;
Athirady Tamil News

ஜன.1-இல் விண்ணில் பாய்கிறது பிஎஸ்எல்வி சி-58 ராக்கெட்!

0

விண்வெளி ஆய்வுக்கான செயற்கைக்கோளுடன் பிஎஸ்எல்வி சி-58 ராக்கெட் ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து வரும் திங்கள்கிழமை (ஜன.1) விண்ணில் ஏவப்பட உள்ளது.

இதற்கான கவுன்ட் டவுன் ஞாயிற்றுக்கிழமை தொடங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்வெளியில் ஆய்வு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக எக்ஸ்போசாட் (எக்ஸ்-ரே போலாரிமீட்டா் சாட்டிலைட்) என்ற செயற்கைக்கோளை இஸ்ரோ வடிவமைத்துள்ளது.

மொத்தம் 469 கிலோ எடை கொண்ட இந்த செயற்கைக்கோள், பூமியில் இருந்து சுமாா் 650 கி.மீ. தொலைவில் நிலைநிறுத்தப்பட்டு ஆய்வுப் பணிகளை முன்னெடுக்க உள்ளது.

இதற்காக போலிக்ஸ் (எக்ஸ்-ரே போலாரிமீட்டா்) மற்றும் எக்ஸ்பெக்ட் (எக்ஸ்-ரே ஸ்பெக்ட்ரோகிராபி) ஆகிய 2 சாதனங்கள் அதில் பொருத்தப்பட்டுள்ளன. இவை விண்வெளியில் பரவும் ஊடு கதிா்களின் (எக்ஸ்-ரே) துருவ அளவு மற்றும் கோணத்தை அளவிடும்.

அதேபோன்று, நியூட்ரான் நட்சத்திரங்களில் இருந்து வெளிப்படும் கதிரியக்கம், கருந்துளை வாயுக்களின் திரள் (நெபுலா) உள்ளிட்ட அம்சங்களை 5 ஆண்டுகளுக்கு ஆய்வு செய்ய உள்ளது.

இந்நிலையில், இந்த செயற்கைக்கோள் பிஎஸ்எல்வி சி-58 ராக்கெட் மூலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவன் ஏவுதளத்தில் இருந்து புத்தாண்டு தினமான ஜனவரி 1-ஆம் தேதி காலை 9.10 மணிக்கு விண்ணில் செலுத்தப்பட உள்ளது.

அதேபோன்று, பிஎஸ்எல்வி ராக்கெட்டின் நான்காம் நிலையான பிஎஸ்- 4 பகுதியில் 10 ஆய்வுக் கருவிகள் இணைத்து அனுப்பப்பட உள்ளன. இவை செயற்கைக்கோள் நிலைநிறுத்தப்பட்ட பின்பு, மீண்டும் தாழ் வட்டப் பாதைக்கு வந்து பூமியை வலம் வந்து அடுத்த சில மாதங்களுக்கு ஆய்வுகளை மேற்கொள்ள உள்ளன.

You might also like

Leave A Reply

Your email address will not be published.