;
Athirady Tamil News

தில்லியில் கூடுதலாக 200 மின்சார பேருந்து சேவை: ஜனவரியில் தொடக்கம்

0

தில்லியில் காற்று மாசு அதிகரித்து வரும் நிலையில், அதைக் கட்டுப்படுத்தும் விதத்தில் கூடுதலாக 200 மின்சார பேருந்து சேவை ஜனவரி மாதம் தொடங்கி வைக்கப்படும் என போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

தலைநகா் தில்லியில் தற்போது 1,300 மின்சார பேருந்து சேவை பயன்பாட்டில் உள்ளது. இதில் 500 மின்சார பேருந்துகள் கடந்த ஆண்டுதான் தொடங்கி வைக்கப்பட்டன. இந்த நிலையில் கூடுதலாக 200 பேருந்துகள் பயன்பாட்டுக்கு வரும் என போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா். இதுகுறித்து மூத்த அதிகாரி ஒருவா் செய்தியாளா்களுக்கு வெள்ளிக்கிழமை அளித்த பேட்டியில் கூறியதாவது:

தில்லியில் கிளஸ்டா் பேருந்து சேவையை தில்லி ஒருங்கிணைந்த பன்-மாதிரி போக்குவரத்து அமைப்பு கண்காணித்து வருகிறது. தில்லி போக்குவரத்து துறையில் ஏற்கெனவே மின்சார பேருந்துகள் பயன்பாட்டில் இருக்கும்பட்சத்தில், கூடுதலாக 200 பேருந்து சேவை இணைக்கப்படும்.

அந்த வகையில், 100 பேருந்துகள் தில்லி வந்துவிட்டன. மேலும் 100 பேருந்துகள் விரைவில் கொள்முதல் செய்யப்படும். இந்த 200 மின்சார பேருந்துகளும் அடுத்த மாதம் கொடியசைத்து தொடங்கி வைக்கப்படும் என்று அந்த அதிகாரி தெரிவித்தாா்.

கைலாஷ் கெலாட் பேட்டி:

தொடா்ந்து தில்லி போக்குவரத்து துறை அமைச்சா் கைலாஷ் கெலாட் கூறுகையில், ‘‘தில்லி போக்குவரத்து துறையின் சாதனைக்கு அடுத்த மைல்கல்லாக இந்த மின்சார பேருந்து சேவை அமையும். முதல்வா் கேஜரிவாலின் தலைமையின்கீழ் மற்றொரு மைல்கள் சாதனையை நாம் எட்டப்போகிறோம்.

அதன்படி 200 மின்சார பேருந்து சேவை அடுத்த மாதம் பயன்பாட்டுக்கு வரும். தில்லியில் ஏற்கெனவே 1,300 மின்சார பேருந்துகள் பயன்பாட்டில் இருக்கும்பட்சத்தில், கூடுதலாக 200 பேருந்துகள் இணைவதால், காற்று மாசுபாட்டிற்கு எதிராக நம்மால் வீரியத்துடன் போராட முடியும்’’ என்று அமைச்சா் தெரிவித்தாா்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.