;
Athirady Tamil News

தலையில் இடி விழுந்தும் உயிர் தப்பிய அதிசய மனிதர் – கையில் இருந்த குழந்தை என்ன ஆனது?

0

இடி தாக்கும் ஆபத்து பத்து லட்சம் பேரில் ஒருவருக்கே உள்ளது என நிபுணர்கள் கூறுகின்றனர். சரி, 2005 ஆம் ஆண்டு அமெரிக்காவின் டெக்சாஸில் ஸ்காட் நுட்சென் என்ற மாடு மேய்ப்பவருக்கு அதுதான் நடந்தது. இதுபோன்ற எல்லா சம்பவங்களையும் விட இந்த சம்பவத்தில் மிகவும் சாத்தியமில்லாத, அதிசயமான விஷயம் எதுவென்றால், தலையில் இடி விழுந்த கதையைச் சொல்ல அவர் மீண்டும் உயிர் பிழைத்து வாழ்ந்தார் என்பதுதான் அது.

பண்ணை சார்ந்த குடும்பத்தின் ஐந்தாவது தலைமுறையைச் சேர்ந்த ஸ்காட் என்ற மாடு மேய்க்கும் நபருக்கு இடியுடன் கூடிய மழையின் போது மேய்ச்சல் நிலங்களில் இருந்த அனுபவங்கள் ஏற்கெனவே பலமுறை ஏற்பட்டுள்ளன.

இருப்பினும், நீல நிறத்தில் வானம் இருந்த நிலையில், ஒரு மதிய வேளையில், தன் மகளைக் கையில் வைத்திருந்த போது அவரை இடி தாக்கும் என அவர் நினைத்துப் பார்த்தது கிடையாது.

ஸ்காட், ட்ரேசி மற்றும் இப்போது 19 வயதான ஹெய்லி ஆகியோர் பிபிசி வானொலி நிகழ்ச்சியான அவுட்லுக்கிடம் பேசிய போது, அவர்களது அசாதாரண அனுபவம் பற்றிப் பேசினர். அந்த இடி தாக்கிய சம்பவம் அவர்கள் மூன்று பேரின் வாழ்க்கையையும் ஒட்டுமொத்தமாக மாற்றியதாகவும் அப்போது அவர்கள் தெரிவித்தனர்.

“எனக்கு என் மனைவியும், அவர் என்னைக் கூப்பிட்டு, ‘உங்களுக்கு ஒரு ஆச்சரியமான விஷயம் இருக்கிறது, கொட்டகைக்கு வாங்க’ என்று கூப்பிட்டதும் நன்றாக நினைவிருக்கிறது. அதையடுத்து, நான் அங்கே சென்றேன். அப்போது அவர் அங்கே எங்களது மகள் ஹெய்லியைக் கையில் பிடித்துக் கொண்டிருந்தார். மேலும், அவர் அப்போது டிராக்டரை நன்றாகக் கழுவி முடித்திருந்தார்,” என ஸ்காட் நினைவு கூர்ந்தார். .

“பின்னர் நாங்கள் டிராக்டரைப் பார்த்துக் கொண்டிருந்தோம். அது பளபளப்பாக மின்னிக்கொண்டிருந்தது. அப்போது, குழந்தை ஹெய்லியை டிரேசி என்னிடம் தந்தார். அதனால் நான் ஹெய்லியை என் இடது கையால் வைத்திருந்தேன். டிரேசி என் வலதுபுறத்தில் இருந்தார்.”

“வானம் நீல நிறத்தில் இருந்தது, சுமார் 15 மைல் தொலைவில் மழை பெய்துகொண்டிருந்ததை நான் பார்த்தேன். ஆனால் நாங்கள் இருந்த இடத்தில் வெயில் பரவியிருந்தது. எங்களைச் சுற்றி கோழிகள், குதிரைகள் மற்றும் நாய்கள் இருந்தன.”

