;
Athirady Tamil News

கேபோனில் ஆளும் கட்சியின் ஆட்சிக்கு எதிராக ராணுவ புரட்சி!!!

0

மத்திய ஆப்பிரிக்காவின் மேற்கு கடற்கரையோர பகுதியில் உள்ள நாடு கேபோன். இதன் தலைநகரம் லிப்ரேவில். சுமார் 25 லட்சம் மக்கள் தொகையும், 3 லட்சம் சதுர கிலோமீட்டர் பரப்பளவும் கொண்ட கேபோன், தனது வருவாய்க்கு பெரும்பாலும் எண்ணெய் ஏற்றுமதியை நம்பியுள்ளது. இங்கு அதிபராக அலி போங்கோ ஒண்டிம்பா 14 ஆண்டுகளாக தொடர்ந்து பதவியில் இருந்து வந்தார். இந்நாட்டில் ஆகஸ்ட் 26 அன்று அதிபர் தேர்தல் நடைபெற்றது.

தேர்தலுக்கு முன்பே வன்முறையையும், பொய்செய்தி பரவலை தடுக்கவும் போங்கோ அரசு, இணைய முடக்கத்துடன் கூடிய ஊரடங்கிற்கு உத்தரவிட்டது. இந்த தேர்தலில் தற்போதைய அதிபரான 64-வயது அலி போங்கோ ஒண்டிம்பா, 3-வது முறையாக 64 சதவீத வாக்குகள் பெற்று வெற்றி பெற்றதாகவும், அவரை எதிர்த்த ஆல்பர்ட் ஓண்டோ ஓசா 30 சதவீத வாக்குகளை மட்டுமே பெற்றதாகவும் அந்நாட்டு தேர்தல் ஆணையம் அறிவித்தது. தேர்தலுக்கு முன்னரே தனது வெற்றியை உறுதியாக நம்பிய ஓசா, இந்த முடிவை ஏற்று கொள்ளாமல் “ஏமாற்று வேலை” என விமர்சித்தார்.

நேற்று முன் தினம், ஓசாவின் பிரச்சார மேற்பார்வையாளர் மிக் ஜாக்டேன், “வன்முறை, ரத்தமின்றி ஆட்சியை கொடுத்து விடுங்கள்” என போங்கோவிடம் தெரிவித்தார். இந்நிலையில் “மாற்றத்திற்கும், நிறுவனங்களை மீட்டெடுப்பதற்குமான கமிட்டி” எனும் அமைப்பை சேர்ந்தவர்களாக தங்களை கூறி கொண்டு, பத்திற்கும் மேற்பட்ட வீரர்கள் அரசாங்க தொலைக்காட்சியில் தோன்றி, நடந்து முடிந்த தேர்தல் ரத்து செய்யப்பட்டதாகவும், தற்போதைய ஆட்சி முடிவிற்கு வந்து விட்டதாகவும், அரசாங்கத்தின் அனைத்தும் அமைப்புகளும் கலைக்கப்பட்டதாகவும் அறிவித்தனர்.

இந்த வீரர்களுடன் நாட்டின் ராணுவ வீரர்களும், காவல்துறையை சேர்ந்தவர்களும் இருந்தனர். இவர்கள் இதனை அறிவிக்கும் போதே தலைநகர் லிப்ரேவில்லில் துப்பாக்கிச்சூடு சத்தம் கேட்டது. திடீரென கேபோன் நாட்டில் ஏற்பட்டுள்ள ஆட்சி மாற்றம், கடந்த 2017-ம் ஆண்டில் இருந்து மேற்கு மற்றும் மத்திய ஆப்பிரிக்க நாடுகளில் ஏற்படும் 10-வது ராணுவ ஆட்சி மாற்றமாகும் என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு நாளைக்கு 2 லட்சம் பேரல் எண்ணெய் உறபத்தி செய்யும் திறன் படைத்த நாடு கேபோன் என்பதும் குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.