;
Athirady Tamil News

தவிர்க்கப்பட்டிருக்கும் அந்த இரண்டு வார்த்தைகள்: கொந்தளிக்கும் எதிர்கட்சிகள்!!

0

இந்திய தலைநகர் புது டெல்லியில் ரெய்சினா ஹில் பகுதியில் சென்ட்ரல் விஸ்டா எனும் பெயரில் இந்தியா முழுவதிற்குமான மத்திய அரசாங்கத்தின் நிர்வாக அலுவலகங்கள் இருக்கின்றன. இப்பகுதியை மேம்படுத்தும் திட்டத்தின்படி, ஒரு புதிய பாராளுமன்ற கட்டிடமும் கட்டப்பட்டது. இக்கட்டிடத்தை இந்திய பிரதமர் நரேந்திர மோடி கடந்த மே 28 அன்று திறந்து வைத்தார். அதிகாரபூர்வமாக அலுவல்களை தொடங்க, புதிய கட்டிடத்திற்குள் நேற்று மதியம் சுமார் 01:00 மணியளவில் பிரதமர் மோடி தலைமையில் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினரும் சென்றனர். பழைய பாராளுமன்ற கட்டிடத்திற்கு “சம்விதான் சதன்” என பெயரிட பிரதமர் பரிந்துரை செய்தார். அப்போது அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் அரசியலமைப்பு சட்டத்தின் பிரதி வழங்கப்பட்டது.

இப்பிரதியை கண்ட காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் மக்களவை எதிர்கட்சி தலைவருமான ஆதிர் ரஞ்சன் சவுத்ரி ஒரு முக்கிய குற்றச்சாட்டை முன்வைத்தார். அதில் அவர் கூறியதாவது: இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் “முன்னுரை” (preamble) பகுதியில் அப்போதைய பிரதமர் இந்திரா காந்தியால் 1976ல் கொண்டு வரப்பட்ட 42-வது திருத்தத்தின்படி சேர்க்கப்பட்ட “செக்யூலர்” மற்றும் “சோஷலிஸ்ட்” எனும் இரு வார்த்தைகள் தற்போது வழங்கப்பட்ட பிரதிகளில் இடம்பெறவில்லை.

மதசார்பின்மையை வலியுறுத்தவும் சிறுபான்மையினரின் உரிமைகளை காக்கவும் “செக்யூலர்” எனும் வார்த்தையும், பணக்காரர்களிடமே செல்வம் குவிந்திருக்கும் நிலையை தடுக்கவும், சமதர்மத்தை வலியுறுத்தும் விதமாகவும் “சோஷலிஸ்ட்” எனும் வார்த்தையும் அப்போது சேர்க்கப்பட்டன. தற்போது இவை வேண்டுமென்றே தவிர்க்கப்பட்டிருக்கலாம் என அச்சப்படுகிறேன்” இவ்வாறு ஆதிர் ரஞ்சன் தெரிவித்தார். “முதல் முதலாக அரசியலமைப்பு சட்டம் உருவாக்கப்பட்ட போது இப்படித்தான் இருந்தது. அதில் அந்த இரண்டு வார்த்தைகளும் இல்லை. பல வருடங்கள் கழித்து 1976ல் தான் இடையில் அந்த வார்த்தைகள் சேர்க்கப்பட்டன.

உறுப்பினர்களிடம் தற்போது முதல்முதலாக உருவாக்கப்பட்ட அரசியலமைப்பு சட்டத்தின் பிரதிதான் வழங்கப்பட்டிருக்கிறது” என இதற்கு பதிலளித்த இந்திய சட்ட மற்றும் நீதித்துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மெக்வால் கூறினார். ஏற்கெனவே, பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர். சுப்ரமணியன் சுவாமி, இந்த இரு வார்த்தைகளையும் அரசியலமைப்பு சட்டத்தில் சேர்த்தது சட்டபூர்வமாக செல்லாது என அறிவிக்க கோரி உச்ச நீதிமன்றத்தில் கடந்த வருடம் ரிட் மனு ஒன்றை தாக்கல் செய்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.