தொலைவில் வானம் கருமேகங்களுடன் இருந்த போதிலும்,​​”எங்களுக்கு மேலே இருந்த வானம் எப்படித் தோன்றியது என்றால், இடியுடன் கூடிய மழைக்கான உடனடி அச்சுறுத்தல் எதுவும் இல்லை என்று காட்டும் விதத்தில் இருந்தது,” என்று டிரேசி கூறினார்.

இருப்பினும், “நாங்கள் சாதாரணமாக அதுவரை கண்டிராத அளவுக்கு பிரகாசமான ஒளியுடன் கூடிய மின்னல் அல்லது இடிச்சத்தம் இருந்ததாக எங்கும் உணரவில்லை,” என்று ஸ்காட் தொடர்ந்தார்.

நீல நிறமாகத் தோன்றிய வானில் தொலைவான பகுதியில் பயங்கர மின்னல்கள் தோன்றியதாக ஸ்காட் தம்பதியினர் கூறுகின்றனர்.

“அது ட்ரேசியின் கண் முன்னே என்னைத் தாக்கியது. நான் கைகளில் குழந்தையைப் பிடித்திருந்த போது அவளது உடலைச் சுற்றி எனது கைகளைத் தாண்டிச் சென்ற அந்த மின்னல் என் தலை வழியாகச் சென்றது,” என்று ஸ்காட் நினைவு கூர்ந்தார்.

“குதிரைகள் ஒன்றோடொன்று மோதின. சிறிது நேரம் எல்லாம் குழப்பமாக இருந்தது.”

தொடர்ந்து பேசிய அவர், அந்தச் சம்பவத்தைப் பற்றி வெளிப்படையாக எதுவும் நினைவில் இல்லாத ஹெய்லி அப்போது ஒரு வயது குழந்தையாக இருந்தார் என்றும், ஆனால், அந்த ஒரு வயது குழந்தைக்கு எவ்விதத்திலும் பாதிப்பை ஏற்படுத்தாத இடி அவரை மட்டும் தாக்கியது அவருக்கு மிகுந்த ஆச்சரியத்தை ஏற்படுத்தியது என்றும் கூறினார்.

அதே நேரம், டிரேசியை நேரடியாக இடி தாக்காத நிலையிலும் அதன் சில பாதிப்புகளை அவர் உணர்ந்ததாகக் கூறுகிறார்.

“எனது மூக்கில் மின்சாரம் தாக்கியதைப் போன்ற ஒரு அதிர்ச்சி உணர்வு ஏற்பட்டது. நீங்கள் எப்போதாவது ஒரு லைட் சுவிட்சை இயக்கும் போது, மின்சாரம் பாய்ந்து ஒரு சிறிய நடுக்கத்தை உணர்ந்திருந்தால், அதே உணர்வு என் மூக்கில் ஏற்பட்டது,” என்று அவர் கூறுகிறார்.

“பல நாட்கள், நான் கண் சிமிட்டும்போது, அந்த மின்னல் ​​ஒளியின் ஃப்ளாஷ்கள் என் கண்களுக்குத் தெரிந்துகொண்டே இருந்தன. அந்த வெளிச்சம் அவ்வளவு வலிமையானது.”

“நாங்கள் அதிர்ச்சியுடன் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டோம். அப்போது என்னைப் பார்த்த அவர், எனக்கு ஏதாவது பாதிப்பு ஏற்பட்டதா என்றும், நான் நலமாகத்தான் இருந்தேனா என்றும் கேட்டார். அதற்குப் பதில் அளித்த நான், ‘நான் நன்றாக இருக்கிறேன். ஆனால், என்னை மின்சாரம் தாக்கியதை உணர்ந்தேன். ஆனால் பெரிய காயம் எதுவும் எனக்கு ஏற்படவில்லை’ என்று சொன்னேன். அவர் என்னைப் பற்றி அப்போது அதிகம் கவலைப்பட்டதாகவே தோன்றியது,” என டிரேசி நினைவு கூர்கிறார்.

