இஸ்ரேல் – ஈரான் போர்! இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயர வாய்ப்பு!

ஈரானில் போர்ப் பதற்றம் காரணமாக கச்சா எண்ணெய் விலை அதிகரித்துள்ளது.
ஈரான் தலைநகர் தெஹ்ரானில் உள்ள அணுசக்தி நிலையங்கள், ராணுவ அலுவலகங்கள், ராணுவ தளவாடங்கள் உற்பத்தி நிலையங்கள் உள்ளிட்டவை மீது ஆபரேஷன் ரைசிங் லயன் (Operation Rising Lion) என்ற பெயரில் இஸ்ரேல் கடும் தாக்குதலை நடத்தி வருகின்றது.
இஸ்ரேலுக்கு எதிரான அச்சுறுத்தல் நீங்கும் வரை ஈரான் மீதான தாக்குதல் நடவடிக்கை தொடரும் என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அறிவித்துள்ளார்.
இந்த நிலையில், உலகின் மூன்றாவது கச்சா எண்ணெய் உற்பத்தியாளரான ஈரான் மீது இஸ்ரேல் போர் நடத்தி வருவதால், கச்சா எண்ணெய் உற்பத்தி பாதிக்கப்படுகிறது.
இதனிடையே, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை 12 சதவிகிதத்துக்கும் அதிகமாக உயர்ந்து, ஒரு பேரல் கச்சா எண்ணெய் விலை 77 டாலர் (சுமார் ரூ. 6,630) என்ற நிலையை எட்டியுள்ளது. போர்ப் பதற்றம் காரணமாக, விலை மேலும் உயர வாய்ப்புகள் உள்ளன.
இதன் தாக்கம் உலகம் முழுவதும் ஏற்படுவதுடன், இந்தியா உள்ளிட்ட நாடுகளிலும் பெட்ரோல், டீசல் விலை அதிகரிக்கும் சூழல் உள்ளது.
மேலும், இஸ்ரேலின் தாக்குதலுக்கு வருந்தத்தக்க பதிலடி கொடுக்கப்படும் என்று ஈரான் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை அறிக்கை வெளியிட்டு எச்சரிக்கை விடுத்துள்ளது. ஈரான் எப்போது வேண்டுமானாலும் பதில் தாக்குதல் நடத்தலாம் என எதிர்பார்க்கப்படும் நிலையில், இஸ்ரேலில் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.