;
Athirady Tamil News

மலையக நிலவரம் தொடர்பில் ஜீவன் தொண்டமான் பிரித்தானிய அமைச்சர்களுடன் கலந்துரையாடல்

0

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமான், கடந்த 19 ஆம் திகதி பிரித்தானிய நாடாளுமன்றத்துக்கு சென்றிருந்ததுடன், முக்கியத்துவமிக்க சந்திப்புகளிலும் ஈடுபட்டார்.

இதன்போது அமைச்சர் மலையக பெருந்தோட்டம் உள்ளிட்ட இலங்கையின் நிலவரம் பற்றியும் விளக்கமளிப்புகளை மேற்கொண்டார்.

இங்கிலாந்து நாட்டு அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட தரப்புகளுடன் கலந்துரையாடும் நோக்கில் இங்கிலாந்து நாடாளுமன்றம் சென்றிருந்த அமைச்சர் ஜீவன் தொண்டமானை, அந்நாட்டின் விளையாட்டு, சுற்றுலா, சிவில் சமுக மற்றும் சமத்துவ அமைச்சர் ஸ்டவுட் என்ரூ மற்றும் இங்கிலாந்து பிரபுகளின் சபை உறுப்பினர் நிக் ஹர்பட் பிரபுவும் வரவேற்றார்.

பெருந்தோட்ட சமூகம்
பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்களுடனான சந்திப்பின் போது, இலங்கையில் பெருந்தோட்ட சமூகம் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பிலும், பெருந்தோட்ட சமூகத்தின் வரலாற்று ரீதியிலான போராட்டங்கள், கலாசாரம் மற்றும் பொருளாதாரத்துக்கு அவர்கள் வழங்கிய மகத்தான பங்களிப்பு போன்ற விடயங்கள் தொடர்பிலும் அமைச்சர் எடுத்துரைத்துள்ளார்.

மலையக மக்கள் இலங்கைக்கு வருகைதந்து 200 வருடங்கள் கடந்துள்ளதை நினைவுகூரும் இத்தருவாயில், காணி உரிமை, புதிய வீட்டு திட்டம் உட்பட பெருந்தோட்ட மக்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்துவதற்காக முன்னெடுக்கப்பட்டுவரும் வேலைத்திட்டங்கள் பற்றியும் அவர் விளக்கமளித்துள்ளார்.

நல்லிணக்க முயற்சி குறித்து எடுத்துரைப்பு இலங்கை குறித்தான அனைத்துக் கட்சி நாடாளுமன்றக் குழு (APPG) மற்றும் நீர், சுகாதாரம் தொடர்பான குழு ஆகியவற்றின் இணைத் தலைவராக செயற்படும் டாக்டர். மெத்தீவ் ஓப்போர்ட் உடனும் அமைச்சர் முக்கியத்துவமிக்க சந்திப்பை நடத்தி இருந்தார்.

நல்லிணக்கம், மனித உரிமைகள் மற்றும் நீர்த்துறையில் மேற்கொள்ளப்பட்டு வரும் மறுசீரமைப்பு உட்பட இலங்கையில் நிலவும் முக்கியமான பிரச்சினைகள் தொடர்பில் இச்சந்திப்பில் ஆழமாக கலந்துரையாடப்பட்டுள்ளன.

இலங்கையில் நீர்வழங்கல் துறைக்கு பிரிட்டன் நீர்வழங்கல் துறையின் ஒத்துழைப்பை பெறுவதற்கான முயற்சியிலும் அமைச்சர் ஈடுபட்டுள்ளார். உலகளாவிய நீருக்கான அணுகலை உறுதி செய்வதில் தனியார் துறையின் விரிவாக்கப்பட்ட பங்களிப்பு மற்றும் முதலீடுகளையும் அமைச்சர் ஊக்குவித்துள்ளார்.

வட்டமேசை மாநாடு
மேற்படி சந்திப்புக்கு பின்னர், Baroness Barker இன் வழிகாட்டலுடன் இங்கிலாந்து பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான இலங்கை தொடர்பான வட்டமேசை விவாதத்துக்கும் அமைச்சர் தொண்டமான் தலைமை தாங்கினார். நல்லிணக்கம், மனித உரிமைகளுக்கு மதிப்பளித்தல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி உட்பட பல துறைகளில் இலங்கை அடைந்துவரும் முன்னேற்றம் பற்றி அமைச்சர், மேற்படி குழுவினருக்கு விளக்கமளித்துள்ளார்.

நல்லிணக்கம் உட்பட இலங்கையால் முன்னெடுக்கப்பட்டுவரும் திட்டங்கள் தொடர்பில் குறுகிய நோக்கங்களுக்காக பரப்படும் எதிர்மறைவான, போலியான தகவல்கள் பற்றியும் அமைச்சர் எடுத்துரைத்தார்.

இப்படியான தகவல்கள் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர்களும், புலம்பெயர் இலங்கை சமூகமும் விழிப்புடன் நடந்துகொள்ள வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார். பெருந்தோட்ட சமூகத்துக்கான வரலாற்று தருணம் அமைச்சரின் இங்கிலாந்து நாடாளுமன்ற விஜயமானது, மலையக பெருந்தோட்ட சமூகத்துக்கு முக்கியத்துவம்மிக்கதாக அமைந்தது.

அதேபோல பெருந்தோட்ட மக்களின் வாழ்க்கை நிலை மற்றும் வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்களின் நலன்கள் தொடர்பான அமைச்சரின் அதிக ஈடுபாட்டையும் வெளிப்படுத்துகின்றது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.