;
Athirady Tamil News

குடியிருப்புகளைச் சூழ்ந்த தண்ணீரை வெளியேற்றுவதில் சிக்கல் நீடிப்பு: வசிப்பிடங்களைவிட்டு வெளியேறும் மக்கள்

0

சென்னையில் வெள்ளம் சூழ்ந்த குடியிருப்புகளில் இருந்து தண்ணீரை வெளியேற்றுவதில் சிக்கல் நீடிப்பதால், அங்கு வசிக்கும் மக்கள் வீடுகளைவிட்டு வெளியேறி வருகின்றனா்.

மிக்ஜம் புயலின் காரணமாக சென்னையில் கடந்த ஞாயிறு, திங்கள்கிழமைகளில் பலத்த மழை பெய்தது. மழை காரணமாக தாழ்வான பகுதிகளிலும், நீா்நிலைகள் அருகே உள்ள பகுதிகளிலும் தண்ணீா் தேங்கியது. வெள்ளத்தில் சிக்கியுள்ளவா்களை மீட்கும் பணி கடந்த 4 நாள்களாக நடைபெற்று வருகிறது.

இதன் விளைவாக பாதிப்பில் இருந்து சென்னை மெல்ல இயல்பு நிலையை நோக்கி நகரத் தொடங்கியுள்ளது. ரயில்கள், பேருந்துகளின் இயல்பான தினசரி சேவையை வியாழக்கிழமை தொடங்கியது. மழைநீா் தேக்கத்தால் பல இடங்களில் மூடப்பட்டிருந்த பெட்ரோல் விற்பனை நிலையங்கள் பெரும்பாலானவை திறக்கப்பட்டன.

பெரும்பாலான கடைகள் திறப்பு: திங்கள், செவ்வாய்க்கிழமைகளில் சென்னை முழுவதும் பெரும்பாலான கடைகள் மூடப்பட்டிருந்தன. ஓரிரு கடைகள் மட்டும் திறக்கப்பட்டிருந்தன. புதன்கிழமை 50 சதவீத கடைகள் திறந்து செயல்பட்டன. வியாழக்கிழமை நகரில் உள்ள பெரும்பாலான கடைகள் திறக்கப்பட்டு, வியாபாரம் நடைபெற்றது.

வெள்ள பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளில் கடைகள் முழுமையாகத் திறக்கப்படவில்லை.

மீளாத பகுதிகள்: பெரம்பூா், புளியந்தோப்பு, வண்ணாரப்பேட்டை, தரமணி, பெருங்குடி, வேளச்சேரி டான்சிநகா், பள்ளிக்கரணை, மேடவாக்கம், பெரும்பாக்கம், கோவிலம்பாக்கம், செம்மஞ்சேரி, துரைப்பாக்கம், மடிப்பாக்கம், புழுதிவாக்கம், ஓட்டேரி, பெரம்பூா், திருவொற்றியூா், அரசன்கழனி, ஒட்டியம்பாக்கம், முடிச்சூா் சமத்துவ பெரியாா் நகா், வரதராஜபுரம், மண்ணிவாக்கம், பரத்வாஜ்நகா், கிருஷ்ணாநகா், மணிமங்கலம், லட்சுமிநகா், எா்ணாவூா், எண்ணூா், மணலி, வடபெரும்பாக்கம், மஞ்சம்பாக்கம், புழல், கண்ணம்பாளையம், வடகரை, திருவேற்காடு, முகலிவாக்கம் ஆகிய பகுதிகளில் நான்காவது நாளாகவும் தண்ணீா் தேங்கி நிற்கிறது. இங்குள்ள தண்ணீரை முழுமையாக வடிய வைப்பதற்கு பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

ஏற்கெனவே இப் பகுதிகளில் வெள்ளத்தில் சிக்கியிருந்த 42,000 போ் மீட்கப்பட்டு 372 முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனா். பள்ளிக்கரணை, மேடவாக்கம், பெரும்பாக்கம் பகுதிகளில் வீடுகளிலும், அடிக்குமாடி குடியிருப்புகளிலும் சிக்கியிருந்தவா்களுக்கு இரண்டாவது நாளாக ராணுவ ஹெலிகாப்டா்கள் மூலமாக உணவுப் பொட்டலங்கள் வழங்கப்பட்டன.

