;
Athirady Tamil News

40 ஆயிரம் ரூபாவால் அதிகரிக்கும் குடும்பம் ஒன்றின் மொத்த செலவு : வழங்கப்பட்டுள்ள விளக்கம்

0

டிசம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில் ஜனவரி மாதத்தில் குடும்பமொன்றின் மாதாந்த செலவு 40,000 ரூபாவால் அதிகரிக்காது என இலங்கை மத்திய வங்கியின் பொருளாதார ஆய்வுத் திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளர் ஜனக எதிரிசிங்க தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ஊடக அமையத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

மத்திய வங்கியின் முதன்மையான நோக்கம்
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

உள்நாட்டு விலை ஸ்திரத்தன்மையை பேணுவதே இலங்கை மத்திய வங்கியின் முதன்மையான நோக்கமாகும். இதன்படி, புதிய மத்திய வங்கிச் சட்டத்தின் மூலம், நாட்டின் பணவீக்கம் காலாண்டு அடிப்படையில் 3-7% வீதத்தில் பேணப்பட வேண்டுமென இலங்கை மத்திய வங்கியும் அரசாங்கமும் இணைந்து வர்த்தமானி மூலம் அறிவித்துள்ளன.

பணவீக்கத்தை 5% ஆக வைத்திருப்பதே எமது இலக்கு ஆகும். வரி திருத்தமும் பணவீக்கத்தில் தாக்கம் செலுத்துகின்றது. பாதிக்கிறது. நவம்பர் மாதத்தில் பணவீக்கம் 3.4% ஆக பதிவாகியுள்ளது.

ஒரு குடும்பம் பொதுவாக 4 உறுப்பினர்களைக் கொண்டதாகக் கருதப்படுகிறது. சனத்தொகை மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தின் படி, கடந்த நவம்பரில் ஒரு குடும்பத்தின் சராசரி மாதச் செலவு 177,687.44 ஆக பதிவாகியுள்ளது. அதன்படி, ஒரு சராசரி குடும்பத்தின் மொத்த செலவு 40,000 ரூபாவால் அதிகரிக்க முடியாது என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

மக்களுக்கு நிவாரணம்
இருப்பினும் மத்திய வங்கியினால் எதிர்வுகூறப்பட்டிருந்த விதம், வரி திருத்தத்திற்கு முன்னரான பணவீக்கம் தொடர்பிலான எதிர்வுகூறல்கள் மற்றும் வரி திருத்தம் தொடர்பில் கருத்துக்கள் கூறப்பட்டதன் பின்னரான எதிர்வுகூறல்களுக்கு இடையிலான வேறுபாடுகளை பார்க்கும் போது விலை அதிகரிப்புக்கு ஏற்ப எந்த அளவு பணவீக்கம் அதிகரிக்கும் என்பதையும் புரிந்துகொள்ள முடியும்.

இந்த வரி திருத்தத்தின் நேரடியான மற்றும் மறைமுகமான 2-3% வரையில் பணவீக்கம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது. இருப்பினும் பெறுமதிசேர் வரிக்கு உட்பட்ட பொருட்கள் மற்றும் சேவைகள் மீது விதிக்கப்பட்டுள்ள ஏனைய வரிகளை நீக்கி சரியான வரிவிதிப்பை மேற்கொண்டு மக்களுக்கு நிவாரணம் வழங்க அவசியமான செயற்பாடுகளை முன்னெடுத்து வருவதாக நிதி அமைச்சும், உள்நாட்டு இறைவரித் திணைக்களமும் அறிவித்துள்ளன.

அதனால் தற்போது எதிர்வுகூறப்பட்டுள்ள விகிதம் மேலும் குறைவடைவதற்கான சாத்தியங்கள் உள்ளன. முழுமையாக பார்க்கும் போது டிசம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில் ஜனவரி மாதத்தில் குடும்பமொன்றின் மாதாந்த செலவு 40,000 ரூபாவால் அதிகரிக்க முடியாது. அவ்வாறான கருத்துகள் தொடர்பில் கவலை தெரிவிக்கிறோம் என குறிப்பிட்டுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.