;
Athirady Tamil News

சீக்கியர் கொலையில் இந்தியாவை தொடர்புபடுத்தி பேசிய கனடா பிரதமர் ட்ரூடோ – என்ன காரணம்?!

0

கனடாவுக்கும் இந்தியாவுக்குமான உறவில் பதற்றம் மேலும் அதிகரித்துள்ளது.

கனடாவைச் சேர்ந்த சீக்கிய தலைவரான ஹர்தீப் சிங் நிஜ்ஜார் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தின் பின்னணியில் இந்திய அரசு இருக்கலாம் என அந்நாட்டின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார். இந்திய தூதரக அதிகாரியையும் கனடா வெளியேற்றியுள்ளது.

கனடாவின் குற்றச்சாட்டை இந்திய அரசு மறுத்துள்ளது. கனடா தூதரகத்தின் மூத்த அதிகாரி நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.

ஜஸ்டின் ட்ரூடோவின் குற்றச்சாட்டுகள் ‘மிகவும் கவலைக்குரியவை’ என்று அமெரிக்காவின் வெள்ளை மாளிகை கூறியுள்ளது.

கனடாவின் “கடுமையான” குற்றச்சாட்டு குறித்து அந்த நாட்டுடன் தொடர்பில் இருப்பதாக பிரிட்டன் கூறியுள்ளது.

கனடா அதிகாரிகள் தொடர்ந்து புலனாய்வு செய்து வருவதால் இதுபற்றி மேலும் கருத்து தெரிவிப்பது சரியாக இருக்காது என்று பிரிட்டன் அரசு செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார்.

கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவில், கடந்த ஜூன் 18ஆம் தேதியன்று சீக்கிய குருத்வாராவுக்கு வெளியே நிஜ்ஜார் சுட்டுக் கொல்லப்பட்டார்.

அவரது மரணத்திற்கும் இந்திய அரசுக்கும் இடையே ஒரு “நம்பகமான” தொடர்பு இருப்பதை கனடா உளவுத்துறை கண்டுபிடித்துள்ளது என்று ட்ரூடோ கூறினார்.

அண்மையில் இந்தியாவின் தலைநகர் புதுதில்லியில் நடந்த ஜி-20 மாநாட்டில் இந்திய பிரதமர் நரேந்திர மோதியிடம் இந்த விவகாரத்தை எழுப்பியதாக கனடா பிரதமர் ட்ரூடோ கூறினார்.

“கனடா மண்ணில் ஒரு கனடா குடிமகன் கொல்லப்பட்டதன் பின்னணியில் எந்தவொரு வெளிநாட்டு அரசாங்கத்தின் தலையீடும் இருப்பதை ஏற்றுக் கொள்ளமுடியாது என்றும் அது தங்கள் நாட்டின் இறையாண்மையை மீறுவது,” என ஜஸ்டின் ட்ரூடோ திங்கள் கிழமையன்று ஹவுஸ் ஆஃப் காமன்ஸில் கூறினார்.

“இது சுதந்திரமான, வெளிப்படையான மற்றும் ஜனநாயக சமூகங்களின் அடிப்படை விதிகளுக்கு முரணானது.” என்று கூறினார்.

ஆனால் நிஜ்ஜார் கொலையில் தங்களுக்கு எந்த தொடர்பும் இல்லை என்று இந்தியா முன்பு மறுத்திருந்தது.

கடந்த ஜூன் மாதம் 18ஆம் தேதியன்று முகமூடி அணிந்த இரண்டு பேர் துப்பாக்கிகளை கொண்டு சுட்டதில், காரிலிருந்த நிஜ்ஜார் இறந்தார்

ட்ரூடோவின் கருத்தைத் தொடர்ந்து, இந்த சம்பவம் தொடர்பாக இந்திய தூதரக அதிகாரி பவன் குமார் ராய், கனடாவிலிருந்து திங்களன்று வெளியேற்றப்பட்டதாக அந்நாட்டின் வெளியுறவு அமைச்சர் மெலனி ஜோலி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

இது குறித்து கனடாவில் உள்ள இந்திய தூதரகத்தை தொடர்பு கொண்டு பிபிசி கருத்து கேட்டுள்ளது..

நிஜ்ஜார் மரணம் குறித்து விசாரணை நடந்து வருவதன் காரணமாக, அதிக விவரங்களை வெளியே பகிரமுடியாது என மெலனி ஜோலி கூறினார்.

