;
Athirady Tamil News

புகைமூட்டமாக மாறிய தலைநகரம் : சென்னையில் அபாய கட்டத்தை எட்டிய காற்று மாசு!

0

சென்னையில் தொடர்ந்து மூன்றாவது நாளாக காற்று மாசு அதிகரித்து காணப்படுகிறது.

நாடு முழுவதும் நேற்று (நவ.12) தீபாவளி பண்டிகையானது வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. தமிழ்நாட்டில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பட்டாசுகள் வெடிக்க நேரக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. உச்சநீதிமன்றத்தின் உத்தரவின்படி காலை 6 மணி முதல் 7 மணி வரையிலும், இரவு 7 மணி முதல் 8 மணி வரையிலும் பட்டாசு வெடிக்க தமிழ்நாடு அரசு அனுமதி அளித்தது. இருப்பினும் அதை பொருட்படுத்தாமல் பொதுமக்கள் கடந்த 2 நாட்களாகவே பட்டாசுகளை வெடித்து வருகின்றனர். இதன் காரணமாக சென்னையில் காற்றின் தரம் வெகுவாக குறைந்து வந்தது. இந்நிலையில் நேற்று மாலை 7 மணி முதல் 8 மணி வரை அதிகப்படியான மக்கள் பட்டாசுகளை ஒரே நேரத்தில் வெடித்து தீபாவளி பண்டிகையை கொண்டாடினர். இதனால் சென்னையில் காற்றின் தரம் மிகவும் குறைந்து பதிவானது.

சென்னையில் பல்வேறு இடங்களில் காற்று தரக் குறியீடு 100 முதல் 316 வரை பதிவாகி உள்ளது. மத்திய சுற்றுச்சுழல் அமைச்சகம் வெளியிட்டுள்ள தேசிய காற்று தரக் குறியீடு அளவின்படி, காற்றின் மாசு அளவு 0 – 50 வரை நல்ல சுகாதாரமான காற்று என்றும், 51 – 100 வரை இயல்பான மாசு கொண்ட காற்றாகவும், 101 – 200 வரை மிதமான மாசுக் காற்றாகவும், 201 – 300 வரை அதிக மாசுக் காற்றாகவும், 301 – 400 வரை மிக அதிக மாசடைந்த காற்றாகவும் மற்றும் 401-500 வரை அபாயகரமான மாசுக்காற்று எனவும் வகைப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த சூழலில், சென்னை அரும்பாக்கம், ஆலந்தூர், ராயபுரம் உள்ளிட்ட பகுதிகளில் காற்று மாசு அதிகரித்து மோசமான நிலையை அடைந்துள்ளது. அதிகபட்சமாக மணலி மற்றும் வேளச்சேரி பகுதியில் காற்று தரக் குறியீடு 300 க்கு மேல் பதிவாகி மிக மோசமான நிலையை அடைந்துள்ளது. அரும்பாக்கத்தில் – 260, ராயபுரத்தில் – 227, கொடுங்கையூரில் – 129, மணலியில் – 316, ஆலந்தூரில் – 254, வேளச்சேரியில் – 301 என காற்றின் தரம் பதிவாகியுள்ளது. இதேபோல், திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் – 241, வேலூரில் – 230, கடலூரில் – 213, புதுச்சேரியில் – 238 என்ற அளவில் காற்றின் தரம் குறைந்து பதிவாகியுள்ளது.

இதன் காரணமாக, காற்று தரக் குறியீடு 200 முதல் 300 வரை உள்ள பகுதிகளில் வசிக்கும் மக்கள், நீண்ட நேரம் வெளியில் இருந்தால் மூச்சுத் திணறல் ஏற்படலாம் மற்றும் இதய நோய் உள்ளவர்களுக்கு அசௌகரியம் ஏற்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. காற்று தரக் குறியீடு 300 முதல் 400 வரை உள்ள பகுதியில் வசிக்கும் மக்களுக்கு சுவாச நோய் ஏற்படலாம் எனவும், நுரையீரல் மற்றும் இதய நோய்கள் உள்ளவர்களிடம் இதன் தாக்கம் அதிகமாக இருக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.