;
Athirady Tamil News

முடங்கியது தென்கிழக்கு பல்கலைக்கழகம்!

0

பல்கலைக்கழக தொழிற்சங்கங்கள், நிர்வாக உத்தியோகத்தர் சங்கங்கள், கல்விசார் ஆதரவு சங்கங்கள் மற்றும் அரசியல் சங்கங்களின் கூட்டுக்குழுவின் ஏகமனதான தீர்மானத்திற்மைவாக பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இன்று 2023.11.02 ஆம் திகதி தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் (TASEU), நிர்வாக உத்தியோகத்தர் சங்கம் மற்றும் கல்விசாரா ஊழியர் சங்கங்களின் தலைவர்களான முறையே பேராசிரியர் ஏ.எம்.எம். முஸ்தபா, எம்.எச்.நபார் மற்றும் எம்.ரி.எம். தாஜுடீன் ஆகியோரது இணைந்த தலைமையில் ஒரு நாள் அடையாள பணிப்பறக்கணிப்பும் போராட்டமும் பல்கலைக்கழக ஒலுவில் வளாக முற்றலில் இடம்பெற்றது.

நாட்டின் கடுமையான பொருளாதார நெருக்கடியால் சடுதியாக அதிகரித்துள்ள வாழ்க்கை செலவுகளை ஈடுசெய்ய முடியாத நிலையில் நீண்ட கால சம்பள முரண்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு குறைபாடுகளை சீர்செய்ய விடுக்கப்பட்ட கோரிக்கைகள் தொடர்ந்து உதாசீனம் செய்யப்படுவதை வெளிக்கொணருமுகமாக அனைத்து பல்கலைக்கழகங்களிலும் இன்று அடையாள வேலைநிறுத்தம் இடம்பெற்று வரும் நிலையிலேயே தென்கிழக்கு பல்கலை கழகத்திலும் வேலை நிறுத்த போராட்டம் இடம்பெற்றது.

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் கல்விசாரா ஊழியர் சங்கத்தின் செயலாளர் எம்.எம்.முகம்மது காமில், ஆசிரியர் சங்கத்தின் பிரதிநிதிகள் மற்றும் நிர்வாக உத்தியோகத்தர்களின் பிரதிநிதிகளின் வழிகாட்டலில் இடம்பெற அடையாள வேலைநிறுத்தம் மற்றும் போராட்டத்தில் ஆசிரியர் சங்கங்களின் கோரிக்கைகள் மற்றும் நிர்வாக ஊழியர் சங்கங்களின் கோரிக்கைகளுக்கு மேலதிகமாக பின்வரும் கோரிக்கைகள் கல்விசாரா ஊழியர்களால் முன்வைக்கப்பட்டது:

1. கடந்த காலங்களில் முன்னெடுக்கட்ட பணிப்புறக்கணிப்புப் போராட்டத்தில் 107% சம்பள அதிகரிப்பு எங்களுக்கு வழங்குவதாக வாக்குறுதியளிக்கப்பட்டு 05 வருடங்கள் கடந்த நிலையில், இதுவரைக்கும் இந்த நிலுவை வழங்கப்படவில்லை. எனவே, மிகுதியாகவுள்ள 15% ஜ வழங்குமாறு அரசாங்கத்திற்கு கோரிக்கை விடுக்கின்றோம்.

2. பல்கலைக்கழக ஊழியர்களின் பிரச்சினைகளுக்கு உடனடியாகத் தீர்வினை வழங்குங்கள், அத்துடன் பல்கலைக்கழகங்களிலுள்ள ஆளணிப்பற்றாக்குறையை நிவர்த்தி செய்து, திறந்த ஆட்சேர்ப்பு முறையை நடைமுறைப்படுத்துதல்.

3. பல்கலைக்கழக ஊழியர்களுக்கு இல்லாமலாக்கப்பட்ட சம்பள அதிகரிப்பை உடனடியாக வழங்குங்கள்.

4. 2019ம் ஆண்டு ஏனைய அரசாங்க ஊழியர்களுக்கு அதிகரிக்கப்பட்ட 2500.00 ரூபா சம்பள அதிகரிப்பு பல்கலைக்கழகத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு வழங்கப்படவில்லை.

5. தற்போதைய பொருளாதார நெருக்கடியால் சகல அத்தியாவசியப் பொருட்களுக்குமான விலைகள் வானளவு அதிகரித்துக் காணப்படுகின்றது. எனவே, 40% சம்பள அதிகரிப்பை உடனடியாக வழங்குங்கள் எனவும் அரசாங்கத்தை கோருகின்றோம்.

6. எங்களுடைய UPF, ETF மற்றும் Pension போன்ற பணங்கள் அத்தனையும் அரசாங்கத்தால் மீளவும் எடுக்கப்பட்டு பிறதொரு தேவைக்காகப் பயன்படுத்துவதை உடனடியாக நிறுத்த வேண்டும்.

இவ்வாறு எங்களுடைய பணங்களை மீளவும் எடுப்பதன் காரணமாக ஓய்வு பெற்றுச்செல்லும் எங்களுடைய ஊழியர்களுக்கு உடனடியாகப் அப்பணத்தை பெற்றுக்கொள்வதில் பாரிய சிக்கல்கள், சிரமங்கள் ஏற்படுகின்றன எனவும் அக்கோரிக்கைகளில் முன்வைக்கப்பட்டுடிருந்தது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.