நிஜ்ஜார் மரணம் தொடர்பான வழக்கை விசாரித்த புலனாய்வு அதிகாரிகள் இந்த மரணத்தை ‘இலக்கு வைத்து தாக்கப்பட்டதாக’ வகைப்படுத்தியுள்ளனர்.

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அந்நாட்டு நாடாளுமன்றத்தில் முன்வைத்த விமர்சனத்திற்குப் பிறகு, இந்திய தூதரக அதிகாரி வெளியேற்றப்பட்டதை அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் மெலனி ஜோலி உறுதிப்படுத்தியுள்ளார்.

கனடா மண்ணில் கனடிய குடிமகன் கொல்லப்பட்டதில் வெளிநாட்டு அரசின் பிரதிநிதிக்கு தொடர்பு இருக்கலாம் என்ற குற்றச்சாட்டு பிரச்னைக்குரியது மட்டுமல்ல, முற்றிலும் ஏற்றுக் கொள்ள முடியாதது என்று அவர் கூறினார்.

“அந்த குற்றச்சாட்டு உண்மை என்று நிரூபிக்கப்பட்டால் அது நமது நாட்டின் இறையாண்மையை மீறியதாகும். அத்துடன், நாடுகள் ஒன்றுக்கொன்று நடந்து கொள்ள வேண்டிய முறையை மீறிய ஒன்றாகும். இது எங்களின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டதில் இருந்து எந்த வித வெளிநாட்டு தலையீட்டையும் நாங்கள் பொறுத்துக்கொள்ள மாட்டோம் என்பதில் தெளிவாக இருக்கிறோம்.” என்று மெலனி ஜோலி தெரிவித்தார்.

கனடா பிரதமரின் குற்றச்சாட்டை இந்திய வெளியுறவுத் துறை மறுத்துள்ளது.

இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், “கனடா பிரதமர் நாடாளுமன்றத்தில் கூறியதையும், அவர்களின் வெளிவிவகார அமைச்சரின் அறிக்கையையும் நாங்கள் நிராகரிக்கிறோம்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

“கனடாவில் எந்த ஒரு வன்முறைச் செயலிலும் இந்திய அரசின் தலையீடு இருப்பதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் அபத்தமானது, உள்நோக்கம் கொண்டது. இதே போன்ற குற்றச்சாட்டுகளை கனடா பிரதமர் நமது (இந்திய) பிரதமரிடம் முன்வைத்தார். அவை முற்றிலும் நிராகரிக்கப்பட்டன.”

“கனடாவில் கொலைகள், மனித கடத்தல் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்கள் உள்ளிட்ட பல்வேறு சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு இடம் கொடுக்கப்பட்டிருப்பது புதிதல்ல. இதுபோன்ற செயல்களுடன் இந்தியாவை தொடர்புபடுத்தும் எந்த முயற்சியையும் நாங்கள் நிராகரிக்கிறோம்.”

“தங்கள் மண்ணில் இருந்து செயல்படும் அனைத்து இந்திய விரோதக் கூறுகளுக்கும் எதிராக விரைவான மற்றும் பயனுள்ள சட்ட நடவடிக்கை எடுக்குமாறு கனடா அரசாங்கத்தை நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்.” என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

கனடாவின் வான்கூவர் நகருக்கு கிழக்கே 30 கி.மீ தொலைவில் உள்ள சர்ரே என்ற ஊரிலுள்ள குருநானக் சீக்கிய குருத்வாராவின் பரபரப்பான கார் பார்க்கிங்கில் வைத்து கடந்த ஜூன் மாதத்தில் நிஜ்ஜார் சுட்டுக் கொல்லப்பட்டார்.

முகமூடி அணிந்த இரண்டு பேர் துப்பாக்கிகளை கொண்டு சுட்டதில், காரிலிருந்த நிஜ்ஜார் இறந்தார்.

பிரிட்டிஷ் கொலம்பியாவின் மேற்கு மாகாணத்தில் ஒரு முக்கிய சீக்கியத் தலைவராக இருந்த அவர், காலிஸ்தான் அமைய வேண்டும் என்ற கோரிக்கையுடன் இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில் தீவிர பரப்புரைகளை மேற்கொண்டிருந்தார்.

இவரது செயல்பாடு காரணமாக கடந்த காலங்களில் அச்சுறுத்தல்களுக்கு ஆளானதாக அவரது ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர்.

