;
Athirady Tamil News

கல் உடைப்பு ஆலைகளால் மாசுபாடு: அறிவியல்பூா்வ ஆய்வுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

0

கல் உடைப்பு ஆலைகளால் ஏற்படும் மாசுபாடு குறித்து அறிவியல்பூா்வ ஆய்வை நடத்தி, அறிக்கை தாக்கல் செய்யுமாறு மத்திய மாசுக் கட்டுப்பாடு வாரியத்துக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும், இந்த ஆலைகள் செயல்பாட்டுக்கு வருவதற்கு முன்பாகச் சுற்றுச்சூழல் அனுமதியைப் பெற வேண்டுமா என்பது குறித்து கருத்து தெரிவிக்குமாறு உச்சநீதிமன்றம் தனது உத்தரவில் தெரிவித்துள்ளது.

மேற்கு வங்கத்தின் அலிபுா்துவாரில் உள்ள ரைதாக்-2 நதிப்படுகையில் எவ்வித அனுமதியும் பெறாமல், கல் உடைப்பு ஆலைகள் செயல்பட்டு வருவதாக கொல்கத்தாவில் உள்ள தேசிய பசுமை தீா்ப்பாயத்தின் கிழக்கு மண்டல கிளையில் விப்லப் குமாா் செளதரி மனு தாக்கல் செய்திருந்தாா். அந்த ஆலைகளில் மேற்கொண்ட சோதனையில் சுற்றுச்சூழல் அனுமதி பெறாமல், ஆலையை அமைப்பதற்கான அனுமதி பெற்றிருந்ததும், அவற்றைப் புதுப்பிக்க விண்ணப்பித்திருந்ததும் தெரியவந்திருப்பதாகத் தன்னுடைய மனுவில் குறிப்பிட்டிருந்தாா்.

இந்த மனுவை விசாரித்த தீா்ப்பாயம், மாநில மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்திடம் அனுமதி பெறாமல் இந்த ஆலைகள் செயல்பட முடியாது என கடந்த ஆண்டு மே 1-இல் உத்தரவிட்டது. மேலும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடமிருந்து தடையில்லா சான்றிதழ் பெற வேண்டும் எனத் தெரிவித்திருந்தது.

தீா்ப்பாயத்தின் இந்த உத்தரவை எதிா்த்து மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு, நீதிபதிகள் சஞ்சீவ் கன்னா, தீபாங்கா் தத்தா ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது, நீதிபதிகள் அமா்வு, ‘கல் உடைப்பு ஆலைகளால் ஏற்படும் மாசுபாடு குறித்து அறிவியல்பூா்வ ஆய்வு நடத்தி, 8 வார காலத்துக்குள் மத்திய மாசுக் கட்டுப்பாடு வாரியம் அறிக்கை சமா்ப்பிக்க வேண்டும். சுற்றுச்சூழல் அனுமதி பெறுவற்காக சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு அறிவிக்கை 2006-இன் பட்டியலில் இந்த ஆலைகளைக் கொண்டு வர வேண்டுமா அல்லது வேண்டாமா என்பது குறித்து கருத்து தெரிவிக்க வேண்டும்’ என்றது.

சில தொழிற்சாலை திட்டங்களைத் தொடங்குவதற்கு முன்பாக சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு அறிவிக்கை 2006-இன் படி, சுற்றுச்சூழல் முன்அனுமதி அவசியம் என்பது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.