அந்த சம்பவத்துக்குப் பின்னர் அவர்கள் இருவரும் எப்போதும் போல அவர்களது இயல்பு வாழ்க்கையைத் தொடர்ந்தனர்.

“நாங்கள் அன்றைய தினத்தில் தொடர்ந்து எங்கள் அன்றாடப் பணிகளை மேற்கொண்டு வந்தோம். அப்போது, எங்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்பட்டதாகத் தெரியவில்லை,” என்று டிரேசி கூறுகிறார். அவர்கள் வீட்டிற்குள் நுழைந்தபோது, ​​​​மின்னல் தாக்குதலின் விளைவாக சில உபகரணங்கள் பாதிக்கப்பட்டிருந்ததை அவர்கள் பார்த்தார்கள்.
ஒரு ஜாம்பியைப் போன்ற தோற்றம்

ஆனால் ஸ்காட்டுக்கு என்ன பாதிப்பு ஏற்பட்டது என்பதற்கான அறிகுறிகள் தோன்றுவதற்கு அதிக நேரம் எடுக்கவில்லை.

“நேரம் செல்லச் செல்ல எனக்கு வலியை ஏற்படுத்தியது. அப்போதுதான் தீ விபத்தில் சிக்கினால் எப்படி உடலில் எரிச்சல் ஏற்படுமோ, அதைப் போன்ற உணர்வுகள் தோன்றத் தொடங்கின,” என்று ஸ்காட் கூறுகிறார்.

மறுநாள் அவர்களது குழந்தை ஹேலிக்கு பிறந்த நாள் கொண்டாட திட்டமிட்டிருந்த நிலையில், அதற்காக கேக் வாங்க, குழந்தையை எடுத்துக்கொண்டு டிரேசி நகரத்துக்குச் சென்றார். அதன் பின் தான் ஸ்காட்டுக்கு வலி அதிகமாகி ஒரு கட்டத்தில் அவர் உடைந்து போகத் தொடங்கினார்.

முதலில் குதிரைச் சவாரி செய்தது முதல் பெரும்பாலான விஷயங்களை மின்னல் தாக்கிய பின் ஸ்காட் மறந்துவிட்டார்.

“நான் ஒன்றரை மணிநேரம் வீட்டை விட்டு வெளியேறினேன். பின்னர் வீட்டுக்குத் திரும்பி வந்தபோது, ​​ஸ்காட் ஒரு ஜாம்பியைப் போன்ற நிலையில் இருந்தார்,” என்றார் டிரேசி.

“அவர் கண்களுக்குக் கீழே கருமையாக இருண்ட வட்டங்கள் இருந்தன. அவர் மிகவும் குழப்பமடைந்தவரைப் போன்று தோன்றினார். மேலும், அவர் பேசிய போது, அவரது சொற்கள் மழுங்கடிக்கப்பட்ட சொற்களாக இருந்தன. ஒரு வாக்கியத்தைக் கூட ஒன்றாக இணைத்துப் பேசமுடியவில்லை. பேசுவதற்கே மிகவும் சிரமப்பட்டார். எழுந்து நிற்கவும் முடியாமல் தவித்தார். சொல்லப்போனால், கிட்டத்தட்ட குடிகாரரைப் போல் இருந்தார்.”

“அவரை அப்படிப் பார்த்ததும் நான் அதிர்ந்து போனேன். உடனே மருத்துவமனைக்கு போன் பண்ணினேன். அவரை மருத்துவமனைக்கு அழைத்து வரச்சொன்னார்கள்.”

ஸ்காட் உடல்நிலை சரியில்லாமல் இருப்பதை மருத்துவர்கள் பார்த்தார்கள். ஆனால் அவருக்கு என்ன பிரச்னை என்று அவர்களால் அடையாளம் காண முடியவில்லை. அதேநேரம், அவர் சாதாரண மூளை அதிர்ச்சியால் அவதிப்படுகிறார் என்று முடிவெடுத்து, வீட்டிற்குப் போகச் சொல்லிவிட்டார்கள்.

