;
Athirady Tamil News

நாடு வங்குரோத்து நிலையில் உள்ள போது ஆக்கப்பூர்வமான தீர்வுகள் அவசியம்!

0

நாடு வங்குரோத்து நிலையில் உள்ள போது ஆக்கப்பூர்வமான மற்றும் புதிய தீர்வுகள் மூலம் ஒரு வெளிச்சக் கோட்டை உருவாக்க முடியும். நாடு வீழ்ச்சியடந்துள்ள போதும் அதிலிருந்து சரியாக மீள எழு வேண்டும். இதன் மூலம் புதிய பார்வையில் தேசத்தை கட்டியெழுப்ப முடியும் என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

‘பிரபஞ்சம்’ வேலைத்திட்டத்தின் கீழ் 36 ஆவது கட்டமாக பத்தரமுல்லை ஜய ஸ்ரீசுபூதி தேசிய பாடசாலைக்கு ஸ்மார்ட் வகுப்பறை உபகரணங்களை நன்கொடையாக வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

இதுதொடர்பில் மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில்,

75 வருட கால ஜனநாயக வரலாறு
“பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதே அனைவரின் நோக்கமாக இருக்க வேண்டும். 75 வருட கால ஜனநாயக வரலாறு குறித்து பேசப்படும் காலகட்டத்தில் எதிர்க்கட்சி என்ற வகையில் இலங்கையின் கல்வி மற்றும் சுகாதாரத் துறைகளுக்கு இயன்றவரை பெறுமானம் சேர்க்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

பிரபஞ்சம் மற்றும் மூச்சு திட்டங்களின் கீழ் பிள்ளைகளுக்கும் பெற்றோர்களுக்கும் முறையே கல்வித் துறை மற்றும் சுகாதாரத் துறைக்கு பெறுமதியான உபகரணங்களை வழங்கும்போது மகிழ்ச்சியையும் பெருமையையும் உணர்கின்றோம்.

இலங்கை ஒரு தீவாக இருந்தாலும், இம்மனநிலையுடன் முன்னேற முடியாது. புதிய தொழிநுட்பங்களை கற்று அதனோடு பயணிக்க வேண்டும்.

உலக நாடுகளுடன் போட்டியிடுவதற்கு இலங்கை ஸ்மார்ட் நாடாக மாற வேண்டும். இதன் முன்னேற்றங்களைக் கொண்டு உலக நாடுகளுடன் போட்டிபோட தயாராக வேண்டும்.

பெரிய பெரிய உணவகங்கில் அவ்வப்போது டிஜிட்டல் புரட்சி குறித்து மாநாடுகள் வைத்து கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டாலும் இது நடைமுறையில் செயல்படுத்தப்படவில்லை.

பாடசாலை மாணவர்களை டிஜிட்டல் உலகிற்கு அறிமுகப்படுத்தும் நோக்கத்தை மனதில் கொண்டு பிரபஞ்சம் தகவல் தொழில்நுட்பத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.

இன்று பிரபஞ்சம் நிகழ்வில் இணைந்திருக்கும் பெற்றோர்களின் முகத்தைப் பார்க்கும்போது மிகுந்த அழுத்தத்தில் இருப்பதாகத் தெரிகிறது.

மின் கட்டணம்
மக்கள் மிகவும் கஷ்டப்பட்டு வாழ்கின்றனர். மூன்றாவது தடவையாகவும் மின் கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது. இது சட்டவிரோதமான செயலாகும்.

இதற்கு பொது பயன்பாடுகள் ஆணைக்குழு பொறுப்புக் கூற வேண்டும். எரிசக்தி அமைச்சரே பொறுப்பேற்க வேண்டும்.

மக்களின் மின்சாரக் கட்டணம் அதிகரிக்கும் போது நாட்டின் முதலாளித்துவ நட்புவட்டார ஒரு பிரிவினருக்கு நிவாரணம் கிடைத்து வருகிறது.

உழைக்கும் மக்களின் ஊழியர் சேமலாப நிதியங்களில் அரசாங்கம் கை வைத்துள்ளது. நாட்டின் பெரும் செல்வந்தர்களுக்கு வரி விதிக்கப்படவில்லை.

மின்சாரக் கட்டணத்தை மும்மடங்காக அதிகரித்த மாநாடு, வறுமையை அதிகரித்த மாநாடு, சிறிய, நடுத்தர மக்களின் ஜீவனோபாயத்தை அழித்த மாநாடு ஒன்று இன்று நடைபெறவுள்ளது.

தேர்தலின் போது ஏனையவர்கள் பல்வேறு வாக்குறுதிகள், அறிக்கைகள் மற்றும் கொள்கைகளை வழங்கினாலும், தேர்தலுக்குப் பிறகு அவை நிறைவேற்றப்படுவதில்லை.

மற்றவர்களிடமிருந்து தாம் வேறுபடுவது வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கு முன்பு நடைமுறையில் செயல்படுத்துவதனால் தான்.

எந்தவொரு வாக்குறுதிகளும் வழங்காது மக்களுக்கு மனப்பூர்வமாக ஏதாவது செய்வதன் அடிப்படையிலேயே கல்வி மற்றும் சுகாதாரத்துக்காக இந்த கட்சி பல பணிகளை செய்துள்ளது.

இது பொது மக்கள் சேவகனின் கடமைகளில் ஒன்றாகும். எதிர்காலத்தில் நாட்டில் உள்ள அனைத்து அரச பாடசாலைளிகளிலும் ஆங்கில மொழி, தகவல் தொழில்நுட்பம் மற்றும் கணினி ஆய்வகங்கள் நிறுவப்படும்.

பெரும்பான்மையான மக்கள் இதை விரும்பாவிட்டாலும், இவை அனைத்தும் நாட்டின் எதிர்கால சந்ததியினரின் நலனுக்காக மேற்கொள்ளப்படுகிறது.

சிங்கப்பூர் போன்று எதிர்காலத்தில் சர்வதேச தொழிலாளர் சந்தைக்கு ஏற்ற வகையில் ஸ்மார்ட் ரீதியான தலைமுறை உருவாக்கப்பட வேண்டும்.

தேசப்பற்று,தேசபக்தி,சிங்களம் மட்டும் என்று நினைக்கும் மனநிலையை விட்டொழிய வேண்டும்.

நாட்டை உண்மையாகவே நேசிக்கும் நாட்டை கட்டியெழுப்பக்கூடிய தலைமுறையையே உருவாக்க வேண்டும்.” என்றார்.

 

You might also like

Leave A Reply

Your email address will not be published.