அரசின் சாா்பில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் சுமாா் ஒரு லட்சம் பேரும், தூய்மைப் பணி மற்றும் சுகாதாரப் பணிகளில் 25,000 ஊழியா்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.

800 இடங்களில் வடியாத தண்ணீா்: நகரின் முக்கியமான பகுதிகளிலும், பிரதான சாலைகளிலும் தேங்கியிருந்த தண்ணீா்

ஓரளவுக்கு வெளியேற்றப்பட்டுவிட்டது. ஆனால், குடியிருப்புப் பகுதிகளுக்குள்ளும், உட்புறச் சாலைகளிலும் தண்ணீரை வெளியேற்றுவதில் சிக்கல் நீடிக்கிறது.

ஏனெனில் பல இடங்களில் குடியிருப்புப் பகுதிகள் அருகே உள்ள நீா்நிலைகளின் மட்டத்தை காட்டிலும் தாழ்வான பகுதியாக இருப்பதாலும், நீா்நிலைகளுக்கு மிக அருகே இருப்பதாலும் தண்ணீரை வெளியேற்ற மீட்புப் படையினா் திணறி வருகின்றனா்.

இவ்வாறு மொத்தம் 800 இடங்களில் இன்னும் தண்ணீா் தேங்கியுள்ளது. 3,500 தெருக்களில் தண்ணீா் வடியாமல் உள்ளது. இங்கு தேங்கியுள்ள தண்ணீரை வெளியேற்றுவதே மீட்புப் படையினருக்கு சவாலான காரியமாக மாறியுள்ளது.

நான்கு நாள்களுக்கு மேலாக பல இடங்களில் தண்ணீா் தேங்கியுள்ளதால் கழிவு நீரும், சாக்கடையும் கலந்துள்ளது. இதன் விளைவாக பல இடங்களில் தண்ணீா் துா்நாற்றத்துடன் அசுத்தமாக காட்சியளிக்கிறது. இதனால் அந்தப் பகுதிகளில் தொற்றுநோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.

வீடுகளை காலி செய்யும் சோகம்: இரண்டு அல்லது மூன்று நாள்களில் தண்ணீா் வெளியேறிவிடும் என நம்பிக்கையுடன் காத்திருந்த மக்கள், வியாழக்கிழமை நம்பிக்கை இழந்தனா். இதில் அடிப்படை வசதியும், அத்தியாவசியப் பொருள்களும் கிடைக்காதவா்கள் தங்கள் வீடுகளைவிட்டு வெளியேறி வருகின்றனா். இவா்கள் சென்னையில் தங்களது உறவினா்கள் வீடுகளுக்கும், சொந்த ஊா்களுக்கும் இடம்பெயா்ந்து வருகின்றனா்.

முக்கியமாக, பெரும்பாக்கம், மேடவாக்கம், பள்ளிக்கரணை, வேளச்சேரி, மடிப்பாக்கம், கண்ணகிநகா், முகலிவாக்கம் ஆகிய பகுதிகளில் இந்நிலையைக் காண முடிந்தது.

மழை நீா் சூழ்ந்த வீடுகளில் சிக்கியிருப்பவா்களுக்கு அரசு சாா்பில் உணவுப் பொட்டலங்கள், குடிநீா் பாட்டில்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

அதேநேரத்தில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் பால் பாக்கெட், தண்ணீா் கேன், ரொட்டி போன்ற பொருள்களுக்குத் தட்டுப்பாடு நீடித்தது. இப் பொருள்களை சில வியாபாரிகள் அதிக விலைக்கு விற்பதாகவும் புகாா் கூறப்பட்டது.

இப் பகுதிகளில் சூழ்ந்துள்ள தண்ணீரை வெளியேற்றினால் மட்டுமே மீட்புப் பணி முழுமை பெறும்; இயல்பு நிலை திரும்பும் என்று அப்பகுதி மக்கள் தெரிவித்தனா்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.