“எங்களுக்குச் சிறுவயது என்பதால் எல்லாம் சரியாகிவிடும் என்று நாங்கள் நம்பினோம். அதனால் நாங்கள் வீட்டிற்குச் சென்றோம். பின்னர்தான் அவர் மருத்துவமனையை விட்டு வெளியேறியிருக்கக் கூடாது என்பதை நான் உணர்ந்தேன். ஏனென்றால் அவரை கண்காணிப்பில் வைக்க வேண்டியது அவசியம் என எனக்குத் தோன்றியது,” என்று டிரேசி கூறுகிறார்.

அவசர சிகிச்சை அறையில் அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் மீது டிரேசிக்கு எந்தக் கோபமும் ஏற்படவில்லை.

ஏனென்றால், “மின்னல் தாக்கிய ஒரு நோயாளியை மருத்துவர்கள் பார்த்ததே இல்லை. அவர்களைப் பொறுத்தளவில் மின்னல் தாக்கி பாதிக்கப்பட்டவர்கள் இறந்துவிட்டனர்- அதைத் தவிர அவர்கள் உயிர் பிழைக்க வாய்ப்பு இல்லை என்றே நினைத்தனர்,” என்று ஸ்காட் சுருக்கமாக கூறுகிறார்.

ஸ்காட் வீட்டிற்குச் செல்லத் தயங்கவில்லை. ஏனென்றால் அவர் ஏற்கனவே பல முறை காயம் பட்டிருந்ததால் அதைக் கடந்து செல்லப் பழகிவிட்டதாக விளக்குகிறார்.

“நான் ஏற்கெனவே பல முறை எலும்பு உடைதல் போன்ற பல வலிகளை அனுபவித்துள்ளேன். எனக்கு 60 முறை எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. அதே போல் 9 முறை மூளை அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. என் முகம், என் முதுகு, என் தோள்பட்டை, என் முழங்கால் ஆகியவற்றில் உலோகம் பொருத்தப்பட்டிருக்கிறது. இது போன்ற அனுபவங்கள் குதிரையில் ஏறி மாடு மேய்ப்பவர்களுக்கு சகஜமான ஒன்றாகவே மாறிவிட்டது. அதனால் இந்தப் பிரச்னைகளைச் சமாளிப்பது எளிதான ஒன்றுதான்,” என ஸ்காட் விளக்கினார்.

அவரது நிலை அவ்வளவு மோசமாக இருந்தபோதிலும், அடுத்த நாள் தனது மகள் ஹெய்லியின் முதல் பிறந்தநாள் கொண்டாட்டத்தை ரத்து செய்ய மறுத்துவிட்டார்.

மகளுக்கும், கணவருக்கும் அடிப்படைக் கல்வியைக் கற்றுக்கொடுத்து ஆசிரியையாகவும் பணியாற்றியுள்ளார் டிரேசி.

இருப்பினும், “நாட்கள் செல்லச் செல்ல, அவரது அறிகுறிகள் மோசமாகிவிட்டன ” என்று ஸ்காட்டின் மனைவி கூறுகிறார். எனவே உதவிக்காக அவர் சிறப்பு மருத்துவ நிபுணர்களை தொடர்பு கொள்ளவேண்டிய நிலை ஏற்பட்டது.

“ஆனால், அவருக்கு எப்படி சிகிச்சை அளிப்பது என்று மருத்துவர்களுக்குத் தெரியவில்லை,” என்று டிரேசி கூறுகிறார். “அவர்கள் பல வகையான ஸ்கேன் பரிசோதனைகளை மேற்கொண்டனர். அவரது மூளை அலைகளை பகுப்பாய்வு செய்தனர். அப்போது, அவை அசாதாரணமானவை என்றும், வழக்கத்துக்கு மாறானவை என்பதும் அந்த பகுப்பாய்வில் தெரியவந்தது.”

