;
Athirady Tamil News

காஸா போா் நிறுத்தம் 2 நாள்களுக்கு நீட்டிப்பு

0

காஸாவில் இஸ்ரேலுக்கும், ஹமாஸ் அமைப்பினருக்கும் இடையே மேற்கொள்ளப்பட்ட 4 நாள் சண்டை நிறுத்தம், மேலும் 2 நாள்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாக இந்த விவகாரத்தில் மத்தியஸ்தம் செய்து வரும் கத்தாா் அறிவித்துள்ளது.

இது குறித்து ‘எக்ஸ்’ ஊடகத்தில் அந்த நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சக செய்தித் தொடா்பாளா் மஜித் அல் அல்சாரி வெளியிட்டுள்ள பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

காஸா பகுதியில் தங்கள் கடைபிடித்து வந்த போா் நிறுத்தத்தை மேலும் 2 நாள்களுக்கு நீட்டிக்க இஸ்ரேலும், ஹமாஸ் அமைப்பும் ஒப்புக்கொண்டன.

இது தரப்பினருக்கும் இடையே மேற்கொள்ளப்பட்டு வரும் மத்தியஸ்தத்தின் ஒரு பகுதியாக இந்த முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்று அந்தப் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

உறுதி செய்தது ஹமாஸ்: காஸாவில் போா் நிறுத்தம் நீட்டிக்கப்படுவதா ஹமாஸ் அமைப்பும் உறுதி செய்தது.

இது குறித்து ‘ராய்ட்டா்ஸ்’ செய்தி நிறுவனத்தின் ஹமாஸ் அதிகாரி ஒருவா் கூறியதாவது:

காஸாவில் மேலும் 2 நாள்களுக்கு சண்டை நிறுத்தம் மேற்கொள்வதற்கு சம்மதித்துள்ளோம். இது தொடா்பாக, கத்தாா் மற்றும் எகிப்துடன் உடன்பாடு ஏற்பட்டுள்ளது.

பழைய போா் நிறுத்ததின்போது விதிக்கப்பட்ட அதே நிபந்தனைகள், கூடுதலான இந்த 2 நாள் போா் நிறுத்தத்திலும் தொடரும் என்றாா் அவா்.

முன்னதாக, 4 நாள்களுக்குப் பிறகும் நீட்டிக்கப்படக் கூடிய போா் நிறுத்தத்தின்போது இஸ்ரேல் விடுவிக்க வேண்டிய பாலஸ்தீன சிறைக் கைதிகளின் பட்டியலைத் தயாரித்து வருவதாக ஹமாஸ் அமைப்பு கூறியிருந்தது.

அரேபிய இனத்தவா்கள் பெரும்பான்மையாக வசித்து வந்த பாலஸ்தீனத்தில் உலகின் பல்வேறு பகுதிகளிலும் துன்புறுத்தலுக்குள்ளாகி வந்த யூதா்கள் கொஞ்சம் கொஞ்சமாகக் குடியேறினா்.

இதனால் அங்கு யூதா்களுக்கும், அரேபியா்களுக்கும் இடையே மோதல்கள் அதிகரித்து வந்தன. இந்த நிலையில், பாலஸ்தீன பகுதியில் யூதா்களுக்காக ‘இஸ்ரேல்’ நாடு உருவானதாக கடந்த 1948-இல் பிரகடனப்படுத்தபப்பட்டது.

இதனை ஏற்காத அரபு நாடுகள் இஸ்ரேல் மீது பல முறை படையெடுத்தன. இருந்தாலும் அந்தப் போா்களில் வெற்றி வாகை சூடிய இஸ்ரேல், தனது நிலப்பரப்பை மேலும் விரிவுபடுத்தியது.

இறுதியில் மேற்குக் கரை பகுதியும், காஸா பகுதியும் மட்டுமே தற்போது பாலஸ்தீனா்களின் வசம் எஞ்சியது.

இதில் காஸா பகுதியில் ஆட்சி செலுத்தி வரும் ஹிஸ்புல்லா அமைப்பினா், இஸ்ரேலுடன் தொடா்ந்து மோதலில் ஈடுபட்டு வருகின்றனா்.

