;
Athirady Tamil News

மொராக்கோ நிலநடுக்கம்: கிராம மக்கள்தொகையில் பாதிப்பேர் மரணம்; மீதிப்பேரை காணவில்லை!!

0

வட ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான மொராக்கோவில் கடந்த வெள்ளிக்கிழமை நள்ளிரவு பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது.

ரிக்டர் அளவுகோலில் 6.8 ஆக பதிவான நிலநடுக்கத்தில் சிக்கி 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். நூற்றுக்கணக்கான பொதுமக்கள் காயமடைந்துள்ளனர்.

ஆயிரக்கணக்கானோரின் வீடுகள் சேதமடைந்துள்ளதால் அவர்கள் இருப்பிடத்தை இழந்து தவித்து வருகின்றனர்.

சுமார் 20 நிமிடங்கள் இடைவெளியில் இருமுறை ஏற்பட்ட நிலநடுக்கம் மொராக்கோ நாட்டு மக்களின் இயல்பு வாழ்க்கையை தலைக்கீழாக புரட்டிப் போட்டுள்ளது.

மொராக்கோவில் நிலநடுக்கத்தால் ஏற்பட்டுள்ள கொடுமையான பாதிப்புகளின் ஒரு சாட்சியாக திகழ்கிறது தஃபேகாக்டே கிராமம்.

நிலநடுக்கதால் ஏற்பட்ட இடிபாடுகளுக்கு இடையே நாங்கள் நடந்து சென்றபோதுதான், இதில் சிக்கியவர்கள் யாரும் காயமின்றி தப்பித்திருக்க முடியாது என்பதை எங்களால் உணர முடிந்தது என்றனர் இந்த இயற்கை பேரிடரில் தப்பி உயிர்பிழைத்த கிராம மக்கள்.

“காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக ஒருவேளை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கலாம் அல்லது இறந்திருக்கலாம்” என்கின்றனர் தஃபேகாக்டே கிராம மக்கள்.

“இங்கு வசித்துவந்த கிராமவாசிகள் 200 பேரில் 90 பேர் இறந்துவிட்டனர் என்பது உறுதி செய்யப்பட்டுவிட்டது. பலர் காணாமல் போய் உள்ளனர். தங்களை காப்பாற்றி கொள்ள அவர்களுக்கு நேரமில்லாததால் அவர்கள் தப்பிக்க வாய்ப்பில்லை” என்று இடிபாடுகளுக்கு இடையே நடந்து சென்றபடி கூறுகிறார் ஹசன் என்ற கிராமவாசி.

தனது மாமா இன்னும் இடிபாடுகளுக்கு இடையே சிக்கி இருப்பதாக கூறும் ஹசன், அவர் உயிருடன் மீட்கப்படுவார் என்ற நம்பிக்கை இல்லை எனவும் கூறுகிறார்.

நிலநடுக்கத்தின் விளைவாக குடியிருப்புகளின் இடிபாடுகளுக்குள் சிக்கித் தவிப்பவர்களை காப்பாற்ற நவீன தொழில்நுட்ப இயந்திரங்கள் இங்கு இல்லை என்றும் அவர் குற்றம்சாட்டுகிறார்.

அத்துடன், மீட்புப் பணிகளில் நிபுணத்துவம் பெற்ற வெளிநபர்களும் இங்கு வரவில்லை எனவும் ஹசன் வேதனை தெரிவிக்கிறார்.

“குடியிருப்புகளை இழந்து தவித்துவரும் எங்களுக்கு அரசாங்கத்தின் உதவி தேவைப்படுகிறது. ஆனால், அரசின் உதவிகள் எங்களுக்கு மிகவும் தாமதமாகவே கிடைத்து வருகிறது” என்றும் வேதனை தெரிவிக்கிறார் ஹசன்.

இதுபோன்ற இக்கட்டான சூழலில், மொராக்கோ அரசாங்கம் சர்வதேச சமூகத்தின் உதவியை அவசியம் பெற வேண்டும். ஆனால் அரசின் சுயகௌரவம் அதை தடுக்கிறது என்றும் அவர் ஆதங்கப்படுகிறார்.

இப்படி தஃபேகாக்டே கிராமத்தில் ஒருபுறம் வேதனையும், ஆதங்கமும் நிறைந்திருக்க, மறுபுறம் கிராமவாசிகள் அனைவரும் ஒரு நபரை ஆசுவாசப்படுத்தி கொண்டிருந்தனர்.

