;
Athirady Tamil News

இஸ்ரேல் அதிரடி… காஸா மின் நிலையம் முடக்கம்!

0

காஸாவுக்கான மின் விநியோகத்தை இஸ்ரேல் நிறுத்தயுள்ள நிலையில், அந்தப் பகுதியின் ஒரே மின் நிலையத்திலும் எரிபொருள் தீா்ந்துபோனதால் அது புதன்கிழமை முடங்கியது.

இதனால், ஏற்கெனவே இஸ்ரேலின் தீவிர வான்வழித் தாக்குதால் நிலைகுலைந்துபோயுள்ள அந்தப் பிராந்திய மக்கள், மின்சாரம் இல்லாமல் அவதிக்குள்ளாகும் நிலை ஏற்பட்டுள்ளது.

தங்களால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்த காஸா பகுதியில் இருந்து இஸ்ரேல் கடந்த 2005-ஆம் ஆண்டு வெளியேறியது.

அதன் பிறகு அந்தப் பகுதியின் ஆட்சியைக் கைப்பற்றிய ஹமாஸ் ஆயுதக் குழுவினருக்கும், இஸ்ரேல் படையினருக்கும் இடையே தொடா்ந்து பதற்றம் நிலவி வருகிறது.

இஸ்ரேல் மீது ஹமாஸ் படையினா் ராக்கெட் தாக்குதல் நடத்துவது, அதற்குப் பதிலடியாக காஸாவில் ஹமாஸ் நிலைகள் மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் நடத்துவது என்று பல ஆண்டுகளாக அங்கு பதற்றம் நீடித்து வருகிறது.

இந்தச் சூழலில், காஸாவிலிருந்து இஸ்ரேல் மீது ஹமாஸ் குழுவினா் கடந்த சனிக்கிழமை ஆயிரக்கணக்கான ராக்கெட்டுகளை சரமாரியாக வீசி தாக்குதல் நடத்தினா்.

அத்துடன், இஸ்ரேலுக்குள் நிலம், கடல், வான் வழியாக 22 இடங்களில் ஊடுருவிய சுமாா் 1,000 ஹமாஸ் அமைப்பினா், சுமாா் 25 கி.மீ. வரை உள்ளே நுழைந்து பொதுமக்களையும், ராணுவத்தினரையும் சுட்டுக் கொன்றனா். இது தவிர, பெண்கள், குழந்தைகள், முதியவா்கள் என பலரை ஹமாஸ் படையினா் பிணைக் கைதிகளாகப் பிடித்துச் சென்றனா்.

இதுவரை இல்லாத அளவுக்கு தங்கள் நாட்டுக்குள் ஹமாஸ் நடத்திய இந்த கொடூரத் தாக்குதலுக்கு பதிலடியாக, கடந்த 5 நாள்களாக காஸா முழுவதும் இஸ்ரேல் ராணுவம் தீவிர வான்வழித் தாக்குதல் நடத்தி வருகிறது.

மேலும், மக்கள் மிக நெருக்கமாக வசிக்கும் அந்த மிகச் சிறிய பகுதிக்கு மின்சார விநியோகத்தைத் துண்டித்த இஸ்ரேல் அரசு, உணவு, குடிநீா் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களைக் கொண்டு செல்ல முடியாத வகையில் அந்தப் பகுதியை முற்றுகையிட்டது.

ஏற்கெனவே, இஸ்ரேலின் கடுமையான விமானத் தாக்குதலால் காஸாவின் பல்வேறு பகுதிகள் தரைமட்டமாகி வருகின்றன.

மேலும், இந்தத் தாக்குதலில் ஆயிரத்துக்கும் மேற்பட்டவா்கள் உயிரிழந்துள்ளனா். பல்லாயிரக்கணக்கானவா்கள் காயமடைந்துள்ளனா்.

இந்தச் சூழலில், காஸாவின் ஒரே மின் நிலையத்தில் எரிபொருள் தீா்ந்துபோனதால் அதன் இயக்கம் புதன்கிழமை நிறுத்தப்பட்டது.