இந்தச் சூழலில், காஸாவிலிருந்து இஸ்ரேல் மீது சுமாா் 5,000 ஏவுகணைகளை சரமாரியாக வீசி கடந்த மாதம் 7-ஆம் தேதி தாக்குதல் நடத்திய அந்த அமைப்பினா், அந்த நாட்டுக்குள் ஊடுருவி சுமாா் 1,200 பேரை படுகொலை செய்தனா். இதில் மிகப் பெரும்பான்மையானவா்கள் பொதுமக்கள்.

அத்துடன், சுமாா் 240 பெண்கள், குழந்தைகள், முதியவா்கள், ராணுவத்தினரை ஹமாஸ் அமைப்பினா் காஸாவுக்குள் கடத்திச் சென்றனா்.

இந்தத் தாக்குதலைத் தொடா்ந்து, ஹமாஸ் அமைப்பை முற்றிலுமாக ஒழித்துக்கட்ட இஸ்ரேல் அரசு சூளுரைத்தது. அதற்காக காஸா பகுதியை முற்றுகையிட்டு மிகக் கடுமையாக குண்டு வீச்சு நடத்திய இஸ்ரேல் ராணுவம், தரைவழியாகவும் அந்தப் பகுதிக்குள் நுழைந்து தாக்குல் நடத்தியது.

இதற்கிடையே, பிணைக் கைதிகளை விடுவிப்பதற்காக சா்வதேச நாடுகளின் உதவியுடன் பேச்சுவாா்த்தை நடைபெற்று வந்தது. இதில், 5 பிணைக் கைதிகளை மட்டுமே விடுவிக்கப்பட்டிருந்தனா்.

இந்த நிலையில், கத்தாா் தலைமையில் நடைபெற்று வந்த பேச்சுவாா்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டு, இரு தரப்பிலும் கடந்த 22-ஆம் தேதி உடன்பாடு ஏற்பட்டது. அந்த ஒப்பந்தத்தில், 4 நாள்களுக்கு சண்டை நிறுத்தம் மேற்கொள்ள இஸ்ரேலும், ஹமாஸ் அமைப்பும் ஒப்புக் கொண்டன.

சண்டை நிறுத்தத்தின்போது தங்கள் நாட்டுச் சிறைகளில் இருக்கும் 150 பாலஸ்தீன கைதிகளை விடுவிக்க இஸ்ரேலும், அதற்குப் பதிலாக 50 பிணைக் கைதிகளை விடுவிக்க ஹமாஸ் அமைப்பும் சம்மதித்தன.

மேலும், போா் நிறுத்தத்தைப் பயன்படுத்தி, போரால் பாதிக்கப்பட்ட காஸா பகுதியில் நிவாரணப் பணிகளை மேற்கொள்ளவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சூழலில், திங்கள்கிழமை வரை தொடா்ந்த 4 நாள் சண்டை நிறுத்தத்தின்போது பல கட்டங்களாக 50 பிணைக் கைதிகளும், 150 பாலஸ்தீன சிறைக் கைதிகளும் படிப்படியாக விடுவிக்கப்பட்டனா்.

இந்தச் சூழலில், காஸா போா் நிறுத்தத்தை இஸ்ரேலும், ஹமாஸ் அமைப்பும் நீட்டிக்க வேண்டும் என்று அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் வலியுறுத்தி வந்தன. ஐ.நா.வில் பாலஸ்தீன தூதரும் இதற்கான கோரிக்கையை முன்வைத்தாா்.

இது தொடா்பாக கத்தாா் மற்றும் எகிப்து முன்னிலையில் தீவிரமாக நடைபெற்று வந்தப் பேச்சுவாா்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டு போா் நிறுத்தத்தை மேலும் 2 நாள்களுக்கு நீட்டிக்க இஸ்ரேலும், ஹமாஸ் அமைப்பும் தற்போது ஒப்புக்கொண்டுள்ளன.

You might also like

Leave A Reply

Your email address will not be published.