“மருத்துவ நிபுணர்கள் எங்களிடம் பேசியபோது, ‘ஸ்காட்டிற்கு சிகிச்சை அளிப்பது உங்கள் செல்போனை அணைத்துவிட்டு, அதை மீண்டும் செயல்படுத்துதைப் போன்றது தான் இது. மனித மூளை அப்படித்தான் இருக்கும். ஒவ்வொரு மூளை பாதிப்பும் வித்தியாசமானது,’ என்றனர்.”

அதாவது, ஸ்காட்டின் மூளையை “ரீசெட்” செய்யவேண்டும். அவரது நினைவாற்றலை இழக்கச் செய்து, மீண்டும் பலவற்றைக் கற்றுக்கொள்ளச் செய்வது தான் அந்த சிகிச்சை. சிகிச்சைக்குப் பின்னர் அவர் படிக்கவும் எழுதவும் கற்றுக் கொள்ள வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டார்.

அவரது நுரையீரலில் திரவம் அதிகரித்தது உள்ளிட்ட மேலும் சில உடல்நலக் கோளாறுகளும் அவருக்கு பாதிப்பை ஏற்படுத்தின.

“நாங்கள் திரைப்படங்களுக்குச் சென்றிருந்தோம். சிறிது நேரமாவது வீட்டை விட்டு வெளியேற முயற்சித்தோம்,” என்று ஸ்காட் நினைவு கூர்ந்தார். “நாங்கள் பாப்கார்ன் சாப்பிட்டுக்கொண்டிருந்தோம். அப்போது பற்களில் இருந்த சிறிய குழிகளை அடைக்கப் பயன்படுத்தப்பட்டிருந்த உலோகங்கள் கழன்று விழ ஆரம்பித்தன,” என்றார் ஸ்காட்.

மேலும், அவருக்கு நீண்ட நாட்களாக இதயம் தொடர்பான பாதிப்பும் இருந்தது.

“ஆனால், என் தலையில் மின்னல் தாக்கிய பகுதியில் தான் நீண்ட காலத்துக்கு அதிக வலி ஏற்படுத்தும் பிரச்னையாக இருந்தது,” என்றார் அவர்.

“இருப்பினும், இப்போது என் இதயம் நன்றாக இருக்கிறது. என் நுரையீரலும் நன்றாக இருக்கிறது. எல்லாவற்றுக்கும் பிறகும் எதையும் நாங்கள் எதிர்மறையாகப் பார்த்ததில்லை,” என்று அவர் கூறினார். “ஏனென்றால் நான் டிரேசியுடன் அதிக நேரம் செலவிட வேண்டும்.”

“இது அவருக்கு மிகவும் கடினமாக இருந்தது. அவர் எல்லாவற்றையும் கவனித்துக் கொள்ள வேண்டியிருந்தது. பண்ணையைக் கவனித்துக் கொள்வது, இரண்டு குழந்தைகளை வளர்ப்பது மற்றும் எனக்கு எழுதவும் படிக்கவும் கற்றுக்கொடுப்பது என எப்போதும் அதிக வேலைகளை அவர் செய்யவேண்டியிருந்தது.”

ஆனால், டிரேசி, அந்த காலகட்டம் கடினமாக இருந்தாலும் அதை மகிழ்ச்சியுடன் திரும்பி பார்க்கிறார்.

“அவர்கள் விக்கிள்ஸ் தொடரைப் பார்ப்பதை நான் விரும்பினேன்,” என்று டிரேசி புன்னகைக்கிறார். அத்தொடர், “அடிப்படையில் குழந்தைகளுக்கான தொடக்கப் பள்ளி விஷயங்களை” கற்பித்த நிகழ்ச்சி என்று ஹெய்லி விளக்குகிறார்.

“அவரும் என்னைப் போலவே மிகவும் ஆர்வமாக இருந்தார். ஏனென்றால் அவர் அனைத்தையும் மீண்டும் கற்றுக்கொள்ள வேண்டிய தேவை ஏற்பட்டது,” என்கிறார் ஹெய்லி.

