;
Athirady Tamil News

குறுங்கோளிலிருந்து மண்துகள்கள் பூமிக்கு வந்தது: சாதித்து காட்டிய நாசா!!

0

ஆஸ்டிராய்ட் எனப்படும் சூரியனை சுற்றி வரும் குறுங்கோள்களை ஆராய்ச்சி செய்வதில் அமெரிக்காவின் மத்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாஸா (NASA) பல வருடங்களாக ஈடுபட்டு வருகிறது.

2016 செப்டம்பர் மாதம், அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்திலிருந்து ஓசிரிஸ்-ஆர்ஈஎக்ஸ் (OSIRIS-REx) எனும் விண்கலனை பூமியிலிருந்து 200 மில்லியன் மைல்களுக்கு அப்பால் உள்ள பென்னு எனும் குறுங்கோளை ஆராய்ச்சி செய்ய அமெரிக்காவின் மத்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பான நாஸா அனுப்பியிருந்தது. அந்த குறுங்கோளிலிருந்து ஆராய்ச்சிகளுக்காக மாதிரி படிவங்களை பூமிக்கு கொண்டு வரவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

பென்னுவின் மேற்பரப்பில் ஆராய்ச்சி செய்ய அந்த விண்கலனிலிருந்து அனுப்பப்பட்ட ஆய்வு சாதனம் (probe) 2020ல் பென்னுவை அடைந்தது. பாறைகள் நிறைந்த அந்த குறுங்கோளின் மேற்பரப்பிலிருந்து 250 கிராம் மண்துகள்களை அந்த சாதனம் எடுத்தது. இந்நிலையில் ஓசிரிஸ் விண்கலனிலிருந்து கேப்ஸ்யூல் எனப்படும் மிக சிறிய மற்றொரு விண்கலன் மூலம் பென்னுவின் மண்துகள் மாதிரிகள் ஓசிரிஸ்-ஆர்ஈஎக்ஸ் விண்கலனால் பூமியிலிருந்து 1,07,826 உயரத்திலிருந்து திருப்பி அனுப்பப்பட்டது.

அந்த கேப்ஸ்யூல் 6.21 பில்லியன் கிலோமீட்டர் பயணத்தை நேற்று நிறைவு செய்தது. பூமியின் வளிமண்டலத்தில் நுழைந்து அமெரிக்காவின் உடா மாநிலத்தில் பாலைவனத்தில் வந்திறங்கியது. இதனை நாஸா அதிகாரிகள் பத்திரமாக மீட்டெடுத்தனர். விண்கலனிலிருந்து வெகு வேகமாக பூமியை நோக்கி வந்த கேப்ஸ்யூல், வளிமண்டலத்தை தாண்டி, அதில் இணைக்கப்பட்ட பாராசூட் மூலம் மெதுவாக பூமியை தொட்டது. “விஞ்ஞானிகளின் சூரிய மண்டல ஆராய்ச்சிக்கு ஒரு புதிய பார்வை கிடைக்க இந்த ஆராய்ச்சி வழி செய்யும்” என நாஸாவின் இந்த முயற்சி குறித்து மகிழ்ச்சி தெரிவித்த அதன் தலைவர் பில் நெல்சன் தெரிவித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.