பிரிவினைவாத போராளிக் குழுவுக்கு தலைமை தாங்கிய ஒரு பயங்கரவாதி என்று நிஜ்ஜார் குறித்து இந்தியா முன்பு விவரித்திருந்திருந்தது. ஆனால் அவரது ஆதரவாளர்கள், இந்தியாவின் குற்றச்சாட்டுகள் “ஆதாரமற்றது” என்று அழைக்கின்றனர்.

நிஜ்ஜார் மரணம் குறித்து கனடா தனது கவலைகளை இந்தியாவில் உள்ள உயர்மட்ட பாதுகாப்பு மற்றும் உளவு அமைப்புகளிடம் தெரிவித்துள்ளதாக ட்ரூடோ கூறினார்.

அமெரிக்க அதிபர் ஜோ பைடன், இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் ஆகியோரிடமும் அவர் இது குறித்து எடுத்துரைத்தார்.

“இந்த வழக்கில் உண்மை நிலையை வெளிச்சம் போட்டுக் காட்ட இந்திய அரசு, கனடாவுடன் ஒத்துழைக்க வேண்டும் என்று நான் உறுதியாக கேட்டுக் கொள்கிறேன்,” என்று ட்ரூடோ கூறினார்.

“நிஜ்ஜார் கொல்லப்பட்ட சம்பவம் கனடா மக்களை கோபமடையச் செய்துள்ளது, சிலர் தங்கள் பாதுகாப்பு குறித்து அச்சமடைந்துள்ளனர்” என்று ட்ரூடோ கூறினார்.

உலக சீக்கிய அமைப்பு உட்பட கனடாவில் உள்ள சில சீக்கிய குழுக்கள் பிரதமரின் அறிக்கையை வரவேற்றுள்ளன.

சீக்கிய சமூகத்தினர் மத்தியில் ஏற்கெனவே பரவலாக நம்பப்பட்டதை ட்ரூடோ உறுதிப்படுத்தினார் என்று அந்த அமைப்புகள் கூறியுள்ளனர்.

ஜி-20 கூட்டத்தின் போது இரு தலைவர்களும் சங்கடமாக காணப்பட்டனர்

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சீக்கியர்கள், கனடாவில் 14 லட்சம் முதல் 18 லட்சம் வரையிலான எண்ணிக்கையில் வசிப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்திற்கு வெளியே சீக்கியர்கள் அதிக எண்ணிக்கையில் கனடாவில் உள்ளனர்.

கடந்த வாரம் இந்தியாவில் நடைபெற்ற ஜி-20 மாநாட்டின் போது மோதியுடனான பதற்றமான சந்திப்புக்குப் பிறகு நேற்று ட்ரூடோ இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மோதி – ட்ரூடோ சந்திப்பின் போது, கனடா நாட்டில் இயங்கும் சீக்கிய பிரிவினைவாத இயக்கத்தை குறிப்பிட்டு, “பயங்கரவாத சக்திகளின் இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகளை” அடக்க கனடா போதுமான நடவடிக்கை எடுக்கவில்லை என்று மோதி குற்றம் சாட்டினார், என ஜி20 மாநாட்டின் போது இந்திய அரசு வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்தியாவுடனான தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்திற்கான பேச்சுவார்த்தைகளையும் கனடா சமீபத்தில் நிறுத்தியது.

அது ஏன் என்பது குறித்த சில விவரங்களைக் கனடா தெரிவித்தது. ஆனால் இந்த விவகாரத்தில் “சில அரசியல் நிகழ்வுகளை” இந்திய தரப்பு மேற்கோள் காட்டியிருந்தது.

சமீபத்திய மாதங்களில் எதிர்பாராத விதமாக இறந்த மூன்றாவது முக்கிய சீக்கியர் நிஜ்ஜார் ஆவார்.

பிரிட்டனில், காலிஸ்தான் விடுதலைப் படையின் தலைவர் என்று கூறப்பட்ட அவதார் சிங் கண்டா, ஜூன் மாதம் பர்மிங்காமில் மர்மமான முறையில் இறந்தார்.

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தின் தலைநகரான லாகூரில் இந்தியாவால் பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்ட பரம்ஜித் சிங் பஞ்ச்வார் கடந்த மே மாதம் சுட்டுக் கொல்லப்பட்டார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.