;
Athirady Tamil News

பாகிஸ்தான் தேர்தலில் முறைகேடுகள் : கவலை வெளியிட்டுள்ள உலக நாடுகள்

0

பாகிஸ்தானில் நடைபெற்ற பொதுத் தேர்தலில் முறைகேடுகள் மேற்கொள்ளப்படுவதாக குற்றஞ்சாட்டப்பட்ட நிலையில், இது தொடர்பில் அமெரிக்கா மற்றும் பிரித்தானியா ஆகிய நாடுகளும் ஐரோப்பிய ஒன்றியமும் கவலை வெளியிட்டுள்ளன.

அத்துடன், தேர்தல் நடவடிக்கைகள் குறித்து விரிவான விசாரணைகளை ஆரம்பிக்குமாறும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

தேர்தல்
பாகிஸ்தானில் கடந்த 7 ஆம் திகதி இடம்பெற்ற தேர்தலின் வாக்கெண்ணும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.

இதில் பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் கட்சிக்கும், முன்னாள் பிரதமர் இம்ரான் கான் ஆதரவு பெற்ற வேட்பாளர்களுக்கும் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.

இந்த தேர்தலின் முடிவுகள் தொகுதிவாரியாக வெளியாகும் நிலையில், தற்போது சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் பீ.டி.ஐ. கட்சி 50க்கும் மேற்பட்ட தேர்தல் தொகுதிகளில் வெற்றி பெற்று முன்னணியில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கட்சியின் வெற்றி
இதையடுத்து, தனது கட்சியின் வெற்றியை கொண்டாடுமாறு இம்ரான் கான் தனது ஆதரவாளர்களுக்கு கூறியுள்ளார்.

பாகிஸ்தானின் முன்னாள் பிரதமருக்கு ஆதரவளித்து தேர்தலில் போட்டியிட்ட சுயேட்சை வேட்பாளர்கள் இதுவரை அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளதையடுத்தே, அவர் இதனை கூறியுள்ளார்.

முறைகேடுகள்
இதேவேளை, வாக்கு எண்ணும் பணிகளில் முறைகேடுகள் பதிவாகியுள்ளதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளதாக அமெரிக்கா, பிரித்தானியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகியன தெரிவித்துள்ளன.

இந்த தேர்தல் காரணமாக மக்களின் ஒன்று கூடுவதற்கான சுதந்திரமும் கருத்து சுதந்திரமும் முடக்கப்பட்டதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்த நிலையில், குறித்த முறைகேடுகள் தொடர்பான உரிய விசாரணைகள் முன்னெடுக்கப்படும் வரை இறுதி தேர்தல் முடிவுகளை அறிவிக்க வேண்டாமென அமெரிக்கா கோரியுள்ளது.

மேலும், பாகிஸ்தானின் பொதுத் தேர்தலில் போட்டியிட்ட அனைத்து கட்சிகளுக்கும் பிரித்தானியா, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவை வாழ்த்து தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.