;
Athirady Tamil News

பாதுகாப்பு தரப்பினரிடம் உள்ள மக்களின் எஞ்சியுள்ள காணிளும் விடுவிக்கப்படும் – அமைச்சர் டக்ளஸ் நம்பிக்கை!

0

பாதுகாப்பு தரப்பினரிடம் உள்ள மக்களின் எஞ்சியுள்ள காணி நிலங்களும் அடுத்த சில மாதங்களுக்குள் விடுவிக்கப்படும் என நம்பிக்கை வெளியிட்ட கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, பாதுகாப்பு தரப்பினரிடம் மட்டுமல்லாது வன ஜீவராசிகள் மற்றும் வனவிலங்கு திணைக்களத்தின் கீழுள்ள காணிகளும் விரைவில் விடுவிக்கப்படும் என்றார்.

யாழ் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் உயர் பாதுகாப்பு வலயமாக பாதுகாப்பு தரப்பினரது கட்டுப்பாட்டில் இருந்த பொதுமக்களின் ஒரு தொகுதி காணி நிலங்கள் உரிமையாளர்களிடம் மீளவும் கையளிக்கும் நிகழ்வு இன்றையதினம் (10) யாழ் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.

இதன்போது உரையாற்றுகையிலேயே அமைச்சர் இவ்வாறு நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

அமைச்சர் மேலும் கூறுகையில் –
முப்படையினரும் மக்களுக்காகத்தான் சேவை செய்கின்றனர் என இங்கு உரையாற்றிய யாழ் மாவட்ட கட்டளை தளபதி தனது உரையில் குறிப்பிட்டிருந்தார்.
ஆனால் யுத்தம் நடைபெற்றுக்கொண்டிருந்த காலத்திலேயே எனது கருத்து இதுவாகத்தான் இருந்தது. அதாவது பாதுகாப்பு தரப்பினர் எமது மக்கள் படையாக மக்களுக்கான படையாக செயற்படுவர் என்றும் செயற்பட வேண்டும் என்ற கருத்தை நான் முன்வைத்திருந்திருக்கின்றேன்
இதேநேரத்தில் எமது மக்களது இன்னும் பல காணிகள் விடுவிக்கப்பட வேண்டியிருக்கின்றன. நிச்சயமாக அந்தக் காணிகளும் விடுவிக்கப்படும். அதாவது காணி விடுவிப்பு என்கின்றபோது முப்படை மற்றும் பொலிசார், வன ஜீவராசிகள் மற்றும் வனவிலங்கு திணைக்களத்தின் கீழுள்ள காணிகளும் விடுவிக்கப்பட வேண்டும்.

இதேநேரம் ஜனாதிபதி தெளிவாக கூறியிருக்கின்றார் 1985 ஆம் ஆண்டுக்கு முன்னர் இருந்தவாறு காணிகள் விடுவிக்கப்பட வேண்டும் என்று. அதனடிப்படையில் தற்போது நடவடிக்கைகள்’ முன்னெடுக்கப்பட்டுவருகின்றன. ஜனாதிபதி எடுக்கும் இந்த நடவடிக்கையில் முன்னேற்றங்களும் காணப்பட்டுள்ளன.
அதனடிப்படையில் எதிர்வரும் ஏப்ரல் மாதத்தின் இறுதிப்பகுதியில் அவ்வாறான காணிகள் விடுவிக்கப்படும் என்றும் நான் முழு நம்பிக்கையுடன் தெரிவித்துக்கொள்கின்றேன்.

இதேவேளை இங்கு கடற்படையினரும் இருக்கின்றனர் அதேபோன்று இந்திய இழுவைப் படகால் பாதிக்கப்படுகின்ற கடற்றொழில் அமைப்புகளின் பிரதிநிதிகளும் இருக்கின்றனர்.
நேற்றுக்கூட 3 இழுவைப் படகுகளுடன் 22 இந்திய மீனவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.இது போதாது என்றே நினைக்கின்றேன்.

ஏனெனில் இவர்கள் கடலுக்கு வந்து குறிப்பாக எமது கரையை அண்டிய பகுதிகளுக்கு வந்து எமது கடல் வளங்களை மட்டுமல்லாது எமது கடற்றொழிலாளர்களது கடற்றொழில் உபகரணங்களையும் நாசமாக்கி செல்கின்ற நிலை காணப்படுகின்றது.
இதனால் கடற்படையினர் இவ்வாறான செயற்பாடுகளை மேற்கொள்ளும் இந்திய மீனவர்களை கட்டப்படுத்த மேலும் இறுக்கமான நடவடிக்கையை எடுக்க வேண்டும் என அமைச்சு சார்பில் வலுயுறுத்தி கூறுவதுடன் அதை கடற்படையினர் மேற்கொள்வார்கள் என்று தான் நம்புவதாகவும் தெரிவித்தார்.
மேலும் கடற்றொழில் அமைப்புகளின் பிரதிநிதிகளை சற்று அமைதியாக இருக்குமாறு கேட்டுக்கொண்ட அமைச்சர், கடற்படையினர் இன்றுமுதல் குறித்த மீனவர்களை கட்டுப்படுத்துவார்கள் என்பதுடன் இவ்விடயம் இரு நாடுகளின் இராஜதந்திர நடவடிக்கைகளுடன் தொடர்புடையதால் இது தொடர்பில் ஜனாதிபதியும் எமது வெளிவிவகார அமைச்சினூடாக இந்திய தரப்பினருடன் பேச்சுக்களை மேற்கொண்டு வருகின்றார்.
விரைவான கலந்துரையாடலூடாக விரைவில் குறித்த பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படும் என்றும் தெரிவித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.