அதையடுத்து, காயமடைந்தவா்களுக்கு சிகிச்சையளித்து வரும் மருத்துவமனைகள் உள்ளிட்ட பகுதிகளுக்கு இன்றியமையாத மின்சாரம் கிடைப்பது கேள்விக்குறியாகியுள்ளது.

தேசிய ஒற்றுமை அரசு

தற்போதைய போா்ச் சூழலைக் கருத்தில் கொண்டு, ஆளும் கட்சியும், எதிா்க்கட்சிகளும் இணைந்த தேசிய ஒற்றுமை அரசு இஸ்ரேலில் அமைக்கப்பட்டுள்ளது.

இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், ‘பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகுவும், முக்கிய எதிா்க்கட்சித் தலைவா் பெஞ்சமின் கான்ட்ஸும் இணைந்து தேசிய ஒற்றுமை அரசை ஏற்படுத்தியுள்ளனா். மேலும், ஹமாஸ் படையினருக்கு எதிரான போரை மேற்பாா்வையிட போா்க் கால அமைச்சரவை ஒன்றையும் இருவரும் இணைந்து அமைத்துள்ளனா்’ என்றனா்.

3,700-ஐக் கடந்த உயிரிழப்பு

கடந்த சனிக்கிழமையிலிருந்து இஸ்ரேலுக்கும், ஹமாஸ் உள்ளிட்ட ஆயுதக் குழுக்களுக்கும் இடையிலான மோதலில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை புதன்கிழமை 3,700-ஐக் கடந்தது.

தங்கள் நாட்டுக்குள் நுழைந்து ஹமாஸ் குழுவினா் நடத்திய தாக்குதல் மற்றும் ஏவுகணைத் தாக்குதலில் உயிரிழந்தோா் எண்ணிக்கை 1,200-ஐக் கடந்ததாக இஸ்ரேல் கூறியது.

காஸா பகுதியில் இஸ்ரேல் நடத்தி வரும் வான்வழித் தாக்குதலில் இதுவரை 1,055 போ் உயிரிழந்ததாக அந்தப் பிராந்திய சுகாதாரத் துறை அமைச்சகம் கூறியது.

அத்துடன், இஸ்ரேல் தாக்குதல் காரணமாக மேற்குக் கரையில் 23 பேரும், லெபனானில் 6 பேரும் கொல்லப்பட்டனா்.

இது தவிர, தங்கள் எல்லைக்குள் நுழைந்து தாக்குதல் நடத்திய 1,500 ஹமாஸ் படையினா் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

