறுபுறம், சீனாவுடனான பதற்றம் குறித்த கேள்விக்கு அரசாங்கம் பொதுவாக மௌனம்தான் காத்து வருகிறது என்று அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.

எல்லைப் பிரச்னைக்குப் பிறகு சீனாவுடனான இந்தியாவின் வர்த்தக உறவுகள் பாதிக்கப்பட்டுள்ளன. இந்தியாவில் சீன நிறுவனங்களை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் வகையில், முதலீடுகளை அங்கீகரிக்க தனி அரசு குழு ஒன்று உருவாக்கப்பட்டது.

இந்தியாவில் ஏற்கனவே இயங்கி கொண்டிருந்த பெரிய சீன நிறுவனங்களுக்கு, அவற்றின் விரிவாக்கத்திற்காகவும், அதிக மூலதனம் முதலியவற்றை முதலீடு செய்யவும் நிபந்தனைகள் கடுமையாக்கப்பட்டன.

சீன நிறுவனங்களின் நிர்வாகிகள் மற்றும் நிபுணர்கள் விசா பெறுவதில் நிறைய சிரமங்களை எதிர்கொண்டனர். சீனப் பொருட்களின் இறக்குமதிக்கு அதிக வரி விதிக்கப்பட்டது. ஆனால் ஜோஹன்னஸ்பர்க்கில் நடந்த சந்திப்புக்குப் பிறகு, இரு நாடுகளுக்கும் இடையிலான பதட்டமான உறவுகள் சுமூகமாகும் வாய்ப்புகள் உள்ளன. அவ்வாறு நடக்கும் பட்சத்தில், இந்தியாவில் சீன நிறுவனங்கள் மீதான கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுமா என்ற எதிர்பார்ப்பும் நிலவுகிறது.

இரு நாடுகளும் எல்லைப் பதற்றத்தை தற்காலிகமாகக் குறைத்தாலும், கிழக்கிலிருந்து மேற்கு வரையிலான எல்லைப் பிரச்சினைக்கு ஒரு கட்டத்தில் நிரந்தரத் தீர்வு காண வேண்டும் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

இந்த நீண்ட காலப் பிரச்னை இரு நாடுகளுக்கும் பெரும் சவாலாக இருப்பதாகவும், இது அவ்வப்போது பிராந்தியத்தில் பதற்றம் வடிவில் தோன்றும் என்றும் அவர்கள் கூறுகின்றனர்.

கல்வன் பிரச்னை மற்றும் கோவிட் தொற்றுநோய்க்குப் பிறகு, உலக அளவில் சீனாவுக்கு எதிராக நிலவும் எதிர்மறையான சூழல் உருவாக்கப்பட்டுள்ளது என்று டாக்டர் ரிதுஷா கூறுகிறார்

இந்த நேரத்தில் நடக்கும் எதையுமே சாத்தியக்கூறுகள் மற்றும் எதிர்பார்ப்புகளாகவே பார்க்க வேண்டும் என்கிறார் சீன விவகாரங்களில் நிபுணரான அல்கா ஆச்சார்யா.

“களத்தில் மாற்றம் ஏற்படும் வரை எந்த முன்னேற்றமும் நடந்ததாக எடுத்துக்கொள்ள முடியாது. இந்த நேரத்தில் இந்தியாவின் கோரிக்கைகளுக்கும் சீனாவின் நிலைப்பாட்டிற்கும் இடையே மிகப்பெரிய வித்தியாசம் உள்ளது,” என்கிறார் அவர்.

இருப்பினும், இருநாட்டுத் தலைவர்களின் பேச்சுவார்த்தை சாதகமான அறிகுறி என்று கூறிய அவர், “இந்தப் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டால் மட்டுமே எல்லைப் பிரச்னைக்கு தீர்வு காண முடியும்,” என்கிறார்.

இரு நாடுகளுக்கும் இடையிலான தற்போதைய பதற்றமான சூழ்நிலையை கருத்தில் கொண்டு ஜோஹன்னஸ்பர்க்கில் சீன அதிபர் ஷி ஜின்பிங் மற்றும் இந்தியப் பிரதமர் மோதி இடையேயான சந்திப்பு நிச்சயமாக சாதகமான அறிகுறி என்று டெல்லி பல்கலைக்கழகத்தின் சீன விவகாரங்களின் பேராசிரியரான ரிதுஷா திவாரி கூறுகிறார்.

பிபிசியிடம் பேசிய அவர், “லடாக்கில் எல்லைப் பிரச்னையைத் தீர்க்க ராணுவ மட்டத்தில் நடைபெற்று வரும் பேச்சுவார்த்தையில், ஆகஸ்ட் மாதப் பேச்சுவார்த்தைக்குப் பிறகு ஒரு கூட்டறிக்கை வெளியிடப்பட்டது. அதில் இருபுறமும் சாதகமான அணுகுமுறை வெளிப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது,” என்கிறார் அவர்.

“செப்டம்பர் மாதத்தின் தொடக்கத்தில் தில்லியில் நடைபெறும் ஜி-20 மாநாட்டின் போது சீன அதிபர் மற்றும் இந்தியப் பிரதமர் இடையேயான சந்திப்பு நடைபெறுவதும் முக்கியம். இது நடந்தால், அது ஒரு முன்னேற்றமாக கருதப்படும்,” என்கிறார் அவர்.

கால்வன் பிரச்னை மற்றும் கோவிட் தொற்றுநோய்க்குப் பிறகு, உலக அளவில் சீனாவுக்கு எதிராக நிலவும் எதிர்மறையான சூழல் உருவாக்கப்பட்டுள்ளது என்று டாக்டர் ரிதுஷா கூறுகிறார். இதில் இந்தியா முக்கியப் பங்காற்றுகிறது. கால்வனுக்கு முன், இந்தியா சீனாவுக்கு எதிராக இருக்கவில்லை.

சீனாவின் பொருளாதாரம் தற்போது கடினமான காலத்தை எதிர்கொண்டிருக்கிறது என்று அவர் கூறுகிறார். “இந்தியாவுடனான எல்லைப் பிரச்னையைச் சீனா உடனடியாக முடித்துக் கொண்டால், இரு நாடுகளுக்கும் இடையேயான பதற்றம் முடிவுக்கு வரும். இந்தச் சூழல் சீனாவுக்கு பொருளாதார ரீதியாக சாதகமாக அமையும்,” என்கிறார் அவர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.