துயரங்கள் வரும் போது, அவற்றிலிருந்து தப்ப முயலாமல், அவற்றை எதிர்கொண்டு வெற்றிபெறவேண்டும் என்கின்றனர் ஸ்காட் தம்பதியினர்.

அந்த அடிப்படை அறிவை மீண்டும் பெற அவருக்கு ஆறு முதல் எட்டு மாதங்கள் ஆனது என்று அவரது மனைவி டிரேசா கூறுகிறார்.

ஆனால் அவரது நினைவிலிருந்து அழிக்கப்பட்ட அவரது கடந்த காலத்தின் பெரும்பகுதியை மீண்டும் நினைவுபடுத்த அவருக்கு அதிக காலம் தேவைப்பட்டது.

” நான் நிறைய நல்ல நினைவுகளை இழந்துவிட்டேன். எனக்கு ஒரு சிறந்த குழந்தைப் பருவம் இருந்தது. பின்னர் திருமணம், ஹெய்லி, என் முதல் குதிரையில் சவாரி செய்தது என பெரும்பாலான நினைவுகள் மறந்துபோய்விட்டன.”

“நான் எனது சொந்த ஊருக்குத் திரும்பி, அங்குள்ள மக்களைப் பார்க்கும்போது, ​​​​அவர்களை என்னால் அடையாளம் கண்டுபிடிக்க முடியவில்லை,” என்று அவர் கூறுகிறார்.

இருப்பினும், இழந்த அந்த நினைவுகளை ஒன்றாக இணைக்க உதவுவதில் டிரேசி முக்கிய பங்கு வகித்தார். அவர்கள் சேமித்து வைத்திருந்த புகைப்படங்களின் உதவியுடன் அவரது கடந்த காலத்தைப் பற்றிய கதைகளை அவருக்குச் சொல்லிக்கொடுத்தார்.

“இன்று அவருக்கு சில விஷயங்கள் நினைவில் இருக்கிறதா அல்லது எங்கள் திருமணத்தைப் போன்ற கதையை நான் பலமுறை அவரிடம் சொன்னேனா என்பதெல்லாம் அவருக்குத் தெரியவில்லை என்று அவர் கூறுகிறார். இருப்பினும் நான் அவருக்கு ஏராளமான புகைப்படங்கள் மற்றும் கதைகள் மூலம் விளக்கியிருக்கிறேன். கதை சொல்வதில் எனக்கு நல்ல ஆர்வம் இருக்கிறது,” என்கிறார் டிரேசி.

“அந்த நினைவுகள் எவ்வாறு திரும்பி வருகின்றன என்பதைப் பற்றி எனக்கு கவலையில்லை. அவை மீண்டும் வர வேண்டும் என்று நான் விரும்புகிறேன்,” என்று ஸ்காட் கூறுகிறார்.

கெட்டதை நல்லதாக மாற்றிவிட்டதாக இருவரும் நம்புகிறார்கள்.

“அந்த மின்னல் எங்களுக்கு தீங்கு விளைவிக்கவில்லை. எங்கள் கதையை மற்றவர்களுக்குச் சொல்ல ஒரு வாய்ப்பாக மாறியது. மேலும் எந்தப் பிரச்னை வந்தாலும் அதைச் சமாளிக்கலாம் என்ற பாடத்தை நான் அனைவருக்கும் புரிய வைத்தேன். ஏனென்றால் இதுபோன்ற பிரச்னை மிக்க நேரங்களை நீங்கள் கடந்து செல்லலாம்,” என்று டிரேசி கூறுகிறார்.

“இந்த விஷயங்கள் ஏன் நடக்கின்றன என்று எங்களுக்குத் தெரியவில்லை. ஆனால் நாங்கள் அதிலிருந்து தப்பி ஓடுவதற்குப் பதிலாக அதை எதிர்கொள்கிறோம்.”

You might also like

Leave A Reply

Your email address will not be published.