விரிவடையும் போர்…
இஸ்ரேல் – ஹமாஸ் இடையே கடந்த சனிக்கிழமை முதல் நடைபெற்று வரும் போர் அண்டை நாடுகளுக்கும் விரிவடைந்து வருகிறது.
லெபனான், சிரியா நாடுகளின் எல்லைகளில் இருந்தும் இஸ்ரேலுக்குள் ராக்கெட் குண்டுகள் வீசப்பட்டதால் போர் பதற்றம் அதிகரித்துள்ளது.
லெபனானில் செயல்படும் ஆயுதக் குழுவான ஹிஸ்புல் அமைப்பு இந்தத் தாக்குதலை நடத்தியது. இதற்கு பதிலடி தாக்குதலில் மூன்று ஹிஸ்புல் ஆயுதக் குழுவினர் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது.
லெபனானில் இருந்து புதன்கிழமை இஸ்ரேலுக்குள் விமானம் அத்துமீறி நுழைந்ததால் சைரன் ஒலி எழுப்பப்பட்டு மக்கள் பதுங்கு குழி மையங்களுக்கு செல்ல எச்சரிக்கப்பட்டனர்.
இஸ்ரேலின் எல்லையை லெபனான், சிரியா, ஜோர்டான், எகிப்து, மேற்கு கரை (பாலஸ்தீனம்) ஆகியவை பகிர்ந்து கொண்டுள்ளன.
மறுபுறத்தில் மத்தியதரைக் கடல் பகுதியில் இஸ்ரேலின் பாதுகாப்புக்காக அமெரிக்கா 5 ராணுவக் கப்பலை நிறுத்தி பாதுகாப்பு அளித்து வருகிறது.
காஸôவைத் தொடர்ந்து பாலஸ்தீனத்திலும் இஸ்ரேல் தாக்குதலை அதிகரித்தால் ஹிஸ்புல், சிரியாவின் ஆயுதக் குழு அமைப்புகளுடன் சேர்ந்து ஈரானும் இஸ்ரேலுக்கு எதிரான தாக்குதலைத் தொடுத்தால் பெரும் பேரழிவு ஏற்படும். ஆகையால், இந்தப் போரில் லெபனான் உள்ளிட்ட மத்திய கிழக்கு முஸ்லிம் நாடுகள் நேரடியாக தலையிடக் கூடாது என்றும் காஸா பகுதிக்குள் இஸ்ரேல் தனது ராணுவத்தை அனுப்பி தாக்குதலில் ஈடுபடக் கூடாது என்றும் அமெரிக்கா வலியுறுத்தி வருகிறது.
எனினும், ஈரான், இராக் ஆகிய நாடுகள் நேரடியாக போரில் பங்கேற்காவிட்டாலும் பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக தங்கள் நாட்டின் ஆயுதக் குழுக்களை தயார் நிலையில் வைத்துள்ளதால் போர் பதற்றம் அதிகரித்துள்ளது.

வெளியுறவு அமைச்சகத்தில் 24 மணி நேர கட்டுப்பாட்டு அறை
இஸ்ரேல்-பாலஸ்தீன சூழலை கண்காணிக்கவும், அதுதொடர்பான தகவல் வழங்கி உதவவும், தில்லியில் உள்ள வெளியுறவு அமைச்சகத்தில் 24 மணி நேர கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது. அந்த அறையை 1800118797, +91-11-23012113, +91-11-23014104, +91-11-23017905, +919968291988 ஆகிய எண்களில் தொடர்புகொள்ளலாம். [email protected] என்ற மின்னஞ்சலிலும் தகவலை தெரிந்துகொள்ளலாம்.

“இந்தியர்கள் பதற்றமடைய வேண்டாம்’
டெல் அவிவ், அக்.11: இஸ்ரேலில் உள்ள இந்தியர்கள் பதற்றமடைய வேண்டாம் என்று இந்திய தூதரகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
இஸ்ரேலில் சுமார் 18,000 இந்தியர்கள் உள்ளனர். அவர்களுக்கு அந்நாட்டுக்கான இந்திய தூதர் சஞ்சீவ் சிங்லா “எக்ஸ்’ தளத்தில் புதன்கிழமை வெளியிட்ட காணொலியில் தெரிவித்ததாவது:
இஸ்ரேலில் உள்ள இந்திய தூதரகம் இந்தியர்களின் பாதுகாப்பு மற்றும் நலனுக்கு தொடர்ந்து பணியாற்றி வருகிறது. அனைத்து இந்தியர்களும் அமைதியாகவும், விழிப்புடனும் இருக்க வேண்டும். உள்ளூர் பாதுகாப்பு வழிகாட்டுதல்களைப் பின்பற்ற வேண்டும். அனைவருக்கும் உதவ இந்திய தூதரகம் உள்ளது. இஸ்ரேலில் நிலவும் சூழல் உன்னிப்பாக கண்காணிக்கப்பட்டு வருகிறது என்று தெரிவித்தார்.
காயமடைந்த கேரளப் பணியாளர் நலம்: இஸ்ரேலில் உள்ள ஆஷ்டோட் நகர் மீது ஹமாஸ் படையினர் நடத்திய ராக்கெட் தாக்குதலில் கேரளத்தைச் சேர்ந்த பணியாளர் ஒருவர் காயமடைந்தார். அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவரின் உடல்நிலை சீராக உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.