அவரது பெயர் அப்து ரஹ்மான். நிலநடுக்கத்தில் வீடு இடிந்து விழுந்ததில் தனது மனைவி மற்றும் ஆண் குழந்தைகளை பறிகொடுத்துவிட்டு தவித்து தரும் ரஹ்மானுக்கு ஆறுதல் கூறிக் கொண்டிருந்தனர் கிராம மக்கள்.

ஆனால் அவர்களின் ஆறுதல் வார்த்தைகளில் சமாதானம் அடையாதவராக இருந்தார் ரஹ்மான்.

“அங்கு தான் எங்கள் வீடு இருந்தது. தற்போது அது கட்டட இடிபாடுகளின் ஒரு பகுதியாக (குப்பையாக) மாறிவிட்டது,” என்று தான் குடும்பத்துடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த வீட்டை கண்ணீர் மல்க சுட்டிக்காட்டினார் அவர்.

“பூகம்பத்தில் எங்கள் வீடு இடிந்து அனைத்தும் போய்விட்ட பிறகு தற்போது என்னிடம் எஞ்சியிருப்பது வெள்ளை நிறப் போர்வைகளும், சில மரப்பொருட்களும்தான்” என்று வேதனையுடன் கூறுகிறார் ரஹ்மான்.

நிலநடுக்கம் ஏற்பட்ட செய்தி அறிந்தபோது தான் பெட்ரோல் பங்கில் வழக்கம்போல் பணியில் இருந்ததாக கூறும் ரஹ்மான், மூன்று கிலோமீட்டர் (1.9 மைல்கள்) தொலைவில் இருந்த தனது வீட்டுக்கு ஓடி வந்ததாக கூறுகிறார்.

“வீட்டை அடைந்தபோது, எல்லாம் இடிந்து விழுந்திருந்தன. மனைவி, பிள்ளைகளை காணவில்லை. பதற்றத்துடன் என் பிள்ளைகளை பேர் சொல்லி கதறினேன். ஆனால் அவர்களிடம் இருந்து எந்த பதிலும் இல்லை. நேற்று தான் அவர்களின் சடலத்தை புதைத்தோம்,” என்று கண்ணீர் மல்க கூறுகிறார் அப்து ரஹ்மான்.

“நாங்கள் அவர்களை கண்டெடுத்தபோது, எனது பிள்ளைகள் மூன்று பேரும் ஒருவர் மீது ஒருவர் உறங்கிய நிலையில் இருந்தனர். இரவு தூங்கியிருந்த நிலையிலேயே அவர்களை நிலநடுக்கம் பலிகொண்டு விட்டது” என்று கவலை தோய்ந்த முகத்துடன் அவர் கூறுகிறார்.

நிலநடுக்கத்தில் தனது 10 வயது பெண் குழந்தையை பறிகொடுத்து தவிக்கும் பெண்

தாஃபேகாக்டே கிராமத்தை வெளியுலகத்துடன் இணைக்கும் வளைந்த மலைப்பாதையில் அமைக்கப்பட்டுள்ள பெரிய கூடாரத்தில் டஜன் கணக்கான குடும்பத்தினர் ஒன்றாக வீற்றிருக்கின்றனர்.

அந்த முகாமின் ஒவ்வொரு திசையில் இருந்தும், தங்களது உறவுகளை இழந்து தவிக்கும் பொதுமக்களின் அழுகுரல்கள் ஒலித்துக் கொண்டிருக்கின்றன.

கட்டட இடிபாடுகளுக்குள் இருந்து கலீஃபா எனும் 10 வயது சிறுமியின் உடல் சமீபத்தில் கண்டெடுக்கப்பட்டது. இதையறிந்ததும் முகாமில் இருந்த அவரது குடும்பத்தினர கதறி அழுதனர்.

இதை கண்டு தங்களது உறவுகளை இழந்து தவிக்கும் பிற குடும்பத்தினரும் கண்ணீர்விட்டு கதறவே, அந்த இடம் முழுவதும் சோகம் சூழ்ந்ததாக மாறி உள்ளது.

மொராக்கோவில் அண்மையில் ஏற்பட்ட நிலநடுக்கம் ஏற்படுத்தி உள்ள பெரும்பாதிப்பை அட்லஸ் மலைப் பகுதிகளில் அமைந்துள்ள பல்வேறு கிராமங்களில் காண முடிகிறது.

இந்த மலைக்கிராமங்களில் வாழும் பாரம்பரிய சமூக மக்கள் நவீன உலகின் அழுத்தங்களுக்கு ஆளாகாமல் வாழ்ந்து வரலாம். ஆனால். சர்வதேச சமூகத்திடம் இருந்து அவர்களுக்கு உதவிகள் கிடைக்க வேண்டியதே அவர்களின் தற்போதைய உடனடி தேவையாக உள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.